15 செப். - 14 நவ. 2015
லலித் கேட் விவகாரத்தில் பாராளுமன்றத்தின் மாரிக் காலக் கூட்டத்தொடர் முடங்கிக் கிடந்த வேளை; காங்கிரஸ் அவ்வாறு முடக்கியதை நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி கடுமையாகச் சாடுகிறார். காங்கிரஸின் உண்மையான நோக்கம் லலித் மோடி விவகாரம் அல்ல. மாறாக நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. மசோதாவை முடக்குவதே என்று முழங்குகிறார்.
தொலைக்காட்சிகளில் அருண் ஜெய்ட்லியின் இந்த முழக்கத்தைப்
பார்க்கும் போது 10 கட்டளைகள் என்ற பெயரில் வந்த ஆங்கிலத் திரைப்படம் நினைவிற்கு வருகிறது.
அதில் செங்கடலை கடந்த பின் யூத அடிமைகளை வழிநடத்தி வந்த மோசஸ் கடவுளிடம் சென்று புதிதாக
அவ்வடிமைகளைக் கொண்டு அவர் அமைக்கவிருந்த நாட்டிற்கான சட்ட திட்டங்களை வாங்கி வருவார்.
அவைதான் பத்துக் கட்டளைகள். மிகவும் சிரமப்பட்டு இடி,
மின்னல்கள் போல் வரும் இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு பத்துக் கட்டளைகள் அடங்கிய ஒரு பீடத்தை
அவர் கையில் கொண்டுவர அவரால் விடுவிக்கப்பட்ட மக்களோ தங்களிடமிருந்த தங்க ஆபரணங்களை
உருக்கி பசுங்கன்று ஒன்றின் சிலையை உருவாக்கி அதை வைத்து காட்டுத் தனமான முறையில் ஆடிப்பாடி
வழிபட்டுக் கொண்டிருப்பார்கள்.
அதைக் கண்டவுடன் மோசஸ் தாங்க முடியாத சினத்தில் வெகுண்டெழுவார்.
அரசியல் சட்டம் இல்லாத நாடு என்பது இருக்க முடியாது. ஒழுக்கம் இல்லாத சமூகம் என்பது
இருக்க முடியாது என்று கூறி அந்த பத்துக் கட்டளைகள் அடங்கிய பீடத்தை அம்மக்கள் மீது
தூக்கியெறிவார். அவரைப் போல் அருண் ஜெய்ட்லி தன்னைக் காட்டிக் கொண்டார்.
அவ்வாறு அவர் கூறியதற்கு எதிர்ப்பல்ல ஒரு மேலோட்டமான
விமர்சனம் கூட எவரிடமிருந்தும் வரவில்லை. அக்காட்சியைக் கண்டவுடன் அது முன்வைக்கப்பட்ட
விதம் அருண் ஜெய்ட்லியின் ஆணித்தரமான பேச்சு அது குறித்து எதிர்ப்பு மட்டுமின்றி சிறு
விமர்சனம் கூட வராத நிலை இவையனைத்தும் சேர்ந்து உண்மையிலேயே ஜி.எஸ்.டி. மசோதா ஒரு மகா
சாசனமோ என்ற எண்ணம் அந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏற்பட்டது.
உண்மையிலேயே பி.ஜே.பி. தலைவர்கள் முன்வைக்கும் விதத்தில்
பிறகட்சித் தலைவர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்றுக் கொள்ளும் வகையில் ஜி.எஸ்.டி.
மசோதா ஒன்று 10 கட்டளைகள் போன்றதாக இருக்க வேண்டும், இல்லையெனில் அது மகா சாசனமாக இருக்க
வேண்டும் என்ற எண்ணமே அனைவருக்கும் ஏற்பட்டது.
