யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)-கள் நேபாள மண்ணில் அரங்கேற்றுவது ஆக்கபூர்வ மார்க்சிஸமா? திருத்தல்வாதமா?

சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களின் சிந்தனைக்கு சில கேள்விகள்

நமது இதழில் நாம் ஏற்கனவே எழுதியிருந்த இரு தொடர் கட்டுரைகளில் இன்றைய சமுதாயமாற்ற இயக்கங்கங்கள் எவையும் எந்தவொரு குறிப்பிடதக்க உற்சாகத்தையும் கொடுக்கும் விதத்தில் இல்லாதிருக்கும் நிலையில் நேபாளத்தில் தோன்றியிருக்கக் கூடிய வளர்ச்சிப் போக்குகள் எவ்வாறு இருண்ட சூழ்நிலையில் ஒளிக்கீற்று போல் தோன்றியுள்ளன என்பதை குறிப்பிட்டிருந்தோம்.

அதே சூழ்நிலையில் நாம் வேறொரு விசயத்தையும் கோடிட்டுக் காட்டியிருந்தோம். ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நிறுத்திவிட்டு ஜனநாயகத்திற்கானப் போராட்டத்தில் தன்னை ஏழு கட்சிக் கூட்டணியில் அங்கமாக்கி கொண்டு செயல்படும் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களைத் தவிர பிற அனைத்துக் கட்சிகளும் பெயரளவில் தங்களை எப்படி அழைத்துக் கொண்டாலும் உழைக்கும் வர்க்க அரசு ஒன்று அமைவதை எந்த சூழ்நிலையிலும் ஜீரணிக்க முடியாதவையே. அத்தகைய சூழ்நிலையில் அவை ஏதாவது ஒரு வகையில் உழைக்கும் வர்க்க அரசினை அமைக்கும் பாதையில் மாவோயிஸ்டுகள் முன்னெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கும்; அவற்றை, அகற்றி அவற்றின் தீய நோக்கத்தை பரந்துபட்ட மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த இடைவிடாது மக்கள் இயக்கங்களை தட்டியயழுப்ப வேண்டியகட்டாயமும்,அத்தியாவசியமும் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) களுக்கு தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும்; இதையும் நாம் கோடிட்டுக் காட்டியிருந்தோம்.

ஜனதிபதியின் ஜனநாயக விரோதச் செயல்

நாம் எதிர்பார்த்தது தவறாகப் போகவில்லை. குறுகிய காலத்திலேயே சிவில் நிர்வாகத்தின் மேலாண்மையைக் கட்டுப்படுத்தி ஜனநாயக விரோத முறையில் இராணுவ ஜெனரல் கொத்தவால் பதவிநீக்க விசயத்தில் நேபாள ஜனாதிபதி ராம் பரண் யாதவ் நடந்து கொண்டார். நேபாள பிரதமர் தோழர் பிரசந்தா அவர்கள் கொத்தவாலை அகற்றி இட்ட ஆணையை மீறி அவரது பதவி நீக்கத்தை ஜனாதிபதி ரத்து செய்தார். அவரது இச்செயலுக்கு நேபாளத்தின் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் தவிர்த்த பிற கட்சிகள், மற்றும் இந்தியா உள்பட நேபாளத்தைச் சுற்றியுள்ள அனைத்து ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவு முழுமையாக இருந்தது.

கம்யூனிஸ்ட்கள் ஒருபோதும் பதவிப் பித்தர்களல்ல

இவ்வாறு ஜனாதிபதியின் ஜனநாயக விரோதச் செயல் அரங்கேறிய உடனேயே இந்தப்பதவி ஒரு பொருட்டல்ல என்று அதனைத் துச்சமெனத் தூக்கியயறிந்துவிட்டு தோழர் பிரசந்தா தனது அமைப்பை நாடுதழுவிய அளவிலான பலகட்டப் போராட்டப் பாதையில் இறக்கிவிட்டார். இன்று ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சிப் போக்குகளினால் நேபாளத்தின் புதிய அரசியல் சட்டத்தை எழுதி முடிப்பதும் அதனை அமலுக்குக் கொண்டு வருவதும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.இந்நிலையில் அரசியல் சட்டம் அமுலுக்கு வருவதில் ஏற்படவிருக்கும் காலதாமதத்திற்குக் காரணம் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களே என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளால் தற்போது அங்கு ஆசனத்தில் உருவாக்கப்பட்டு அமர்த்தி வைக்கப்பட்டுள்ள அரசு எந்த நேரமும் பழிபோடக் காத்திருக்கின்றது.

சராசரி முதலாளித்துவ அரசியல் சட்டமாக்கச் சதி

உண்மையிலேயே அக்கட்சிகளின் விருப்பம் தற்போது அமலில் உள்ள யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களின் முன் முயற்சியால் எழுதப்பட்ட இடைக்கால அரசியல் சட்டத்தின் பல மக்கள் ஆதரவு அம்சங்களை அகற்றி அதனை ஒரு சராசரி முதலாளித்துவ அரசியல் சட்டமாக ஆக்குவதே.

முதலாளித்துவம் இன்று சீரழிந்து நிற்கும் நிலையில் அதன் பெயரளவிலான ஜனநாயகப் போக்கிற்கு உகந்த ஒன்றாக அரசியல் சட்டம் இருப்பதே தங்களுக்கு நல்லது என்ற எண்ணப் போக்கே தற்போது அங்கு ஆட்சியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ளது. இப்போதுள்ள இடைக்கால அரசியல் சட்டத்தின் மக்கள் ஆதரவு ரத்துக்களுக்கு விரோதமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அவற்றிற்கு கால அவகாசமும் தேவைப்படுகிறது. எனவே அவைதான் உண்மையில் அரசியல் சட்டம் எழுதப்படுவதைத் தாமதிக்க விரும்புமேயன்றி யு.சி.பி.என். (மாவோயிஸ்ட்) களுக்கு அத்தகைய விருப்பம் இருக்க வாய்ப்பில்லை.
உண்மைக்கும் உடைமை வர்க்கங்களுக்கும் வெகுதூரம்
இருந்தாலும் உண்மைக்கும் உடமைவர்க்க சக்திகளுக்கும் உள்ள இடைவெளி இன்றைய காலகட்டத்தில் நிரப்ப முடியாத ஒன்றாக ஆகிவிட்டதால் அவை கூசாமல் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் மேல் இந்தப் பழி உட்பட எந்தப் பழியையும் போடத் தயங்கப் போவதில்லை.
இந்நிலையில் தான் உரிய சமயத்தில் சரியான அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களின் தலைமையிலான தேசிய அரசாங்கம் அமைப்பதே இப்போதுள்ள தேக்கநிலையை அதாவது ஜனாதிபதி, கொத்தவால் பதவி நீக்கத்தை ரத்து செய்ததை இடைக்கால நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற யு.சி.பி.என். (மாவோயிஸ்ட்)களின் ஜனநாயகபூர்வக் கோரிக்கையை ஏற்க மறுப்பதால் நாடாளுமன்றத்தை நடத்த முடியாமல் இருக்கும் தேக்கநிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உள்ள ஒரே வழி என்பதை முன்வைத்து பலமட்ட மற்றும் பலகட்டங்களிலான போராட்டங்களையும் இயக்கங்களையும் யு.சி.பி.என்.(எம்) நடத்தி வருகிறது.
வழக்கம் போல இந்திய ஆளும் வர்க்கத்தின் கட்டுபாட்டிலுள்ள ஊடகங்களும் பத்திரிக்கைகளும் அத்தகைய மகத்தான இயக்கங்களுக்கு எந்தவொரு முக்கியத்துவமும் தராமல் இருட்டடிப்பு செய்து யு.சி.பி.என். (மாவோயிஸ்ட்)கள் பதவியைவிட்டு விலகிய பின் ஒன்றுமில்லாதவர்களாக ஆகிவிட்டார்கள் என்றதொரு பொய்த் தோற்றத்தை உருவாக்கி அதனைச் சாதுர்யமாக பரவவிட்டு வருகின்றன.

சர்வதேசக் கடமை

இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் வர்க்கக் கட்சிகளும் அமைப்புகளும் மிகுந்த பொறுப்புணர்வுடன் நமது சர்வதேசக் கடமையான நேபாளத்தின் சமுதாயமாற்ற எழுச்சியைப் பாதுகாக்க நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வது அவசியமாகும். சர்வதேசக் கம்யூனிஸ்ட் அமைப்புகளின் சகோதரத்துவ ஆதரவின் தேவையை உணர்ந்த யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) அமைப்பும் தன்னுடைய தலைவர்களை தங்கள் நாட்டைச் சுற்றியுள்ள இந்தியா போன்ற நாடுகளின் பல பகுதிகளுக்கு அனுப்பி, கூட்டங்கள் நடத்தித் தங்கள் நிலைபாட்டின் நியாயத்தை உணர்த்தி ஆதரவு திரட்டி வருகின்றது.

இந்திய மாவோயிஸ்ட்களின் குற்றச்சாட்டு

ஆனால் துரதிஷ்டவசமாக பல அதிதீவிர கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று அறியப்படுபவையும் மாவோயிஸப் பாதையைக் கடைபிப்பதாகக் கூறிக்கொள்பவையுமான, இந்திய மண்ணில் செயல்படும் அமைப்புகள் நேபாளப் புரட்சியின் பருண்மையான சூழ்நிலைகளை பொருத்தமாகப் பொறுப்புணர்வுடன் கணிப்பதற்குப் பதிலாக ஒருவகை வறட்டுச் சூத்திரவாதப் போக்கினைக் கடைப்பிடித்து யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் திருத்தல்வாதப் போக்கில் தடம்புரண்டு போய்விட்டனர் என்ற பிரச்சாத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
வறட்டு வாதத்தை எதிர்த்துப் போராடி மார்க்ஸிசத்தை ஆக்கபூர்வமாக செழுமைப் படுத்துகிறோம் என்ற பெயரில் தடம்புரண்டு போய்விட்டதாக யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் மேல் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் தற்போது எடுத்துள்ள நிலைபாடு உண்மையான முறையில் மார்க்சிசத்தை செழுமைப் படுத்துவதா? அல்லது திருத்தல்வாதப் போக்கில் அவர்கள் காலடி எடுத்து வைத்துள்ளதைக் காட்டுவதா? என்பதைப் பார்ப்பது அவசியமாகும். அதாவது ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டு ஏழுகட்சிக் கூட்டணியுடன் இணைந்து செயல்படத் தொடங்கியதே யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் திருத்தல்வாதப் பாதையில் நடைபோடத் தொடங்கியதை வெளிப்படுத்தும் முதல் நடவடிக்கை என்பது இந்தியாவில் முதன்மையான மாவோயிஸ்ட் குழுவாக செயல்படும் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களின் குற்றச்சாட்டாகும்.
உண்மையில் நேபாளத்தின் முக்கிய நகரங்கள் தவிர அனைத்து கிராமப்புறங்களிலும் தங்களது செல்வாக்கை உறுதி செய்தபின் அப்போது ஏழுகட்சிக் கூட்டணியினால் பலவீனமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஜனநாயகத்திற்கான போராட்டத்தைத் தன்னிடமிருந்த மகத்தான மக்கள் சக்தியுடன் பங்கேற்று, வலிமைப்படுத்தி அதன் மூலம் பயங்கரவாதிகள் என்றும் வன்முறைவாதிகள் என்றும் தங்களைப் பற்றி நகர்ப்புற நடுத்தர உழைக்கும் மக்கள் மத்தியில் பரவியிருந்த எண்ணத்தை மாற்றி அவர்கள் மத்தியில் வலுவுடன் காலூன்ற வேண்டும் என்பதற்காகவே அப்போராட்டத்தை ஆதரிக்கும் நிலையினை யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் எடுத்தனர்.