ஜி.எஸ்.டி. என்பது உண்மையில் உற்பத்திப் பொருட்கள் மீதும்
சேவைகளின் மீதும் விதிக்கப்படும் வரிகள் குறித்தது. இப்போது வரை பொருட்களின் மீதான
வரிவிதிப்பு மத்திய மாநில அரசுகள் இரண்டினாலும் செய்யப்படுகின்றன. அதாவது உற்பத்தி
சார்ந்த வரி மத்திய அரசாலும் அவ்வாறு உற்பத்தியாகும் பொருட்கள் மீதான விற்பனை வரி மாநில
அரசுகளாலும் விதிக்கப்படுகிறது. அதைப் போல் சேவைகளுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மத்திய
அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
குழப்பமற்ற முறை
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அறிமுகம் குறித்து அரசுத்
தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட வாதம் குழப்பத்திற்கு இடமளிக்கும் பலமுனைத் தன்மை வாய்ந்த
வரிவிதிப்பைக் கைவிட்டு ஓரே முனையில் குழப்பம் இல்லாமல் வரி விதிக்க வழிவகை செய்வதே
இந்த மசோதா என்பதாகும். குழப்பம் இல்லாமல் இருப்பது மட்டுமின்றி இந்த வகை வரிவிதிப்பு
முறை வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பது அரசுத் தரப்பின் வாதமாகும்.
அரசுத் தரப்பு என்று நாம் ஒரு உள்பொருளோடு தான் இங்கு
கூறுகிறோம். அதாவது அரசாங்கத் தரப்பு என்று நாம் கூறவில்லை. ஏனெனில் இந்த மசோதா கொண்டு
வருவதை காங்கிரஸ் கட்சியும் வரவேற்கிறது. பி.ஜே.பி. கட்சியும் இதனை ஒரு சாதனை போல்
முன்வைக்கிறது.
இத்தகைய வரிவிதிப்பு முறை இங்கு வருவதற்கு முன்பு
உலக நாடுகள் பலவற்றிலும் ஏற்கனவே கொண்டுவரப்பட்டு விட்டது. அவ்வாறு கொண்டுவரப் பட்டதற்கான
காரணம் வரிச் சுமையிலிருந்து உற்பத்தியாளர்களையும் விற்பனையாளர்களையும் விடுவிப்பதாகும்.
அதாவது உடமை வர்க்கங்களுக்கு உதவுவதாகும்.
தருணம்
அதாவது உலகப் பொருளாதாரம் அத்தனை பிரகாசமானதாக இல்லாத
நிலையில் கடுமையான போட்டியை எதிர் கொள்ளும் விதத்தில் ஒவ்வொரு நாட்டின் உற்பத்தியாளர்களையும்
விற்பனையாளர்களையும் தயார் செய்யும் விதத்தில் கொண்டு வரப்பட்டதே இந்த வரிவிதிப்பு
முறை. ஆனால் பிற நாடுகளில் இருப்பதற்கும் இங்கு கொண்டுவரப் பட்டுள்ளதற்கும் ஒரு பெரிய
வேறுபாடு உள்ளது.
இரட்டை வரி
பிற நாடுகளில் ஒரே வரி விதிப்பு முறையே மத்திய மாநில
அரசுகள் என்ற பாகுபாடின்றி இம்முறையின் கீழ் அமல்படுத்தப் படுகிறது. ஆனால் இந்தியாவில்
இந்த முறையே இரண்டு வகைகயில் அமுலாக்கப்பட போகிறது. அதாவது சி.ஜி.எஸ்.டி., எஸ்.ஜி.எஸ்.டி.
என்ற இரண்டு வகை வரிவிதிப்பு முறைகளாக இது இருக்கப் போகிறது. அதாவது மத்திய விற்பனை
மற்றும் சேவை வரி மற்றும் மாநில விற்பனை மற்றும் சேவை வரி என்று இரண்டு விதங்களில்
இங்கு அமலாக்கப்பட போகிறது.
அதனால் தான் அரசியல் சட்டத் திருத்தம் இதனைக் கொண்டு
வருதற்குத் தேவைப்படுகிறது. ஏனெனில் மாநில அரசின் பட்டியலின் கீழ் அரசியல் சட்டப்படி
இருந்த விற்பனை வரி தற்போது மத்திய அரசின் கைக்குச் செல்கிறது. அதனால் அரசியல் சட்டத்
திருத்தம் அவசியமாகிறது.
இவ்வாறு இரு விதங்களிலான வரிவிதிப்பு முறையைக் கொண்டு
வருவதற்கான காரணம் மாநில அரசுகள் இதுவரை விற்பனை வரி வியத்தில் அனுபவித்து வந்த உரிமைகளை
இத்திட்டம் பாதிப்பிற்கு ஆளாக்கும் என்பதால் தான். முன்பு மாநிலங்களைச் சேர்ந்த உற்பத்தி
நிறுவனங்கள் அகில இந்திய அளவில் போட்டியிட வழிவகுக்க வேண்டும் என்பதற்காகவும் சில அத்தியாவசியப்
பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காகவும்
மாநில அரசுகள் அந்தந்த மாநிலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ற விதத்தில் நெளிவு சுளிவான வரிவிதிப்புக்
கொள்கையைக் கடைப்பிடிக்க முடியும்.
ஜி.எஸ்.டி. கவுன்சில்
இப்போது அதனைச் செய்ய முடியாது. அதனால் அவ்வப்போது
பல தாவாக்கள் எழும் சூழ்நிலைகள் உருவாகும். அத்தகைய தாவாக்களைத் தீர்த்து வைப்பதற்கு
ஒரு அமைப்பு ஒன்றினை இந்த வரிவிதிப்பு முறை பரிந்துரைக்கிறது. அதுதான் ஜி.எஸ்.டி. கவுன்சில்
ஆகும். அதன் தலைவராக மத்திய நிதி அமைச்சரும் உறுப்பினர்களாக மாநிலங்களின் நிதி அமைச்சர்களும்
இருப்பார்கள் என்று திருத்தப்படவிருக்கும் அரசியல் சட்டம் கூறுகிறது.
இதில் ஏராளாமான குழப்பங்கள் ஏற்படுவதற்கு வழிவகைகள்
உள்ளன. ஏனெனில் பல மாநில அரசுகள் பல இலவசத் திட்டங்களை மக்களுக்கென அறிவித்துள்ளன.
அவற்றைச் சாத்தியமாக்குவதற்கு உகந்த விதத்தில் விற்பனை வரி விதிப்பை சில பொருட்களுக்கு
அதிகரிக்கவும் மற்ற சில பொருட்களுக்கு குறைக்கவும் செய்து அதன்மூலம் கூடுதல் வருமானம்
ஈட்டி இந்த இலவசத் திட்டங்களுக்கு ஆகும் செலவை அந்த அரசுகள் ஈடுகட்ட முன்பு முயலலாம்.
அதனை இனிமேல் அத்தனை எளிதாகச் செய்ய முடியாது.
27 சதவிகித வரி
அதனால் தான் விற்பனை வரியை மத்திய அரசும் விதிக்கும்
மாநில அரசும் விதித்துக் கொள்ளலாம் என்றவாறு இரண்டுவகைச் சட்டங்களாக இந்த முறை அமலுக்கு
வருகிறது. அவ்வாறு வரும் போது ஏற்படும் வரிவிதிப்பு ஏறக்குறைய 27 சதவிகிதம் எனும் அளவிற்குக்
கூட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த வரிவிதிப்பு முறையின்
கீழ் ஒட்டுமொத்த வரியையும் பொருட்களை வாங்கி உபயோகிப்போர் தான் செலுத்த வேண்டியிருக்கும்.
சில பொருட்களுக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கலாம்
என்ற ரத்தையும் இந்த வரிவிதிப்பு முறை உள்ளடக்கி உள்ளது. ஆனால் இது கொண்டுவரப் படுவதன்
நோக்கம் கூடுதல் வருவாயை ஈட்டி அதன்மூலம் உற்பத்திப் பெருக்கத்திற்கு வழிவகுக்க வேண்டும்
என்பதாக இருப்பதால் நிறைய உற்பத்திப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படாது என்பதே
இத்திட்டத்தில் சொல்லப்படாத ஆனால் உறுதியாக அமல்படுத்தப்பட போகிற உண்மையாகும். வரி
கூடுதலாகத்தான் இருக்கும். எடுத்துக்காட்டு தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சேவை
வரியினை 14 சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளதாகும்.
மறைமுக வரியை ஒத்து
இந்த வரிவிதிப்பு முறை மறைமுக வரிவிதிப்பை ஒத்ததாகும்.