பதவி ஆசை வழிநடத்தவில்லை

அதன் மூலம் சம்பிரதாய ஜனநாயக உரிமைகளையும், நடைமுறைகளையும் கூட முழுமையாக அதுவரை அனுபவிக்காமல் இருந்த நேபாள மக்கள் அதனை அனுபவிக்கும் விதத்தில் முதல் கட்டமாக ஜனநாயத்திற்கான இயக்கத்தை வெற்றி பெறச் செய்தனர்.யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களின் உண்மையான நோக்கமும் இறுதி லட்சியமும் ஞானேந்திராவிடம் இருந்து ஆட்சியதிகாரத்தைப் பிடுங்கி அதில் பிரதமராகவும் ஜனதிபதியாகவும் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமர வேண்டும் என்பதல்ல. இது அத்தகைய பதவி ஆசை நோக்கங்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அப்போராட்டத்தில் இறங்கிய யு.சி.பி.என்.(எம்) தவிர்த்த அனைத்து கட்சிகளுக்கும் கூடத் தெரியும். தங்களது அத்தகைய பதவி மோகத்திற்கும் மாவோயிஸ்ட்களே முட்டுக் கட்டைகள் என்பதையும் அவர்கள் அறிவர்.

யு.சி.பி.என்.(எம்)யைச் சேர்க்க வேண்டிய கட்டாயம்

இருந்தபோதிலும் அக்கட்சிகள் யு.சி.பி.என். (மாவோயிஸ்ட்) களைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டதற்கானக் காரணம் ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் போராட்டத்தைக் கொண்டு சென்றபின் அதற்குமேல் அதன் தர்க்கரீதியான முடிவிற்கு அதாவது வெற்றிக்கு அதனை வழிநடத்த முடியாதவர்களாக அவர்கள் ஆகிவிட்டதேயாகும். இவ்வாறு ஒரு போராட்டம் இடையில் தொய்வடைந்து அதன் விளைவாக ஞானேந்திராவின் கை மேலோங்கினால் அவரால் தங்களின் மேல் கட்டவிழ்த்து விடப்படும் தாக்குதல்கள் மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதை அவர்கள் நன்கறிவர். அதை மனதிற்கொண்டே வேறுவழியின்றி மாவோயிஸ்ட்களை இணைத்துக் கொள்ள அக்கட்சிகள் முடிவு செய்தன.

ஏனெனில் ஞானேந்திரா அத்தகைய அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டால் இந்தியா போன்ற நேபாளத்தைச் சுற்றியுள்ள நாடுகளும் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக ஒரு போதும் நேபாள விசயத்தில் தலையிட்டிருக்கப் போவதில்லை. மாறாக அவை தலையிட்டிருந்தால் அதுவும் அவற்றின் ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகவும் அந்தந்த நாடுகளின் உடமை வர்க்கத்தின் நலன்களை மனதிற்கொண்டதாகவுமே இருந்திருக்கும். இதுவே உழைக்கும் வர்க்கத்தின் வரலாற்று அனுபவம்.

ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் ஏற்பட்ட திருப்பம்
எனவேதான் வேறுவழியின்றி ஏழு கட்சிக் கூட்டணியில் யு.சி.பி.என்(எம்)ஐ அவர்கள் இணைத்துக் கொண்டனர். இந்த நிர்ப்பந்தங்களினால் மாவோயிஸ்ட்களை கூட்டணியில் இணைத்துக் கொண்ட பின்னர் தான் மன்னராட்சியை எதிர்த்த ஏழுகட்சிக் கூட்டணியின் ஜனநாயகத்திற்கான இயக்கம் புதிய பரிமாணத்தை எடுத்தது.அதன் விளைவாக அடிபணிவது தவிர மன்னருக்கு வேறு வழியேயில்லை என்ற வகையில் ஏற்பட்டத் திருப்பத்தை தனது உளவு அமைப்புகளின் மூலம் அறிந்து கொண்ட பின்னரே ஜனநாயகத்திற்கான போராட்டத்தை ஆதரிப்பதாக இந்தியா போன்ற நாடுகளும் அறிவித்தன.
இந்த ஜனநாயகப் போராட்டத்தில் பங்கெடுத்ததன் மூலம் யு.சி.பி.என்(எம்) அமைப்பு ஏறக்குறைய நேபாளம் முழுவதுமே ஒரு மகத்தான மக்கள் சக்தியாக உருவெடுத்தது. ‘தேர்தல் அரசியல் நமது களம்; எனவே போராட்ட அரசியலில் பெரும் பகுதி தங்களது காலத்தைச் செலவிட்டவர்கள் தங்களுக்குச் சாதகமான தேர்தல் களத்தில் சோபிக்க முடியாது’ என்ற அடிப்படையில் பிற கட்சியினர் கட்டியிருந்த மனக்கோட்டையைத் தகர்த்துத் தவிடுபொடியாக்கி ஒரு பிரமிக்கத்தக்க வெற்றியினை தேர்தல் மூலமும் மாவோயிஸ்ட்கள் சாதித்தனர்.

சீன வழி முன்னிறுத்திய சிக்கல்

இந்திய மாவோயிஸ்ட்கள் கூறுவது போல் இந்தப் பாதையை தேர்ந்தெடுக்காதிருந்திருந்தால், அதாவது யு.சி.பி.என்(எம்) கட்சி கிராமப் புறங்களில் விடுதலைபெற்ற மையங்களைத் தங்களது அடித்தளங்களாக ஏற்படுத்திக் கொண்டு நகர்ப் புறங்களைத் தாக்கிக் கைப்பற்றும் சீனப் புரட்சியின் போர்த்தந்திர அணுகுமுறையை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
ஆனால் நேபாளத்தில் நிலவும் யதார்த்த சூழ்நிலையில் கிராமப் புறங்களில் தங்களது ஆதிக்கத்தை யு.சி.பி.என்(எம்) நிலைநாட்டிவிட்ட போதிலும், அதைப் போல் அந்நாட்டின் நகர்ப் புறங்களைத் தாக்கி கைப்பற்றி புதிய ஜனநாயகத்தை நிலைநாட்டுவது அத்தனை சுலபம் அல்ல. ஏனெனில் நேபாளத்தின் நகர்ப்புறப் பகுதிகளில் இந்தியர்களின் வியாபார மற்றும் தொழில் நிறுவனங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றிற்குப் பாதகம் ஏற்படும் என்ற நிலைவந்தால் இந்திய அரசு இராணுவ ரீதியாகக் கூட அந்நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடத் தயங்காது. மேலும் நேபாள நகர்ப்புற மக்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாத நிலையில் அவ்வாறு நகர்ப்புறங்களைத் தாக்கிக் கைப்பற்றி ஆட்சியை நிலைநாட்டுவதும் கடினம்.
ஒரு சூழ்நிலையில் இந்தியா போன்ற நாடுகளின் இராணுவ ரீதியான தலையீடு வந்தால் ஏகோபித்த மக்கள் ஆதரவின்றி அதனை எதிர்கொண்டு முறியடிப்பதும் கடினம். மேலும் பிற நாடுகளின் தலையீடைத் தட்டிக் கேட்கவல்ல சோசலிச முகாம் அல்லது சோசலிச நாடுகள் என்று எவையுமே இன்றில்லை. இந்தச் சூழ்நிலையில் யதார்த்தத்தில் கிராமப்புறங்களில் உள்ள தங்களது செல்வாக்குப் பகுதிகளிலிருந்து நகர்ப்புறங்களைத் தாக்கிக் கைப்பற்றுவது என்ற மாவோவின் சீன யுக்தி நேபாளத்தின் சூழ்நிலைக்கு ஒத்துவராத ஒன்று.
மேலும் பரந்துபட்ட நகர்ப்புற மக்கள் ஆதரவின்றி அப்படியே தாக்கிக் கைப்பற்றினாலும் வெற்றியைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் மிகமிகக் கடினம். அந்நிலையில் நகர்ப்புறங்களைக் கைப்பற்றி நேபாளம் முழுவதிலும் தங்களது ஆட்சியை நிறுவ முடியாவிட்டால் கிராமப் புறங்களில் தாங்கள் ஏற்படுத்தியுள்ள விடுதலைபெற்ற பகுதிகளை யு.சி.பி.என்(எம்) அமைப்பினர் அப்படியே தொடர்ச்சியாகத் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளவைகளாக மிகவும் சிரமப்பட்டு பலகாலம் பராமரிக்க வேண்டிவரும். அதையும் தாண்டி ஒருபடி மேலே சென்று அப்பகுதிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்துத் துண்டாடி ஒரு தனி அரசை அவர்கள் அமைத்தால் கூட அதனை அங்கீகரிக்க இன்றைய நிலையில் எந்தவொரு நாடும் முன்வராது.
உலகத் தொடர்புகளும் தொழில்மயமும் இன்றி மிகவும் பின்தங்கிய பகுதியாக பல காலம் அது தொடர்ந்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த நிலையை மாற்றி இன்று நேபாளம் முழுவதும் மறுக்கமுடியாததொரு சக்தியாக தனது மாறுபட்ட அணுகுமுறையினால் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் ஆகியிருப்பது திருத்தல்வாதப் போக்கா? அல்லது ஒரு சூழ்நிலையைச் சரியாகக் கணித்து அச்சூழ்நிலையைப் பயன்படுத்தும் வகையில் தங்களது வழிமுறைகளை வகுத்தெடுத்து அதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பு ரீதியான வளர்ச்சிக்கும் உழைக்கும் வர்க்கக் கருத்துக் கருவூலத்திற்கும் செய்துள்ள வழங்கலா?

மக்கள் நிர்வாகம் சாத்தியமானது எவ்வாறு

அடுத்த படியாக யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் தாங்கள் கிராமப்புறங்களில் ஏற்படுத்தியிருந்த மக்களின் நிர்வாகத்தை ஏழுகட்சி ஒப்பந்தத்தின் படி கலைத்தது தற்கொலைக்குச் சமமானதும் திருத்தல்வாதப் பாதையில் அவர்கள் எடுத்து வைத்த அடுத்த அடியுமாகும் என்பது இந்திய மாவோயிஸ்ட்களின் அடுத்த குற்றச்சாட்டு.
இவர்கள் ஒன்றைச் சிந்தித்துப் பார்த்தால் பல உண்மைகளை அறிய முடிந்தவர்களாக இருப்பார்கள். அதாவது ஆயுதம் தாங்கிய போராட்டத்தைத் தொடங்கிய 13 ஆண்டு காலத்திலேயே மிகப் பெரும்பான்மையான பகுதிகளில் மக்கள் நிர்வாகத்தை யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) அமைப்பினர் எப்படி ஏற்படுத்த முடிந்தது? என்ற கேள்வியையும் அதைக் காட்டிலும் அதிக காலம் அவர்கள் கூறும் அதே மாவோயிஸக் கண்ணோட்டத்தைக் கூறிக் கொண்டு செயல்படும் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் அவர்கள் கொண்டுவந்துள்ளது போன்ற மக்கள் நிர்வாகத்தை தாங்கள் செயல்படும் இந்திய வனப் பகுதிகளில் கூட ஏன் பிசிறின்றி செய்ய முடியவில்லை என்ற கேள்வியையும் ஒருமுறைக்குப் பலமுறை தமக்குத்தாமே கேட்கவேண்டும். அப்போது அதற்கான காரணம் அவர்களுக்குப் புரியும்.

யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் அதனைச் செய்ய முடிந்ததற்கான காரணம் ஒன்று நேபாளச் சூழ்நிலையையும், அடுத்து தங்களது பலத்தையும்,எதிரியின் பலவீனத்தையும் மிகச் சரியாகக் கணித்ததாகும். நேபாளத்தின் ஏறக்குறைய மூன்றில் இரண்டுபங்குப் பகுதிகள் இதைப் போன்ற கிராமப்புறப் பகுதிகள் தான். அங்குள்ள நிலங்களைப் பெயரளவில் அவற்றின் உரிமையாளர்களாக இருக்கக் கூடியவர்கள் தாங்களே சென்று அதிக விவசாயத் தொழிலாளர் உதவியின்றி நவீன முறைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வது இந்தியாவில் அதைச் செய்வதைப் போல் அத்தனை எளிதல்ல.
ஒன்று நவீன விவசாயம் மேற்கொள்ள உழவடை எந்திரங்கள் வாங்க மூலதனத் திரட்சி வேண்டும். அடுத்து அவ்வாறு மிகச் சிரமப்பட்டுச் செய்தாலும் அவ்விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுபடியான விலை வேண்டும். இல்லாவிடில் லாபகரமாக விவசாயத் தொழிலை நடத்த முடியாது. எனவே அங்குள்ள நிலையில் அந்நிலவுடைமையாளர்கள் முழுக்க முழுக்க அந்தந்தப் பகுதி மக்களைக் கொண்டு மட்டுமே விவசாயம் செய்ய முடியும்.
எனவே அந்த நிலத்தில் கைபடாத பலரே பெயரளவில் அவற்றிற்கு உரிமையாளர்களாக இருக்கும் நிலை நிலவுகிறது. அடுத்து சராசரி ஜனநாயக உரிமைகளைக் கூட அனுபவித்திராத அந்த மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலான கிராமப்புற மக்களுக்கு முதலாளித்துவ ஜனநாயக உரிமைகள் குறித்த பிரமையும், சபலமும், இருக்கவில்லை. அவ்வாறு சிறிதளவு இருந்தாலும் அதனைத் தர்க்கப்பூர்வ வாதங்கள் மூலமும், புரட்சிகர நடைமுறை அனுபவங்களை எடுத்துரைத்தும் எளிதில் களைய முடியும். அடிப்படையில் அங்கிருக்கும் கொஞ்ச நஞ்ச அரசு நிர்வாகத்தையும், அது யாருக்காக இருக்கிறது என்பதையும் அதுகுறித்த பிரமையில்லாத மக்களிடம் அம்பலப்படுத்தித் தனிமைப் படுத்துவது மிகவும் சுலபம்.
எனவே மாவோ சீனத்தில் கடைபிடித்த யுக்தியின் ஒரு பகுதியாக இருந்த கிராமப் புறங்களில் விடுதலை பெற்ற பகுதிகளை அமைப்பது என்பதைச் செய்வது நாட்டின் மிகப் பெரும்பாலான பகுதிகளைப் பொறுத்தவரை சாத்தியமான ஒன்றாகவே இருந்தது.

மாறுபட்ட இந்தியச் சூழ்நிலை

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் நிலை கொண்டுள்ள பகுதி இந்தியாவின் ஒட்டுமொத்த நிலப் பகுதியில் 10 சதவீதத்திற்கும் குறைவானதாகவே இருக்கிறது. முழுக்க முழுக்க வனங்களாக இருக்கும் அப்பகுதியில் மக்கட்தொகை விகிதம் இன்னும் குறைவானதாக உள்ளது. மேலும் வனப் பகுதிகளாக இருந்தாலும் நேபாளத்தில் இருப்பதைக் காட்டிலும் சாலை வசதிகள் மேலான விதத்தில் இப்பகுதிகளில் உள்ளன.
இந்தியாவின் இராணுவ மற்றும் காவல்துறையின் வலிமையோ நேபாள இராணுவம் மற்றும் காவல்துறையின் வலிமையோடு ஒப்பிடுகையில் எண்ணிப்பார்க்க முடியாத அளவு இராட்சதத் தன்மை வாய்ந்தது. அதனால் இந்த வனப் பகுதிகளில் ஒரு அசைக்க முடியாத நிர்வாகத்தைத் தன்னால் நிறுவ முடியாவிட்டாலும், மாவோயிஸ்ட்கள் மக்கள் நிர்வாகத்தை ஏற்படுத்துவதைச் சாத்தியமற்றதாக்க இந்திய அரசால் முடிகிறது.
மேலும் நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் செய்ய முடிந்தது போல் ஒரு ஒருமித்த மனநிலையை கிராமப்புற மக்கள் அனைவரிடமும் இந்திய மாவோயிஸ்ட்களால் ஏற்படுத்த முடியவில்லை. குறைந்தபட்சம் வனப் பகுதி மக்கள் அனைவரிடமும் கூட அதனைக் கொண்டுவர முடியவில்லை.
அதனால் தான் இந்து மதவாதத்தை மதவாத சக்திகள் இந்து மலைவாழ் மக்களிடம் கிறித்தவ மலைவாழ் மக்களுக்கு எதிராகத் தூண்ட முடிகிறது. இடஒதுக்கீட்டுக் கண்ணோட்டம் மலைவாழ் மக்களையே இரு பிரிவாக்கி ஒருவரை மற்றொருவர் எதிரியாகப் பாவிக்கும், ஒரு பிரிவினருக்கெதிராக மற்றொரு பிரிவினர் கொலை வெறித் தாக்குதல்களில் ஈடுபடும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மலைவாழ் கிராமப் புற மக்களின் பிரச்னைகளை ஒட்டு மொத்த நேபாள மக்களின் நலனோடு ஒருங்கிணைத்து நேபாள மாவோயிஸ்ட்கள் செயல்படுவது போல் இந்திய மாவோயிஸ்ட்களால் செய்ய முடியவில்லை. அதன் காரணமாகவே மலைவாழ் மக்களின் மொழி, கலாச்சாரம், மதம் சார்ந்த மூட நம்பிக்கைகள் ஆகிய அனைத்தையும் உயர்வுபடத் தூக்கிப் பிடித்தே இந்திய மாவோயிஸ்ட்களால் அவர்களைத் தங்களோடு நிறுத்த முடிகிறது.

ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலனோடு இணைக்க முடியாத போக்கு

ஒட்டு மொத்த இந்திய மக்களின் நலனோடு ஒருங்கிணைத்து அவர்களின் அப்போராட்டத்தைக் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் ஒரு வகையான மீள முடியாத சிக்கலில் இந்திய மாவோயிஸ்ட்கள் சிக்கியுள்ளனர். அதாவது வனங்களைத் தங்களது செல்வாக்குப் பகுதிகளாக எந்த விலை கொடுத்தாவது பராமரிக்கும் ஒரு கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சாலை வசதி உட்பட எந்த நவீன வசதிகளும் இல்லாத பின்தங்கிய பகுதியாகவே அதனைப் பராமரித்து வைத்திருக்க வேண்டிய ஒரு கட்டாய நிலைக்கு அவர்கள் தள்ளப் பட்டுள்ளனர்.
ஒரு வலிமை மிக்க இராணுவத்தை எதிர் கொண்டு அப்பகுதியை அவ்வாறு பராமரிக்க வேண்டியுள்ளதால் ஆயுதந்தாங்கிச் செயல்படும் போக்கிற்கு, மக்கள் இயக்கத்திற்குக் கொடுப்பதைக் காட்டிலும் பல மடங்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள தவறான அடிப்படை அரசியல் வழி உருவாக்கியுள்ளது. அதற்காக ஆயுதம் வாங்குவது போன்றவற்றிற்காகத் தங்களது நிதி ஆதாரங்களை எப்படியாவது பராமரிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. அதற்கான நிதியாதாரத்தைத் திரட்டுவதற்காக நியாயப்படுத்த முடியாத வழி முறைகளையும் அவர்கள் பின்பற்ற நேர்கிறது. அது பல சமயங்களில் அவர்களைப் பயங்கரவாதிகள் என அரசு நிர்வாகம் சித்தரிப்பதற்கு இடம் கொடுக்கிறது.

இந்தியாவின் பரந்துபட்ட வனம் தவிர்த்த பகுதிகளில் வாழும் மக்கள் குறித்த, தர்க்க ரீதியாக நிறுவி அணிதிரட்ட முடிந்த திட்டத்தையும் அதனை மையமாகக் கொண்ட அமைப்புகளையும் இந்திய மாவோயிஸ்ட்கள் கொண்டிருக்கவில்லை. அது அவர்கள் போராட்டத்தை இலக்கற்றதாக்கி, அதன் தொண்டர்களிடையே அவ்வப்போது விரக்தி மனநிலையை ஏற்படுத்துகிறது. மிகப் பெரும்பான்மை மக்களனைவரையும் தங்களது ஆதரவாளர்களாக மாற்றும் குறிக்கோளை மையமாகக் கொண்டு நம்பிக்கையுணர்வுடன் நேபாளத்தில் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் ஏற்படுத்தியதைப் போன்ற மக்கள் நிர்வாகங்களை சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் இந்தியாவில் ஏற்படுத்துவதற்கு இந்தச் சூழ்நிலையே குறுக்கே நிற்கிறது.
இவையே நேபாளத்தில் மக்கள் நிர்வாகத்தை யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் ஏற்படுத்த முடிந்ததற்கும் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் அவர்கள் நிலை கொண்டுள்ள பகுதிகளில் அதனை ஏற்படுத்த முடியாததற்குமான வெளிப்படையான காரணங்களாகும்.

பூகோள ரீதியான சாதக அம்சம்

மேலும் இராணுவமோ காவல்துறையோ அத்தனை எளிதில் அணுகமுடியாத கரடுமுரடான ஏற்ற இறக்கங்கள் கொண்ட மலையகப் பகுதிகள் உள்ள ஒரு சூழல் இருப்பது அங்கு யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) அமைப்பினர் மக்கள் நிர்வாகத்தை ஏற்படுத்த முடிந்ததற்கு பூகோள ரீதியில் உதவும் மற்றொரு முக்கியக் காரணமாகும். அதனால் தான் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் போக்குவரத்து வசதிகளை மையமாக வைத்து ஒரு வகையில் நேபாளம் இந்தியாவை விடப் பரந்தநாடு என்று கூறுகின்றனர்.
ஏனெனில் இந்தியாவில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரைக்கும் புகைவண்டியில் சென்றால் கூட இரண்டு நாட்களில் சென்றுவிட முடியும். ஆனால் நேபாளத்தின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்குச் செல்வதற்கு மாதக் கணக்கில் ஆகும். எனவே இந்த பூகோளரீதியான சாதகத்தையும் பயன்படுத்தியே யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) அமைப்பினரால் வெற்றிகரமாக மக்கள் நிர்வாகத்தை கிராமப் பகுதிகளில் ஏற்படுத்த முடிந்தது.