உற்பத்தியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் நேரடியாக இத்தனை சதவிகிதம் வரி என்று
வரி விதித்தால் அது அவ்விரு தரப்பினரும் நேரடியாகச் செலுத்த வேண்டிய வரியாக அவை ஆகிவிடும்.
எனவே அப்போது நேர்முக வரி விதிப்பு முறையின் கீழ் அவை வந்துவிடும். மாறாக பொருட்களை
வாங்குவோர் தான் வரியினை செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப் பட்டுள்ள இந்த
ஜி.எஸ்.டி. முறை வாங்குபவர் மீது அவர்கள் அறிவிற்கு எட்டாமலேயே பெரும் சுமையை ஏற்றி
வைக்கும்.
முன்பிருந்த வரிவிதிப்பு முறையில் வசதி படைத்தவர்
உபயோகிக்கும் பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிப்பு இருந்து வந்தது. ஏனெனில் வரிவிதிப்பு
உற்பத்தியாளர், விற்பனையாளர் மீதானதாக இருக்கும் போது அதனை நாம் எளிதில் தெரிந்து கொள்ள
முடியும். ஆனால் இந்த ஜி.எஸ்.டி. முறையில் பொருள் வாங்குபவர் தலைமீது அது சுமத்தப்
படுவதால் அதனை அத்தனை எளிதாகத் தெரிந்து கொள்ள முடியாது.
அருண் ஜெய்ட்லி அவர்கள் ஜி.எஸ்.டி. முறையின் கீழ்
வரிவிதிப்பு 27 சதவிகிதம் என்ற அளவிற்கு இராது என்று ஆறுதல் வார்த்தைகள் கூறுகிறார்.
ஆனால் மாநிலங்கள் அவற்றின் வருவாயையும் பெருக்கியாக வேண்டும் என்ற நிலையிலேயே இருக்கும்.
மத்திய அரசு வளர்ச்சிக்கு உறுதியாகத் துணை நிற்கும் ஒரு கருவி என்று அது தரித்துள்ள
புது அவதாரத்திற்கு உகந்த விதத்தில் தனியார் முதலாளிகளுக்கு மானியங்களை வாரி வழங்குவதற்காக
நிச்சயமாக அதன் வரி விகிதத்தையும் குறைக்க முன்வராது. எனவே அருண் ஜெய்ட்லி அவர்கள்
கூறும் விதத்தில் குறைவான வரிவிதிப்பு இதன்மூலம் வருவது அத்தனை சாத்தியமல்ல.
இந்தத் திட்டத்தை இந்தியாவும் உலகின் பிற முதலாளித்துவ
நாடுகளும் கொண்டு வந்திருப்பதற்குக் காரணம் அந்தந்த நாடுகளின் உற்பத்தியாளர்களின் உற்பத்தி
செலவினைக் குறைத்து எத்தகைய கடும் போட்டியையும் எதிர்கொள்ள வைப்பவர்களாக அவர்களை ஈக்குவதற்காகும்.
ஆனால் வாங்குபவர் மீது அனைத்து வரிச்சுமையும் என்பதைக் கொண்டு வருவதன் மூலம் அது அறிவிக்காமலேயே
சாதாரண மக்களின் வாங்கும் சக்தியை அதிகபட்சம் சூறையாடும் தன்மை வாய்ந்ததாக ஆகிவிடும்.
மேலும் ஒரு பகுதி மக்கள் பொருட்களே வாங்க முடியாத அளவிற்கு பொருட்களின் விலையேற்றம்
அதிகரிப்பதற்கும் இம்முறை வழிவகுக்கும். அத்தகைய விலையேற்றம் முக்கியமாக இந்த வரிவிதிப்பு
முறையின் மூலமாக ஏற்படும்.
மறைமுக வரிவிதிப்பு முறைக்கும் அதனை ஒத்ததாக இருக்கும்
இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறைக்கும் நேரடி வரிவிதிப்பு முறைக்கும் இடையில் உள்ள
வேறுபாடு மறைமுக வரிவிதிப்பு முறை அனைத்துப் பொருட்களின் விலை உயர்விற்கும் வழிவகுக்கும்
என்பதும் நேரடி வரிவிதிப்பு முறை வரிவிதிப்பிற்கு ஆளான பொருட்களின் விலை உயர்விற்கு
மட்டும் வழிவகுக்கும் என்பதுமாகும். எந்தெந்த நாடுகள் எல்லாம் மறைமுக வரிவிதிப்பு முறையின்
மூலம் அதிக வருவாயைத் திரட்டுகின்றனவோ அந்த நாடுகள் எல்லாம் அந்நாடுகளின் ஏழை எளிய
மக்களை வாட்டி வதைக்கின்றன என்பதே அதன் பொருளாகும்.
பல நாடுகளையும் தாண்டி
அந்த வகையில் அருண் ஜெய்ட்லி அவர்களோ நரேந்திர மோடி
அவர்களோ வெளிப்படையாக எடுத்துக் கூறாதா ஒரு மிகப்பெரிய தனித்தன்மையும் உயரமும் கிட்டியுள்ளது.
அதுதான் மறைமுக வரிவிதிப்பில் தென் ஆப்பிரிக்காவையும் இந்தோனே´யாவையும் தாண்டி யாரும்
எட்ட முடியாத உயரத்தில் நமது நாடு நின்று கொண்டுள்ளது என்பதாகும். அதாவது தென் ஆப்பிரிக்காவில்
2013‡ம் ஆண்டிற்கான நேரடி வரிவிதிப்பின் மூலம் வந்த வருமானம் 57.5 சதவிகிதம். இந்தோனே´யாவினுடையது
55.85 சதவிகிதமாகும். ஆனால் நமது நாட்டில் நேரடி வரிவிதிப்பின் மூலமாக அந்த ஆண்டில்
நாம் ஈட்டிய வருவாய் வெறும் 37.7 சதவிகிதமாகும்.
இவ்வாறு நம்மை வரிவிதிப்பின் மூலம் அவர்களைக் கொல்லாமல்
கொல்ல காத்திருக்கும் இந்த ஜி.எஸ்.டி. முறையை நமது ஏழை எளிய மக்கள் அபாயத்தை உணராது
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஊடகங்களின் இந்த ஜி.எஸ்.டி. முறைக்கு ஆதரவான
பிரச்சாரத்தைக் கேட்டு அதில் மதிமயங்கி நமது நாட்டின் அறிவு ஜீவிகளில் ஒருசிலர் இது
வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அதன் உள்ளடக்கத்தை உணராமல் வாதிடவும் செய்கின்றனர்.
இந்தச் சூழ்நிலை சமீபத்தில் கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் வரும்
ஒரு வசனத்தை நினைவுறுத்துவதாக உள்ளது. அதாவது வெட்டப்படப் போகும் ஆடு கசாப்புக் கடை
கட்டப் படுவதை வேடிக்கை பார்ப்பது போல் உள்ளது.
தொடர் தாக்குதல்கள்
மேலும் ஏற்கனவே திட்டக் கமின் கலைப்பின் மூலம் கூட்டாட்சி
தத்துவத்தின் மீது வந்த தாக்குதல் இந்த மசோதாவின் மூலம் இன்னும் அதிகரிக்கப் பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தற்போது ரிசர்வ் வங்கி நிர்வாகத்திலும் பல மாறுதல்கள் கொண்டுவரப் பட்டுள்ளன.
அவை ஏழை எளிய மக்களை இன்னும் கூடுதல் பாதிப்பிற்கு ஆளாக்கப் போகின்றன.
வளர்ச்சி, வளர்ச்சி என்ற பெயரில் வங்கிகளின் வட்டி
விகிதங்கள் பெரிதாகக் குறைக்கப் படுகின்றன. வட்டி விகிதங்களைக் குறைத்தால் முதலீட்டிற்கு
நிறைய பணம் கிடைக்கும். அந்த நிலையில் அந்த வசதியைப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் தொழில்கள்
தொடங்குவர். அதன் மூலமாக உற்பத்தி பெருகும் என்ற கதை உற்சாகமாகச் சொல்லப் படுகிறது.