மக்கள் நிர்வாகம் மணல் வீடல்ல

இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட உண்மையான ஒரு மக்கள் நிர்வாகத்தை ஏற்படுத்துவதோ அவ்வாறு ஏற்பட்டபின் அதனைக் கலைத்து விடுவதோ ஒரு நாளிரவில் நடைபெறக் கூடிய காரியமல்ல. உழைக்கும் மக்களை அணிதிரட்டி அவர்களின் எதிரிகளை அடையாளம் காட்டி, அவர்களை எதிர்த்துப் போராடி அங்கு இருந்த நிலங்களை அனைவருக்கும் பொதுவானதாக்கி அங்குள்ள மக்களுக்கான கல்வி உட்பட அனைத்துத் துறை சார்ந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உருவாக்கப்பட்ட நிர்வாகம் நினைத்த மாத்திரத்தில் கலைத்துவிடக் கூடியதல்ல. உழைக்கும் மக்கள் தங்களுக்குச் சாதகமான தங்களது நிர்வாகம் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை அனுபவப் பூர்வமாக அறிந்து அதனை நேபாளத்தில் நடைபெற்ற விதத்தில் நடைமுறைப் படுத்திவிட்டால் அதன் கூறுகளும் சுவடுகளும் அங்குள்ள மக்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும்;அவர்களை அணிதிரட்டி வழிகாட்டிவரும் ஊழியர்களின் ஒவ்வொரு அணுவிலும் இருக்கும்.
அந்த அனுபவத்தையும், அந்த உணர்வையும் வைத்து நினைத்த மாத்திரத்தில் மக்கள் நிர்வாகத்தை ஏற்படுத்தும் திறனையும் அவர்களிடமிருந்து அகற்றிவிட முடியாது. எனவே மக்கள் நிர்வாகங்களைக் களைக்கிறோம் என்பது பெயரலவிலான ஒன்றே தவிர முழுமையாக நிறைவேற்றப்படக் கூடிய ஒன்றல்ல. இது ஏழுகட்சிக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் கூட நன்றாகத் தெரியும். இருந்தும் அதனை அவர்கள் அத்தனை தூரம் வலியுறுத்தி அதைச் செய்யவில்லை என்று பெருமளவு குற்றம் சாட்டாததற்குக் காரணம் அதனை வலியுறுத்தி அது முழுமையாக நடந்தால் தான் ஒப்பந்தம் என்று கூறுமளவிற்கு மக்கள் செல்வாக்கு கொண்ட திராணியுள்ளவர்களாக அவர்கள் இருக்கவில்லை என்பதே.
மேலும் இன்னும் கம்யூனிசக் கபடவேடத்துடன் அலையும் யு.எம்.எல்(மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியினருக்கும் மக்கள் நிர்வாகத்தை முற்றாகக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதில் சிக்கல் உள்ளது. ஏனெனில் ஆங்காங்கே பெயரளவிற்கு கிராமங்களில் இருக்கக் கூடிய சிற்சில தங்களது உழைக்கும் வர்க்க ஆதரவாளர்களைக் கூட இதனால் அவர்கள் இழக்க நேரிடும்.

தலை நரைத்துவிட்ட தத்துவ நண்பன்

இக்காரணங்களாலேயே இவ்விசயத்தை இக்கட்சிகள் பெரிதுபடுத்தாமல் இருக்கின்றன. எனவே ஒப்பந்தத்தின் சரத்துக்களை மட்டும் வைத்து மக்கள் நிர்வாகத்தைக் கலைத்துவிட்டார்கள் என்று அபயக்குரல் எழுப்பும் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களுக்கு பதிலாக லெனின் முன்வைத்த கதேயின் ஒரு மேற்கோளைத்தான் கூற வேண்டியிருக்கும். அதாவது ‘எனது தத்துவ நண்பனே தத்துவம் பேசிப்பேசி உன்தலை நரைத்து விட்டது. ஆனால் வாழ்க்கை என்னும் நிரந்தர விருச்சத்தின் பசுமை என்றும் மாறாதது’ என்ற அவரது ஏப்ரல் ஆய்வுரைகளின் வரிகளையே மீண்டும் வலியுறுத்திக் கூற வேண்டியிருக்கும்.
சிலி, இந்தோனேசிய அனுபவங்கள்

மேலும் இந்திய மாவோயிஸ்ட்கள் முன்வைக்கும் இன்னொரு கேள்வி இந்தப் பாராளுமன்றங்களில் பங்கேற்பது, அதற்கு முன் நிபந்தனையாக மக்கள் விடுதலை இராணுவத்தையும் ஆயுதங்களையும் ஐ.நா.பாதுகாப்பில் ஒப்படைத்து மக்கள் நிர்வாகத்தைக் கலைப்பது ஆகியவை இந்தோனேசியா, சிலி போன்ற நாடுகளில் அங்கிருந்த கம்யூனிஸ்ட் இடதுசாரி அமைப்புகள் பாராளுமன்ற வாதத்தில் நம்பிக்கை வைக்கும் நிலை எடுத்து ஏராளமான கம்யூனிஸ்ட்கள் கொன்று குவிக்கப் படுவதற்கு வழி வகுத்தது போன்றதாகாதா? என்பதாகும்.

முதற்கண் சிலியில் தேர்தல் மூலமாக ஆட்சிக்கு வந்தபின் அதிபர் அலண்டே எடுத்த அமெரிக்க செப்புச் சுரங்கங்களை தேசிய மயமாக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக உள்நாட்டு பிற்போக்கு சக்திகளுடன் கைகோர்த்த அமெரிக்கத் தாக்குதல்கள் வரும் என்பதனை அவரது ஆதரவாளர்களில் பலர் எதிர்பார்த்தனர்.
அதனை எதிர் கொள்ளப் பயிற்சி பெற்ற தொண்டர் படையினை உருவாக்க வேண்டும் என அவர்கள் அலண்டேயை வலியுறுத்தவும் செய்தனர். ஆனால் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போதுள்ள நாடாளுமன்ற மரபுகள் மூலமே மாற்றங்களைக் கொண்டுவந்து காட்டுவேன் என்று கூறி அவர் அவற்றிற்குச் செவிசாய்க்க மறுத்துவிட்டார். அதனால் அத்தகைய தாக்குதல் வெற்றிபெற இடம் கொடுத்தார். இந்தோனேசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எய்டிட் அவர்களோ குருச்சேவினுடைய கண்ணோட்டமான பாராளுமன்ற வழிமுறையில் சமூகமாற்றத்தைக் கொண்டுவருவோம் என்ற நப்பாசயை முழுக்க முழுக்க மனதில் நிரப்பி ஆளும் வர்க்கத்தின் பலத்தையும் சோசலிச சக்திகளை ஒடுக்கவேண்டும் என்ற அதன் வெறியையும் அலட்சியம் செய்தார்.

நேபாள மக்கள் வாக்களிக்க மட்டும் தயாரானவர்களல்ல
மேலும் சிலி மற்றும் இந்தோனேசிய நாடுகளின் மக்கள் அன்று சோசலிசக் கண்ணோட்டங்களுக்கு மக்களிடம் இருந்த மேலோட்டமான வரவேற்பின் காரணமாகக் கவரப்பட்டு பெரும்பாலும் கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மட்டுமே தயாராக இருந்தவர்கள். எனவே ஆளும் வர்க்க அடக்குமுறை எந்திரங்களின் தாக்குதல்கள் அம்மக்கள் எதிர்பாராதவை.

ஆனால் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களோ ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியை நடத்தி அதன் மூலம் பூகோள ரீதியாகப் பல விதங்களில் பிற நாடுகளில் இருந்து வேறுபட்ட நேபாளச் சூழ்நிலையை பயன்படுத்தி அங்கு கிராமப் பகுதிகளில் மக்கள் நிர்வாகங்களை நிலைநிறுத்தி ஜனநாயகத்திற்கான இயக்கம் தோன்றிய போது அதில் தங்களை உரிய மரியாதை மற்றும் கெளரவத்துடன் இணைத்துக் கொண்டு அதனால் நகர்ப்புற மக்கள் மத்தியில் பொதுவாகவும் நகர்ப்புற உழைக்கும் மக்கள் மத்தியில் ஆழமாகவும் வேரூன்றி, அந்தப் பின்னணியில் வந்த தேர்தலில் வெற்றியை எப்படி ஸ்தாபன ரீதியாக வென்றெடுப்பது என்பதையும் அறிந்து ஸ்தாபன ரீதியான நடவடிக்கைகள் மூலம் அந்தத் தேர்தல் வெற்றியையும் சாதித்தவர்கள்.
அது மட்டுமல்ல பதவிக்கு வந்தபின் பதவிமோகம் மற்றும் பதவியினால் கிட்டும் ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றினால் சீரழிந்து எப்படியேனும் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணாமல் சிவில் நிர்வாகத்தின் மேலாதிக்கம் பாதிப்பிற்கு ஆளான வேளையில் பதவியையும் துச்சமாகத் தூக்கியயறிந்து மக்கள் சக்தியைத் தட்டியயழுப்பி அத்துடன் ஐக்கியமாகி நிற்பவர்கள். மக்கள் இயக்கங்களைத் தட்டியயழுப்புவதின் பங்கும் பகுதியுமே நாடாளுமன்ற நடவடிக்கைகள் என்ற கருத்தினையும், திடமான திட்டத்தினையும் கொண்ட அவர்கள் மக்களைத் திரட்டி எந்த அந்நிய உள்நாட்டுப் பிற்போக்கு சக்திகளின் தாக்குதலையும் சவாலையும் இனம் கண்டு முறியடிக்கும் வலிமையும் திறமையும் வாய்ந்தவர்கள்.

பிரசந்தா அலண்டேயுமல்ல;எய்டிட் பிரசந்தாவுமல்ல

எனவே சிலி, இந்தோனேசிய அனுபவங்கள் அப்படியே நேபாள மண்ணில் இடம் பெறுமளவிற்கு அனுமதிக்க தோழர் பிரசந்தா, அலண்டேயோ அல்லது எய்டிட்டோ அல்ல;அவர் தலைமை தாங்கும் அமைப்பும் முதலாளித்துவ ஜனநாயகப் பிரமை எதையும் கொண்ட அமைப்புமல்ல.
எனவே சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களின் அச்சம் அடிப்படையில்லாதது. இந்நிலையில் நாம் பொறுப்புடனும் ஆக்கபூர்வமாகவும் சிந்தித்துப் பார்த்தால் இன்றைய தங்களின் ஆதரவுக்கென வருவதற்கு எந்த சர்வதேச சக்தியும் இல்லாத நிலையில், இருக்கின்றப் புறச் சூழ்நிலையைச் சரியாகக் கணித்து, தருணங்களை முறையாகக் கையாண்டு, இன்று சமுதாய மாற்றம் குறித்து நிலவும் காரிருளில் ஒரு சிறு ஒளிக்கீற்றாக வளர்ந்து மலர்ந்து கொண்டிருக்கும் நேபாள யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சியையும் அது முன்னெடுத்துள்ள பாதையையும் இத்தனை கடுமையாக இந்திய மாவோயிஸ்ட்கள் விமர்சிப்பதற்குக் காரணம் என்ன என்ற கவலை நமக்கு ஏற்படுகிறது.