உண்மையில் மூலதனம் இல்லாததால் உற்பத்தி அதிகரிக்காமல்
இல்லை. உற்பத்தியாகும் பொருட்களை விற்பதற்கு மிகவும் தேவையானது அவற்றை வாங்குவதற்கு
மக்களிடம் இருக்க வேண்டிய வாங்கும் சக்தியாகும். அது இல்லை என்றால் கூடை கூடையாக மூலதனத்தைக்
கொட்டிக் கொடுத்தாலும் அவற்றை வாங்கி உற்பத்தித் துறையில் ஈடுபடுத்த யாரும் முன்வர
மாட்டார்கள்.
அரசாங்கம் வலிய வந்து உருவாக்கித் தரும் இந்த வாய்ப்புகளை
பயன்படுத்தி கிட்டும் மூலதனத்தை சூதாட்டத் தன்மை வாய்ந்த தொழில்களில் வேண்டுமானால்
முதலாளிகள் முதலீடு செய்வர். அதன்மூலம் உற்பத்திப் பெருக்கம் ஏற்படாது. அதனால் பொருளாதார
அமைப்பின் நிலைத் தன்மை தான் ஆட்டம் காணும்.
பணவீக்கம்
மேலும் கடன்களுக்கு மட்டும் வட்டி விகிதத்தைக் குறைக்க
முடியாது. அவ்வாறு கடன்களுக்கு மட்டும் குறைத்து வைப்புத் திட்டங்களுக்கு வட்டியைக்
குறைக்காதிருந்தால் வங்கிகள் நலிவடைந்து போகும். அதனால் தான் வங்கிகள் வைப்புத் திட்டங்களுக்கான
வட்டி விகிதத்தையும் குறைக்கின்றன. அவ்வாறு குறையும் போது பலர் வங்கிகளில் சேமிப்பது
குறித்து மக்கள் யோசிக்கத் தொடங்கி விடுவர். சேமிக்காதிருக்கும் அந்தப் பணம் செலவு
செய்யப் படுவதற்காக சந்தைகளில் படையெடுக்கும். அதன்மூலம் பணவீக்கம் அதிகரிக்கும். பணவீக்கத்தின்
அதிகரிப்பு பொருட்களின் விலை உயர்வில் சென்று முடியும். விலை உயர்வு சாதாரண மக்களின்
வாழ்க்கை நிலையை கடுமையாகப் பாதிக்கும். ஆனால் எந்த மக்களின் வளர்ச்சிக்காக தற்போதைய
அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறதோ அந்த முதலாளிகள் இதனால் ஒரு பாதிப்பிற்கும்
ஆளாக மாட்டார்கள்.
ரிசர்வ் வங்கி கவர்னரின் அதிகாரக் குறைப்பு
பணவீக்கம் ஏற்படுத்தும் சமூகப் பாதிப்பையும் கணக்கிலெடுத்துக்
கொள்ள வேண்டும்; அதனால் வட்டி விகிதக் குறைப்பு குறித்து பலமுறை சிந்திக்க வேண்டும்
என்று தற்போதைய ரிசர்வ் வங்கியின் கவர்னர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார்.
அதன் விளைவாகத்தான் அவருடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் தற்போது ரிசர்வ்
வங்கியின் கைகளிலிருந்த பணப்புழக்கம் போன்றவற்றை பராமரிப்பதற்காக கமிட்டி ஒன்றினை தேசிய
ஜனநாயகக் கூட்டணி அரசு அமைத்துள்ளது.
நிதிநிலை அறிக்கை
இது போன்ற ஏழை மக்கள் மீதானதும் கூட்டாட்சி முறை
மீதானதுமான தாக்குதல்கள் கடந்த நிதிநிலை அறிக்கை மூலம் முன்வைக்கப்பட்டன. அதில் விவசாயத்திற்கான
ஒதுக்கீடு 2800 கோடிகள் வரை குறைக்கப் பட்டுள்ளது. அதில் இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்திற்கான
ஒதுக்கீடு 25 கோடி ரூபாய் குறைக்கப் பட்டுள்ளது. எச்.ஐ.வி. நோய்த் தடுப்பிற்கான ஒதுக்கீடு
30 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது. குழந்தை நல மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஒதுக்கீடும்
குறைக்கப்பட்டுள்ளது. அதைப்போல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கான நிதி ஒதுக்கீடும்
குறைக்கப் பட்டுள்ளன. மனித வள மேம்பாட்டிற்கான ஒதுக்கீடு 17 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடு 18000 கோடி ரூபாய் குறைக்கப் பட்டுள்ளது.