உண்மைக் காரணம்
உண்மையில் அதற்கான காரணம் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் வகுத்துள்ள வழியும் நேபாளத்தில் ஏற்படுத்தியுள்ள வளர்ச்சியும் பல கேள்விகளை இந்திய மாவோயிஸ்ட் தொண்டர்கள் மற்றும் அனுதாபிகள் முன் நிறுத்தும் வாய்ப்பினைக் கொண்டிருப்பதே என்பதை அறிய முடியும். ஏன் அவர்களைப் போல் தருணங்களைச் சரியாகப் பயன்படுத்தி ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஒட்டுமொத்த வழி முறையாகக் கொண்டிராமல் மக்கள் ஆதரவைத் திரட்டும் வண்ணம் இயக்கங்களை முன்னெடுத்து நாமும் செயல் படக் கூடாது?

10 சதவிகித பழங்குடி மக்களோடு மட்டும் முடங்கிவிட்ட செயல்பாடுகளை ஆக்கபூர்வமாக விரிவாக்கி இந்திய மண்ணிற்கு அறவே பொருந்திவராத விடுதலை பெற்ற மையங்களை ஏற்படுத்தி நகர்ப்புறங்களைத் தாக்கிக் கைப்பற்ற வேண்டும் என்ற வறட்டுச் சூத்திர வாதத்தை தூக்கியயறிந்துவிட்டு ஏன் நாம் யு.சி.பி.என் (மாவோயிஸ்ட்)கள் வழியிலிருந்து படிப்பினை எடுத்து செயல் படக்கூடாது? என்று தொண்டர்கள் மத்தியில் எழ வாய்ப்புள்ள அடிப்படையான கேள்விகளுக்குப் பதிலாகவே வறட்டுச் சூத்திரத் தன்மை வாய்ந்த இந்த வாதங்களை அக்கேள்விகள் எழும் முன்பே தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்) கள் முன்வைத்துள்ளனர்.

புறச் சூழ்நிலைக்கு புரட்சியாளர்கள் இரையாவதில்லை

மேலும் அவர்கள் கூறுவது போல் பாராளுமன்றப் பாதையும் பதவியுடன் இணைந்துள்ள ஆடம்பரங்களும், படாடோபங்களும் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)களை சீரழிக்கும் என்றால் காடுகளில் பீடி சுற்றும் இலை சேகரிக்க வருவோர், மரம் வெட்டும் ஒப்பந்தக்காரர்கள், பணக்கார விவசாயிகள், தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் வேட்பாளர்கள் ஆகியோரிடமிருந்து பெறப்படும் பணமும் கூட ஒரு வகையான ஆடம்பர மோகத்தைத் தூண்டக் கூடிய தன்மை கொண்டது தானே?
அது சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களையும் கூட ஆடம்பர மோகத்திற்கும், சபலத்திற்கும் இட்டுச் செல்ல வல்லதுதானே. இத்தகைய கேள்விகளை நடுநிலை மனநிலையுள்ள எவரும் கேட்க முடியுமல்லவா?

ஆனால் உண்மை அதுவல்ல எந்தவொரு புறச் சூழ்நிலையும் அதுவாகவே லட்சிய வேட்கை கொண்ட மனிதர்களை எந்திரகதியில் சபலத்திற்கு ஆளாக்கிவிட முடியாது. அவர்களது பொதுநல வேட்கையும், பண்புகளும் எந்த உலோகத்தால் புடம்போடப் பட்டிருக்கின்றன என்பதே அவர்கள் சபலத்திற்கு ஆட்படக் கூடியவர்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வல்லதேயன்றி வெறும் புறச் சூழ்நிலைகள் மட்டுமல்ல.

ஆயுதம் எடுப்பது மட்டுமே போராட்டம் என்றாகிவிட்டால்

மேலும் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களிடம் இத்தகைய அச்சம் தோன்றியுள்ளதற்கு வேறொரு காரணமும் உள்ளது. அதாவது மக்கள் இயக்கங்கள் இன்றி ஆயுதம் தாங்கிய செயல்பாடே ஓரே செயல்பாடு என்று ஆகிவிட்டால் அது சிவில் சமூகத்தில் நிலவும் பல்வேறு யதார்த்த நிலைகளை பார்க்க முடியாதவர்களாகவும் அவ்வாறு ஈடுபடுபவர்களை ஆக்கிவிடும். அப்படிப்பட்ட ஒரு மனநிலையின் பாதிப்பின் காரணமாகவும் கூட மக்கள் விடுதலைப் படை ஐ.நா. விடம் ஒப்படைக்கப் படுவதால் ‘முழுமையாக மக்கள் நிராயுதபாணி ஆகிவிடுவர். மக்களின் உண்மையான சக்தியே மக்கள் விடுதலைப் படையும் அவர்களிடம் உள்ள ஆயுதங்களும் மட்டுமே தான்’ என்ற எந்திரமய சிந்தனைப் போக்கு சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களிடம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மார்க்சியச் சித்தாந்தத்தை அந்நாட்டின் புறச் சூழ்நிலைகளுக்கு உகந்த வகையில் செழுமைப் படுத்தி அந்நாட்டின் உழைக்கும் மக்கள் விடுதலை குறித்த அனைத்துக் கேள்விகளுக்கும் எவ்விதப் பிசிறுமின்றி தர்க்க ரீதியாக விடையளித்து அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் இயக்கங்களின் வெற்றிகள் மூலம் உருக்குப் போன்ற மனோதிடத்தையும், செறிந்த அனுபவங்களையும் கொண்டவர்களாக உருவாக்கப்பட்டுள்ள யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)ன் நகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் ஒப்படைக்கப்பட்ட மக்கள் விடுதலைப் படையினரைப் போல் பல மடங்கு வீரர்களாக உருவெடுக்கக் கூடியவர்கள் என்பதை ஆயுதந்தாங்கிய போராட்டத்தை மட்டுமே முழுக்க முழுக்க நம்பியிருக்கக் கூடிய, தாங்கள் நிலை கொண்டிருக்கும் மலைவாழ் மக்கட்பகுதி தவிர்த்த வேறு மக்களிடையே பெருமளவு தொடர்புகள் இல்லாத சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களால் உள்ளார்ந்து உணர முடியாது.

இத்தகைய எத்தனை போதாமைகள் இருந்தாலும் நேபாளப் புரட்சியின் நலனை மனதிற்கொண்டு ஒன்றை மட்டுமாவது சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறியிருக்கக் கூடாது.

கேட்கக் கூடாத கேள்விகள்

அதாவது எந்தவொரு சமூகமாற்றப் போரிலும் சில வெளிப்படையாகப் பதில் கூற முடியாத கேள்விகள் இருக்கவே செய்யும். அத்தகைய கேள்விகளை எழுப்புவது சமூகமாற்றப் பணியைத் தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்போரைப் பொறுத்தவரை பொறுப்பற்ற போக்குமாகும். ஏனெனில் சில கேள்விகளுக்கான பதிலை அவை கேட்கப்பட்டுவிட்டனவே என்பதற்காக சமுதாயமாற்றப் பணி ஒரு கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் அதனை மென்மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற பணியை சிரமேற்கொண்டுள்ளவர்கள் கூறிவிடமுடியாது. ஏனெனில் அப்பதில்களை மையமாக வைத்து அவர்கள் பல சர்வதேச அளவிலான விமர்சனங்களையும் அவதூறுகளையும் அநாவசியமாக எதிர் கொள்ள வேண்டிவரும்.
அப்படிப்பட்ட கேள்விகளே சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் எழுப்பும் மக்கள் நிர்வாகத்தை யு.சி.பி.என்(எம்) கலைத்து விட்டது. மக்களின் விடுதலைப் படையையும், ஆயுதங்களையும் ஐ.நா. வசம் ஒப்படைத்துவிட்டது. இது போன்ற தற்கொலைக்குச் சமமான இந்நடவடிக்கைகளால் நேபாளப் புரட்சியே முடிவுக்கு வந்துவிட்டது என்பது போன்ற கூற்றுகளாகும்.

கூற முடியாத பதில்கள்

இந்த எளிமையான அனுபவம் சார்ந்த விசயம் கூட இந்திய மாவோயிஸ்ட்களுக்கு தெரியாது என்று யாரும் நம்ப முடியாது. அப்படியிருந்தும் அக்கேள்விகளை அவர்கள் எழுப்பியுள்ளதற்குக் காரணம் தற்போதுள்ள இந்நிலையில் யு.சி.பி.என்(எம்) அமைப்பினர் இதற்குப் பதில் கூறப் போவதில்லை என்பதை நன்கறிந்து கொண்டதேயாகும். ஏனெனில் ‘மக்கள் நிர்வாகத்தை எந்த நேரத்திலும் ஏற்படுத்த முடியும், உழைக்கும் வர்க்க அரசியல் தத்துவத்தால் புடம் போடப்பட்டுள்ள நேபாள மக்கள் மத்தியிலிருந்து ஒப்படைக்கப் பட்டுள்ளதைப் போல் பல மடங்கு மக்கள் விடுதலைப் படையினரை எந்நேரமும் தங்களால் உருவாக்க முடியும்’ என்ற பதிலை அவர்களால் கூறமுடியாது. ஏனெனில் அவர்கள் நடத்திக் கொண்டிருப்பது சொற்போரல்ல. வாதத்தில் கூறக் கூடாதவற்றையும் கூறுவதற்கு மேலும் சமூகமாற்றப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடியவர்கள் எந்தவகைப் பாரபட்ச மனநிலைக்கும் குருட்டுத் தனங்களுக்கும் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது. ஒரு சூழ்நிலையில் தவறானதொரு அடிப்படை அரசியல் வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டால் கூட நடைமுறை அனுபவங்கள் உணர்த்தும் போது அதிலிருந்து படிப்பினை எடுத்துக் கொண்டு வழிமுறையை ஒட்டுமொத்தமாகவோ அல்லது தேவைப்படும் அளவிற்கோ மாற்றிக் கொள்ளத் தயங்கக் கூடாது.

மாவோயிஸம் மார்க்சிஸப் பார்வையில்

உள்ளபடியே மாவோயிஸம் என்ற சொற்பிரயோகமே அடிப்படை மார்க்சிஸத்தின்படி சரியானதல்ல. அனைத்து சமூகமாற்றச் சிந்தனைகளுக்கும் அடிப்படையானது மாமேதை மார்க்ஸ் முன்வைத்த சமூகமாற்றக் கண்ணோட்டமே. முதலாளித்துவச் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதை அடிப்படையாகக் கொண்டிருந்த அக்கண்ணோட்டம் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ந்து சமூகமாற்றச் சிந்தனைப் போக்கிலும், நடைமுறைகளிலும் தீவிரமான செழுமைப் படுத்துதலை வேண்டிய தருணத்தில் அதற்குகந்த வகையில் மாமேதை லெனினால் செழுமைப்படுத்தப்பட்டது. லெனினது அந்தப் பங்களிப்பு கணக்கிலெடுத்துக் கொள்ளப் படவில்லையயனில் சமூகமாற்றப் போரே, மாறிய சூழ்நிலையில் சாத்தியமல்ல என்ற சூழ்நிலை உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஏற்பட்டது.
அவ்வேளையில் அதுவரை மார்க்சிஸமாக இருந்த கம்யூனிஸக் கண்ணோட்டம் மார்க்சிஸம் லெனினிஸமாக ஆயிற்று. அதாவது ஏகாதிபத்தியக் காலட்டத்தின் மார்க்சிஸமே மார்க்சிஸம் லெனினிஸம் என்றாயிற்று. இன்றுவரை சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதும் ஏகாதிபத்தியமாக வளர்ச்சி யடைந்துள்ள முதலாளித்துவமே. அதனைத் தாண்டிய முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கு எதுவும் இன்றுவரை இல்லை. மேலும் ஏகாதிபத்தியமே முதலாளித்துவத்தின் இறுதிக் கட்டம் என்பதால் இன்றைய காலகட்டப் புரட்சியின் சாராம்சமே ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியும் என்பதாக ஆகிவிட்டது. எனவே மார்க்சிஸமும் லெனினிஸமும் உலகம் முழுவதும் பொருந்தக் கூடிய அடிப்படைத் தன்மை வாய்ந்தது.
ஆனால் இந்த நிலையிலும் கூட நாட்டிற்கு நாடு பல செழுமைப் படுத்தல்கள் அந்தந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் தலைமைகளால் நிச்சயம் செய்யப்படும். அதாவது அந்தந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டு சிந்தனைப் போக்கின் நிதர்சன வெளிப்பாடுகளாக இருக்கக் கூடிய தலைவர்கள் மூலம் அந்த செழுமைப் படுத்துதல்கள் நடைபெறும். கம்யூனிஸ ரீதியிலான சமூக மாற்றங்கள் சர்வதேசத் தன்மை பொருந்தியவை. எனவே அத்தகைய செழுமைப் படுத்துதல்கள் பிறநாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்துக் கொள்ளும் தன்மையையும் தகைமையையும் ஓரளவு கொண்டிருக்கும். ஆனால் மார்க்சிஸம் லெனினிஸத்தைப் போல் உலகம் முழுவதும் பொருந்திவரக் கூடிய அடிப்படைத் தன்மை வாய்ந்தவையாக அவை இராது. அதனால் அத்தகைய சிந்தனைகள் அனைத்தும் ‘இஸ’மாக ஆகிவிடாது.

மாவோவின் வழங்கல் மாவோ சிந்தனையே

அந்த அடிப்படையில் மகத்தான சீனப் புரட்சி அனுபவங்கள் மூலம் மாபெரும் தலைவர் மாவோ வழங்கியது ஒரு அருமையான சிந்தனையாகும். இருந்தாலும் லெனினிஸத்தைப் போல் உலகப் புரட்சிக்கு வழிகாட்டும் பொதுத்தன்மையைக் கொண்டதல்ல அது. எனவே சீனாவில் அமல் செய்யப்பட்டதும் மார்க்சிஸம் லெனினிஸம் மற்றும் மாவோவின் சிந்தனைகளே தவிர மாவோயிஸம் அல்ல.
தன்னடக்கத்தின் இலக்கணம் தோழர் மாவோ அவர்களே தன்னுடைய வழங்கலை மாவோயிஸம் என்று கூறுவதை வரவேற்கவில்லை. மாவோவின் ஒரு காலத் தோழராகவும் அதன் பின்னர் துரோகியாகவும் மாறிய லின்பியாவோவே மாவோயிஸம் என்ற கண்ணோட்டத்தை முன்வைத்தார். மாவோ அதன் பின்னர் அது தவறு என்பதைச் சுட்டிக் காட்டியதோடு தன் வழங்கல் குறித்து புரட்சியாளர்களுக்கே உரித்தான ஒரு இலக்கணம் வகுத்தாற் போன்ற தன்னடக்கத்துடன் கூறினார்: ‘நான் என்னைப் பற்றி ஏதாவது கூற முடியுமானால் நான் கூற முடிந்தது இதுதான். அதாவது நான் ஒரு நல்ல ஆசிரியன் என்பது தான்’ என்றார். அவ்வாறு மாவோ அவர்களால் முன்வைக்கப் படாத மாவோயிஸம் என்ற கண்ணோட்டத்தை அடிப்படை வழியாக ஏற்றுச் செயல் பட்டாலும் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)கள் யதார்த்த சூழ்நிலை அதன் அமலாக்கலுக்கு ஒத்து வராத தன்மையை முன்நிறுத்திய போது அதிலிருந்து படிப்பினை எடுத்துக் கொண்டு தங்கள் வழியைச் சரிசெய்து கொள்ளத் தயங்கவில்லை.

ஒருங்கிணைந்த எழுச்சி

அதனால் தான் கிராமப்புறங்களில் விடுதலை மையங்களை அதன் உண்மையான அர்த்தத்தில் ஏற்படுத்த முடிந்த அவர்களுக்கு நகர்ப் புறங்களைத் தாக்கிக் கைப்பற்றுவது என்ற அதன் அடுத்த பகுதி நடைமுறை சாத்திய மற்றதாகத் தோன்றிய போது அதனை மாற்றிக் கொண்டது மட்டுமின்றி கிராமப் புறங்களில் நடக்கும் இயக்கத்தோடு கூடவே நகர்ப்புற எழுச்சியை உருவாக்கும் ஒருங்கிணைந்த எழுச்சிக் கண்ணோட்டத்தைப் பின்பற்ற வேண்டியதே இன்றைய தேவை என்பதையும் தயங்காமல் முன் வைத்தனர். சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களின் கடும் தாக்குதலுக்கு இந்த ஒருங்கிணைந்த எழுச்சிக் கண்ணோட்டமும் இலக்காகியுள்ளது. அதாவது தாங்கள் கடைப்பிடிக்கும் குருட்டுத்தனத்தைக் கடைப்பிடிக்காத அனைவரையும் அந்தக் குருட்டுத்தனத்துடன் ஒத்துப் போகாத அனைத்தையும் விமர்சிப்போம் என்ற அளவிற்கு அவர்களின் போக்கு அதிதீவிரமடைந்துள்ளது.

முழக்கங்களின் முக்கியப் பங்கு

எந்தவொரு இயக்கத்திலும் சமுதாய மாற்றப் பணியைச் செயல்படுத்தும் சக்திகளால் தருணங்களுக்கு ஏற்ற வகையில் எழுப்பப்படும் முழக்கங்கள் முக்கியப் பங்கினை வகிக்கின்றன. எவ்வாறு முதல் உலகப் போர் சூழ்நிலையில் ரஷ்யாவின் அனைத்து அமைப்புகளும் அனைத்துச் சக்திகளையும் போர் முனையை நோக்கித் திருப்புவோம் என்று முழக்கமிட்ட வேளையில் லெனினால் தலைமை தாங்கப்பட்ட ஆர்.எஸ்.டி.எல்.பி.(போல்ஷ்விக்) ‘அமைதியும் ரொட்டியுமே’ இன்றைய தேவை என்பதை முன்வைத்ததோ அதைப்போல் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)கள் ‘சிவில் நிர்வாகத்தின் மேலாண்மை’ என்ற கண்ணோட்டத்தைத் தற்போது மிகச் சரியாக முன்வைத்துள்ளனர். அதைப்போல் பதவியைத் தூக்கியயறிந்த பின் மீண்டும் யாருடன் எந்த சந்தர்ப்பவாத உடன்பாட்டைச் செய்து பதவிக்கு வரலாம் என்ற அனைத்து முதலாளித்துவ நாடாளுமன்ற வாதிகளும் கடைபிடிக்கும் வழியிலிருந்து 100 சதவீதம் மாறுபட்டு மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டும் பணியில் நேபாள சமூகத்தின் பிரத்யேகத் தன்மைகளை மையமாக வைத்து சுயாதிகாரம் கொண்ட மாநிலப் பகுதிகளை அறிவித்துக் கொண்டுள்ளனர்.

சுயாதிகார மாநிலங்கள் அடையாளப்பூர்வ அமைப்புகள்

ஆட்சியதிகாரம் மாதவ் குமார் நேபாள் தலைமையில் ஷேக்ஸ்பியரின் நான்காம் Hendri நாடகத்தில் வரும் பால்ஸ்டாப்பின் படைகளைப் போல் தலையயது முண்டமெது என்று அறியாமல் நகைப்பிற்கிடமாகி நிற்கும் வேளையில் உண்மையான மக்கள் அதிகாரத்தை நேபாளத்தின் பல பிராந்தியங்களில் இருக்கும் பெரும்பான்மை இனப்பிரிவுகளைக் கணக்கில் கொண்டு உருவாக்கிச் செயல்படும் உயிர்த்துடிப்புள்ள மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டும் பணியில் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)கட்சி மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டுள்ளது. அதையும் மக்களைத் திரட்டி அவர்களின் மகத்தான ஆதரவோடு செயல்படுத்திக் கொண்டுள்ளது.
இரண்டு அதிகார மையங்களின் உதயம்

இந்தப் போக்கும் உருவாக்கப்படும் மக்கள் அதிகார அமைப்புகளும் இரண்டு அதிகாரமையங்கள் தோன்றியுள்ளதைப் புலப்படுத்துகின்றன. வரலாற்றில் இச்சூழ்நிலைக்கான முன்மாதிரியைப் பார்க்க வேண்டுமானால் புரட்சியின் போது ரஷ்யாவில் லெனினால் தலைமை தாங்கப்பட்ட கட்சி முன்னுரிமை கொடுத்து உருவாக்கி, டூமா என்ற பெயரலவிலான அதிகாரம் கொண்ட நாடாளுமன்றத்திற்கு எதிராக நிறுத்திய சோவியத்துகளையே நாம் நினைவுகூற வேண்டியிருக்கும்.யு.சி.பி.என் (மாவோயிஸ்ட்) கள் கடைப்பிடிக்கும் இந்தச் சரியான அணுகுமுறை , வர்க்க ரீதியான பிளவினை சமூகம் முழுவதுமே ஏற்படுத்தவல்லதாக உள்ளது. இது இடதுசாரி என்று வார்த்தையிலும் வலதுசாரியாக நடை முறையிலும் உள்ள பல்வேறு கட்சிகளிலும் கூட செங்குத்தான பிளவினை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மஸ்ஸால் அமைப்பின் இணைப்பு பிற்போக்குத் தனத்தின் பிரதிபலிப்பா மேலும் யு.சி.பி.என்(எம்)ன் ஆக்கபூர்வ அணுகுமுறை சி.பி.என்(மஸ்ஸால்) கட்சியினர் போன்ற மாவோயிஸம் என்பதை ஏற்றுக் கொள்ளாத கட்சிகள் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) உடன் இணையும் ஒரு ஆரோக்கியமான போக்கையும் ஏற்படுத்தியுள்ளது. நடைமுறையிலிருந்து படிப்பினை எடுத்துக் கொண்டு நேபாளப் புரட்சியையும் அதன் செறிந்த அனுபவங்கள் மூலம் மார்க்சிஸக் கருத்துக் கருவூலத்தையும் ஜாம் ஜாமென முன்னெடுத்துச் செல்லும் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) அமைப்பு ஒரு கட்டத்தில் மாவோயிஸ்ட் என்ற பெயரைக் கட்சியின் பெயருக்குப் பின்னால் வைத்திருப்பது பொருத்தமுடையது தானா என்ற அளவிற்குக் கூட மிகச் சரியான அடிப்படை மார்க்சிஸ வழியின்படி சிந்திக்கத் தொடங்கியது. அதாவது குருட்டுப் பிடிவாத வாதங்களுக்கு இடமளிக்காத விதத்தில் அந்த அளவிற்குச் செல்லக்கூட அக்கட்சி தயாராக இருந்தது.