இந்தக் குறைப்பின் சுமை நாசூக்காக மாநில அரசுகளின்
தலையில் விழுந்துள்ளது. அதாவது இந்த நிதிநிலை அறிக்கையில் செய்ததாகக் கூறப்படும் மாநிலங்களுக்கான
கூடுதல் ஒதுக்கீடு இதன்மூலம் கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல என்ற
நிலைக்கு ஆளாகியுள்ளது. உயர்கல்விக்கான ஒதுக்கீடும் 3900 கோடி ரூபாய்கள் கடந்த ஆண்டைக்
காட்டிலும் குறைக்கப் பட்டுள்ளன.
வசதியானவருக்கு வரிக் குறைப்பு
அதே சமயத்தில் முதலாளித்துவ நிறுவனங்களைப் பொறுத்தவரை
வரிக்குறைப்பு பல வகைகளில் செய்யப்பட்டுள்ளது. கலால் வரி 30 சதவிகிதத்திலிருந்து
25 சதவிகிதமாகக் குறைக்கப் பட்டுள்ளது. செல்வ வரி முற்றாக எடுத்துவிடப் பட்டுள்ளது.
மத்தியதர வர்க்க அலுவலகம் செல்வோரைப் பொறுத்தவரை அவர்களின் வருமான வரி விகிதங்களில்
எந்த மாற்றமும் இல்லை. சேமிப்புகளை அதிகரித்தால் சிறிய அளவிற்கு சலுகைகளைப் பெற முடியும்
என்ற நிலையே ஏற்படுத்தப் பட்டுள்ளது.
ஏழைகளுக்கு கண்துடைப்பு
ஏழை மக்களைப் பொறுத்தவரையில் விபத்துக் காப்பீடு
போன்ற கண்துடைப்புத் திட்டங்கள் கொண்டுவரப் பட்டுள்ளன. அதை ஆண்டிற்கு 12 ரூபாய் செலுத்தினாலே
போதும் 2 லட்ச ரூபாய் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும் என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே
நிதி அமைச்சர் அறிவிக்கிறார். அதைப் பெற வேண்டுமென்றால் ஒருவர் உயிர் துறக்க வேண்டும்.அதாவது
செத்தாவது இந்தப் பலனைப் பெற்றே தீருவேன் என்றிருப்பவரே இந்தப் பலனைப் பெற முடியும்.
அதுதவிர ஓய்வூதியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருடத்திற்கு 1000 ரூபாய் செலுத்தினால்
அவர்களுக்கு பின்னாளில் ஓய்வூதியம் கிட்டும் என்ற அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
மறுப்பதற்கு வழிவகுக்கும் திட்டம்
இதுதவிர ஏழை எளிய உழைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள
ஒரு சலுகை குறைந்த கூலி பெறுபவரின் வருங்கால வைப்புத் தொகை, தொழிலாளர் காப்பீட்டுத்
திட்ட தொகை ஆகியவற்றை அவர்கள் செலுத்த வேண்டாம் என்று வந்துள்ள அறிவிப்பாகும். இதில்
காப்பீட்டுத் திட்டத்தைப் பொறுத்தவரை நிறுவனங்கள் மட்டும் தொழிலாளருக்கான தொகைகளைக்
காப்பீட்டுத் திட்டத்தில் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
புது நெருக்கடி
இவ்வாறு சாதாரண மற்றும் ஏழை மக்களின் வயிற்றில் அடித்து
வளர்ச்சிக்கு உதவுகிறேன் என்று எத்தனை உரத்துக் கூறினாலும் கூறுவதனாலேயே வளர்ச்சி என்பது
வந்துவிடாது. உலகில் அவ்வப்போது மாறிவரும் சூழ்நிலைகள் பல்வேறு பிரச்னைகளை வளர்ச்சிக்
கண்ணோட்டத்திற்கு முன் நிறுத்துகின்றன. சீனத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு அரசால் அதிகரிக்கப்பட
போகிறது அந்த நிலையில் சீனப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் அதனால் அப்பொருட்களின்
நமது பொருட்களினுடனான போட்டித்திறன் குறையும். அதன்மூலம் நமது ஏற்றுமதி அதிகரிக்கும்
என்றெல்லாம் பல வகைகளில் எதிர் பார்ப்புகளை வளர்த்துக் கொண்டிருந்த நமது ஆட்சியாளர்கள்
முன்பு தற்போது அதிர்ச்சிகரமானதொரு சீன அரசின் நடவடிக்கை வந்துள்ளது. அதுதான் சீனாவின்
நாணயத்தின் மதிப்பை அந்நாட்டு அரசு குறைத்துள்ளதாகும். இதன் மூலமாக சீன உற்பத்திப்
பொருட்களின் டாலர் மதிப்பின் அடிப்படையிலான விலைகள் மிகவும் குறையும். அதன் விளைவாக
இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்புகள் பெரிதும் குறையும்.
அப்பட்டமான முதலாளித்துவ ஆதரவு
எனவே இதுபோன்ற குறுகிய கால வளர்ச்சி குறித்த கண்ணோட்டங்கள்
உண்மையான வளர்ச்சியையும் கொண்டு வராது. நாட்டின் பெரும்பான்மை மக்களின் சுபிட்சமான
வாழ்க்கைக்கும் வழிவகுக்காது. மாறாக ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்குதலையே
அவை தவிர்க்க முடியாமல் கொண்டுவரும். வழக்கமாக படிப்படியாக வந்து கொண்டிருந்த அத்தாக்குதல்களை
ஒரேயடியாக மக்கள் மீது ஏற்றி வைக்கும் நடவடிக்கைகளையே தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி
அரசு அதன் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் எடுத்து வருகிறது.
இடதுசாரிகள் தாராளவாத மதிப்புகளைப் பேணும் அறிவு
ஜீவிகள் அனைவரது பார்வையிலும் பி.ஜே.பி. கட்சியினரின் ஹிந்துத்துவா கண்ணோட்டமே பெரிதாகப்
பார்க்கப் படுகிறது. உண்மையில் ஹிந்துத்துவா கண்ணோட்டம் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப்
பெற்று ஆட்சியதிகாரத்தில் அவர்களை அமர்த்துவதற்கு மட்டுமே வழிவகுக்கக் கூடியதாகும்.
காலாவதியாகிப் போன மதவாத கண்ணோட்டத்திற்கு புத்துயிர் ஊட்டி அது நிலவுடமைக் காலத்தில்
இருந்த மெருகுடனும் மதிப்புடனும் மீண்டும் உலா வரச் செய்வது யாராலும் ஆற்ற முடியாத
காரியமாகும்.
அதனால் தான் ஆட்சியதிகாரத்திற்கு வந்தவுடன் பி.ஜே.பி.
அரசு இப்போது தன்னை வலுப்படுத்திக் கொள்ள என்ன செய்ய முடியுமோ அதைச் செவ்வனே செய்ய
ஆரம்பித்து விட்டது. அதாவது ஆளும் முதலாளி வர்க்கத்திற்கு உழைக்கும் மக்களின் நலன்களைக்
காவு கொடுத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அத்தனையையும் செய்யத் தொடங்கி விட்டது.
அந்த அம்சத்தை மக்களின் பார்வைக்குக் கொண்டு வராமல் இன்னும் ஹிந்துத்துவா அபாயம், ஹிந்துத்துவா
அபாயம் என்று கூறிக் கொண்டிருப்பதும் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி ஆளும் வர்க்கத்தையும்
அதன் உறுதியான ஆதரவாளராக இருந்து வரும் பி.ஜே.பி. கட்சியையும் அறிந்தோ அறியாமலோ காப்பதே
ஆகும்.
15 செப். - 14 நவ. 2015
கருத்து 4 , கருவூலம் 1