அந்த அளவிற்குத் திறந்த மனநிலையோடு மார்க்சிஸ்டுகள் இருப்பதே இன்றைய காலகட்டத்தின் தேவை. இதை உணராது மஸ்ஸால் குழுவினர் போன்ற பிற்போக்கு வாதிகளைத் தங்களோடு இணைத்துக் கொண்டது இன்னுமொரு தவறான நடவடிக்கை என சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) களைக் குறை கூறுகின்றனர். மஸ்ஸால் குழுவினரைப் பிற்போக்குப் பிரிவினர் என்று மட்டும் கூறுகின்றனரே தவிர அவர்கள் எடுத்த எந்ததெந்த நடவடிக்கைகளில் அவர்கள் பிற்போக்காளர்கள் என்று கூறவில்லை.
அத்துடன் நாடாளுமன்ற அரசியலில் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) அமைப்பினர் தனது அத்தனை முக்கியத் தலைவர்களையும் ஈடுபடுத்துகின்றனர் என்றும் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்) கள் குறை கூறுகின்றனர்.

ஏகாதிபத்தியப் போக்கே விரிவாக்கவாதம்

அதாவது நேபாளத்தைப் போன்ற இந்தியாவைவிடப் பற்பல மடங்கு தொழில் ரீதியாகப் பின் தங்கிய நாட்டிலேயே மாவோவின் வழிமுறைகள் அப்படியே அசலும் நகலுமாகக் கடைப்பிடிக்க முடியாதவை என்று யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)கள் கருதும் வேளையில் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து அது ஏக போகங்கள் பல வளர்வதற்கு வழிவகுத்து இன்று ஏகாதிபத்தியமாக மாறி நேபாளம் போன்ற நாடுகளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கோடு செயல்படும் இந்தியாவை விரிவாக்க வாதம் கொண்ட நாடு என்று அழைத்துக் கொண்டே இங்கு தாங்கள் நடத்த விரும்புவது மாவோவின் வழிமுறையிலான புரட்சியே, அதாவது தங்களது போர்த் திட்டம் கிராமப் புறங்களில் விடுதலை மையங்களை அமைத்து நகர்ப்புறங்களைத் தாக்கிக் கைப்பற்றுவதே என்று எந்தவகைப் பகுப்பாய்வாலும் நிறுவ முடியாத குருட்டு மற்றும் வறட்டுச் சூத்திர வாதத்தினைக் கடைப்பிடிப்பவர்களாக இருக்கும் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் தாங்கள் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)கள் இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்போம் என்ற அடிப்படையில் முன்வைக்கும் வாதமே இது.

இந்தியா ஏகாதிபத்தியம் என்ற கருத்தை முன்வைத்தால் தாங்கள் கூறும் அடிப்படை அரசியல் வழியான மக்கள் ஜனநாயகப் புரட்சி இந்தியாவிற்கு ஒத்துவராமல் போய்விடும் என்பதால் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் விரிவாக்க வாதம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இன்று உலகில் நிலவுவது மன்னராட்சி அல்ல. எனவே அனைத்து விரிவாக்க வாதங்களுமே ஏகாதிபத்தியப் போக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாகின்றனவே தவிர, முதலாளித் துவம் ஏகாதிபத்தியம் ஆகியவற்றோடு தொடர்பில்லாத விரிவாக்கவாதம் என்று எதுவும் இன்றைய உலகச் சூழ்நிலையில் இருக்க முடியாது.

எவரை, எதற்கு நியமிப்பது என்பது யாரின் உரிமை

இந்நிலையில் தன்னுடைய தலைவர்களில் யாரை, எதற்கு நியமிப்பது என்பதை அந்த நாட்டில், நிலவும் சூழ்நிலையையயாட்டி அந்த நாட்டின் கம்யூனிஸ்ட் அமைப்புதான் முடிவு செய்ய முடியுமே தவிர வேறொரு நாட்டின் கம்யூனிஸ்ட் அமைப்பு முடிவு செய்ய முடியாது. இந்த வாதத்தின் மூலம் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூற வருவது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும். அதாவது நாடாளுமன்ற வாதமும், பதவி ஆசையும் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) அமைப்பை ஆட்டிப் படைக்கத் தொடங்கிவிட்டன. எனவே தான் அனைத்துத் தலைவர்களும் நாடாளுமன்ற அரசியலில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதாகத்தான் அது இருக்க முடியும்.

பதவி விலகல் அளிக்கும் பகிரங்கப் பதில்

அப்படியானால் ஏன் ஜனாதிபதியின் ஜனநாயக விரோத நடவடிக்கையான கொத்தவாலை பதவியில் நீடிக்கச் செய்வது என்ற நிலையினை எதிர்த்து பிரசந்தா முதல் அனைவரும் பதவி விலக வேண்டும்? பதவி ஆசையும் நாடாளுமன்ற வாதமும் தான் அவர்களை வழி நடத்துகிறதென்றால் யாராலும் மறுக்க முடியாத வகையிலான அத்தகைய சிறந்த முடிவை எப்படி அவர்கள் எடுக்க முடியும் என்ற கேள்விகளை சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்) அமைப்பினர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உண்மையில் சில பதவி விலகல்கள் பல பதவி ஏற்புகளை விட மக்கள் இயக்கத்தில் மகத்தான பங்கினை வகிக்கின்றன என்பதை யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களின் பதவி விலகல் நிரூபித்துள்ளது. அனைத்து அதிகாரமும் கொண்டது என்று தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் நாடாளுமன்றம் முடங்கிப் போயுள்ளது. திருடர்களுக்குத் தேள் கொட்டியதைப் போல் பதவிப்பித்துப் பிடித்துத் தற்போது பதவி நாற்காலிகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்போர் எந்த விவாதத்தையும் பரந்துபட்ட மக்கள் மத்தியில் நிறுவ முடியாதவர்களாக பேச்சு மூச்சற்றுக் கிடக்கின்றனர். பதவி விலகியவர்களால் மக்கள் மத்தியில் உருவாக்கப்படும் எழுச்சி பலகட்டப் பிரச்சார கட்டங்களைத் தாண்டி தற்போது அடையாளப் பூர்வமாக சுயாதிகார மாநிலங்கள் அமைக்கும் பணியை வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கிறது.

மார்க்சிஸம் ஒரு உன்னதமான தத்துவம். ஏனெனில் அது சமூகத்தில் அடிப்படை நீதியையும் நியாயத்தையும் கொண்டுவருவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அது விஞ்ஞானபூர்வமானது. ஏனெனில் சமூகத்தில் தோன்றும் அனைத்து வளர்ச்சிப் போக்குகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு அது தன்னை வளர்த்துக் கொள்கிறது. எனவே அது காலாவதியாகும் என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் நின்று நிலவுகிறது. மார்க்சிஸம் மட்டுமே இன்றைய கால கட்டத்தில் உண்மையை உயர்த்திப் பிடிக்கிறது. மார்க்சிஸம் மட்டுமே நிகழ்வுகளை அதன் ஓட்டத்தில் கணிக்கிறது. இந்தத் தன்மைகளால் ஒவ்வொரு நாட்டிலும் அவற்றின் சூழ்நிலைகளுக்கு உகந்த வகையில் பல்வேறு போர்த்திட்டங்களை வகுத்தெடுக்கவும், செயல்படுத்தவும் மார்க்சியப் பார்வை உதவுகிறது. அதன் கருத்துக் கருவூலத்தில் மாவோ கனவுகண்ட நூற்றுக் கணக்கான புத்தம் புது மலர்களை அது பூத்துக் குலுங்கச்செய்து கொண்டுள்ளது.
அவ்விதத்தில் மிக நீண்ட காலத்திற்குப் பின் நேபாள மண்ணில், இந்த சமூகம் மாறாதா? அநீதிகள் அழிவதற்கு வாய்ப்பே இல்லையா? சுரண்டல் மனிதகுல வறலாற்றில் என்றென்றும் அழித்தொழிக்க முடியாமல் நிலைபெற்று விடுமா? என்று சோவியத் யூனியன் மற்றும் பல சோசலிஸ்ட் நாடுகளின் மறைவிற்குப்பின் ஏங்கிக் கொண்டிருந்தவர்களின் மனதில் பால் வார்ப்பதாக யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களின் பல நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இன்று அதன் உதவிக்கு வர சோசலிச நாடு என்று எதுவும் இல்லாத நிலையில் உலக முதலாளித்துவ சக்திகளின் அவதூறுப் பிரச்சாரங்கள் பலவற்றிற்கு இடமளிக்காத விதத்தில் சாதுர்யமாக அக்கட்சியினர் செயல்பட்டுக் கொண்டுள்ளனர். ஏகாதிபத்திய நாடுகளின் தலையீடு அங்கு ஏற்பட்டால் அந்நாடுகள் உலக அரங்கில் அப்பட்டமான விதத்தில் ஆக்கிரமிப்பாளர்கள், ஜனநாயக விரோதிகள் என அம்பலமாகும் விதத்தில் சாதுர்யமாக தங்கள் நடவடிக்கைகளை வகுத்தெடுத்து அவர்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளனர். எப்படியிருந்தாலும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இன்றைய உலக முதலாளித்துவம், நெருக்கடியிலிருந்து மீள நேபாளம் முன்னிறுத்தும் அடிப்படையில் சோசலிசத் தன்மை வாய்ந்த வழியிருக்கிறது என்பதை உழைக்கும் மக்கள் உணர்ந்து அந்தப் பதாகையின் கீழ் அணிதிரள்வதை எப்பாடு பட்டும் தடுக்கவே முயலும்.

ஆதரவாக அணிதிரள்வோம்

எனவே உலகத் தொழிலாளி வர்க்கம் நேபாளப் புரட்சிக்கு ஆதரவாக ஒருமித்த குரலில் அணிதிரளவேண்டும். அதன் பங்கும் பகுதியுமாக இருக்கக் கூடிய இந்திய உழைக்கும் வர்க்கத்திற்கு இதில் கூடுதல் பங்கிருக்கிறது. அதாவது அதற்கு மிக அருகாமையில் உள்ள நாட்டின் உழைப்பாளிகள் என்ற ரீதியில் இன்னும் தீவிரமாகவும் தீர்க்கமாகவும் நமது குரலை நேபாளப் புரட்சிக்கு ஆதரவாக நாம் ஒலிக்கச் செய்ய வேண்டும். தாங்கள் கடைப்பிடிக்கும் குருட்டுத்தனம் வறட்டுச் சூத்திர வாதம் போன்ற வண்ணக் கண்ணாடிகள் மூலம் நேபாள நிகழ்வுகளைப் பார்த்து சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் முன்வைக்கும் உண்மைக்கு புறம்பான படப்பிடிப்புகளை, மார்க்சிய ரீதியான வாதங்களை முன்வைத்து அம்பலப்படுத்தி அவற்றின் செல்வாக்கில் தேங்கி நின்று விடாமல் இந்திய உழைக்கும் வர்க்கத்தைக் காக்கவும் செயல்பாட்டில் இறக்கிவிடவும் நாம் இடைவிடாது பணியாற்ற வேண்டும். அதன் மூலம் மட்டுமே வரலாறு நம் தோள்களில் சுமத்தியுள்ள கடமையைச் செய்தவர்களாக நம்மால் ஆக முடியும்.

பயங்கரவாதிகள் என சித்திரிக்கப்பட இடம் கொடுக்கும் போக்கு
அதே சமயத்தில் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்) அமைப்பிலுள்ள நேர்மையான தோழர்களும் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) இயக்கம் மார்க்சியத்தை ஆக்கபூர்வமாக அவர்களது நாட்டில் அமுலாக்கும் போக்கிலிருந்து படிப்பினை எடுத்துத் தங்களது பிடிவாதவாதப் போக்கை அடையாளம் காண வேண்டும். மக்கள் இயக்கப் பாதையைக் கடைப் பிடிக்காது பரந்துபட்ட மக்களிடமிருந்து தனிமைப்பட்டு நிற்பதோடு கம்யூனிஸ்டுகளே பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கப் படுவதற்கு ஏதுவான ஒரு சூழ்நிலையை உருவாக்கும் அக்கட்சியின் போக்கை மாற்ற முயல வேண்டும். மேலும் ஒரு தவறான அடிப்படை அரசியல் வழியை விடாப் பிடியாகக் கடைப்பிடிப்பதால் எத்தனை அரிய உயிர்கள் வீணாகப் பலியாகிக் கொண்டுள்ளன; பொது வாழ்க்கையில் ஈடுபடத் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் முன்வரும் நிகரற்ற இளைஞர்களைக் கொண்டு இன்று இந்திய முதலாளித்துவம் முன்னிறுத்தும் அனைத்து அவலங்களையும் எதிர்த்து மகத்தான மக்கள் இயக்கங்கள் கட்ட முன்வந்தால் இந்திய உழைக்கும் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும் மகத்தான சோசலிச சமூக மாற்றம் எத்தனை விரைவில் ஏற்படும் என்பதையும் எண்ணிப் பார்த்து மார்க்சிய அடிப்படையில் சரியான முடிவுகளை தயங்காது எடுக்க அவர்கள் முன்வரவேண்டும்.

பொதுத் தொழிலாளர் அமைப்பின் வரலாற்றுப்பூர்வ உதயம்

விருதுநகர் மாவட்ட பொதுத்தொழிலாளர் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் சிவகாசி சேர்மன்சாமி கல்யாண மண்டபத்தில் 15.11.2009 அன்று நடைபெற்றது. பல உதிரித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களைத் தொழிற்சங்க வட்டத்திற்குள் கொண்டு வருவதற்காகத் தொழிற்சங்கம் ஒன்றினைப் பதிவுசெய்யும் முயற்சி கடந்த பல ஆண்டுகளாகவே உழைக்கும் மக்கள் போரட்டக் கமிட்டித் தோழர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பல்வேறு தொழிலாளர் துறையினரின் முன்நிபந்தனைகளை நிறைவு செய்தபின்பு அச்சங்கத்திற்கு பதிவு கிட்டியது. உடனேயே எவ்விதத் தாமதமும் இன்றி உழைக்கும் வர்க்கப் பணியினைக் கையிலெடுக்கும் முகமாக இந்த முதல் பொதுக்குழுக் கூட்டம் உரிய தயாரிப்புகளுடன் நடத்தப்பட்டது.

சகோதர அமைப்புகளின் பங்கேற்பு

கூட்டத்தில் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் தவிர இவ்வட்டார உழைக்கும் வர்க்கப் பணியில் நீண்டகாலமாகத் தங்களை ஈடுபத்திக் கொண்டிருந்த பழைய தோழர்கள் பலரும் உணர்வுப் பெருக்குடன் வந்து கலந்து கொண்டனர். அவர்கள் தவிர அரசு ஊழியர் அமைப்புகளின் சார்பாகவும் பொதுத்துறை ஊழியர்களின் சார்பாகவும் முக்கியத் தோழர்கள் சிலரும் பங்கெடுத்து வாழ்த்துரை வழங்கினர். அரசு அமைத்துள்ள பல்வேறு வாரியங்களில் இன்னும் உறுப்பினராகச் சேர்க்கப்படாதிருக்கும் இவ்வட்டார உடல் உழைப்பு சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பலரையும் உறுப்பினர் ஆக்குவதற்காகவும் ஏற்கனவே பதிவு செய்து கொண்டுள்ள பல்வேறு தரப்புப் பாடுபடும் மக்களின் பதிவுகளைப் புதுப்பித்து அவர்கள் பெறவேண்டிய பலன்களை பெறுவதில் முட்டுக்கட்டை எதுவும் இல்லாமல் செய்வதை முக்கிய நோக்காகக் கொண்டும் செயல்பட உறுதிபூண்டிருக்கும் இவ்வமைப்பின் முதல் கூட்டத்தில் உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர். வரதராஜ், பட்டாசுத் தொழிலாளரின் முக்கியத் தலைவர் தோழர். தங்கராஜ், காமராஜர் மாவட்ட அச்சகத் தொழிலாளர் அமைப்பின் செயலாளர் தோழர். செல்வராஜ், மாற்றுக் கருத்து இதழின் பதிப்பாசிரியரும் அமைப்பின் சட்ட ஆலோசகருமான தோழர்.த.சிவக்குமார், கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடையின் மாநில அமைப்பாளர் தோழர்.ஆனந்தன் ஆகியோரும் அரசு ஊழியர் தரப்பிலிருந்து தோழர். சத்தியமூர்த்தி, பொதுத்துறை ஊழியர் அமைப்பின் பிரதிநிதி தோழர். ஜெயக்குமார் ஆகியோரும் கருத்துரையும் வாழ்த்துரையும் வழங்கினர்.

உரையாற்றிய தோழர்களின் ஆதங்கம்

பெரும்பாலான தோழர்கள் தங்களது உரைகளில் தற்போதுள்ள அரசு, பொதுத்துறை மற்றும் உற்பத்தித்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் எவ்வாறு அரசியல் இலக்கு எதுவும் இல்லாதவையாக நடைமுறைப் பிரச்னைகளை மட்டும் அணுகுகிறோம் என்ற பெயரில் சந்தர்ப்பவாதப் போக்கில் செயல்படுபவையாக மாறிவிட்டன என்பதையும் நாம் உருவாக்கியுள்ள இந்த அமைப்பு அதிலிருந்து முழுமையாக மாறுபட்டதாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.


அடிப்படை அரசியல் வழித் தவறே சீரழிவிற்குக் காரணம்

இறுதியில் சிறப்புரையாற்றிய தோழர். ஆனந்தன் தனது உரையில் பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார். தோழர்கள் முன்வைத்த விதத்தில் அரசு, பொதுத்துறை மற்றும் உற்பத்தித்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் இன்றிருப்பதுபோல் அத்தனை சந்தர்ப்பவாதப் போக்கு வாய்ந்தவையாக அவை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருக்கவில்லை. பல அப்பழுக்கற்ற தலைவர்களைக் கொண்டவையாகவே அவை இருந்தன. அப்படியிருந்தும் அவை இன்று இந்த சீரழிந்த நிலையில் இருப்பதற்கான காரணம் என்ன? அக்காரணம் அந்த அமைப்புகளை வழிநடத்திய அடிப்படை அரசியல் வழி தவறானதாக இருந்தது தான். விடுதலை பெற்றபின் இந்திய அரசின் அதிகாரத்திற்கு வந்த முதலாளி வர்க்கத்தை அவை தமது முக்கிய எதிரியாகக் கருதத் தவறிவிட்டன. விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்த அமைப்புகளை வழிநடத்திய கட்சிகள் ஏகாதிபத்திய முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எதிராக மட்டுமே பெரும்பாலும் தங்களது போராட்டக் கூர்முனையை திருப்ப வேண்டும்; நமது சுதேசி முதலாளிகள் நடத்தும் தொழிற்சாலைகளில் அத்தனை உக்கிரமான போராட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்ற எந்திரகதியிலான நிலைபாட்டினை தாங்கள் நடத்துவது அடிப்படையில் முழுக்க முழுக்க அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டமே என்ற கோணத்திலிருந்து எடுத்தன. அதன் பின்னர் விடுதலை பெற்றபின்னரும் கூட பலகாலம் இந்தியா இன்னும் விடுதலை பெறவில்லை என்ற கண்ணோட்டத்தையே கூறி தனது சுரண்டல் ஆட்சியை நிறுவி மக்களை முழுவீச்சுடன் சுரண்டத் தொடங்கியிருந்த சுதேசி முதலாளி வர்க்கத்தை மூடுதிரைபோட்டு மறைத்தன. இந்தியா விடுதலைபெற்ற ஒரு நாடு என்ற கருத்து ஐக்கிய நாடுகள் சபையில் சோவியத் பிரதிநிதியால் முன்வைக்கப்பட்டதற்குப் பின்பே நமக்குக் கிடைத்தது விடுதலைதான் என்பதை ஏற்றுக்கொண்டனர். அதன் பின்னரும் கூட இந்தியா ஒரு அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவ நாடு என்ற கண்ணோட்டத்தைக் கொண்டு அச்சூழ்நிலையில் நாம் நடத்தவேண்டிய சமுதாய மாற்றப் போரில் தேசிய முதலாளிகள் நேச சக்திகள் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தனர். இந்தப் பார்வையின் காரணமாக தனியார் முதலாளித்துவம் கோலோச்சிய உற்பத்தித் துறைகளில் அங்கிருக்கும் தொழிலாளரின் வற்புறுத்தலே அவர்கள் அமைப்பை ஏற்படுத்துவதற்கு ஆதாரமாக இருந்தது. அதனால் அவை சீர்திருத்தவாதத் தொழிற்சங்கங்களாகச் செயல்படத் தொடங்கின. முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவிபுரிய அரசுத்துறையில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை முதலாளித்துவ லாபநோக்கோடு அவை நடத்தப்பட்ட போதும் அவற்றை சோசலிசத்தின் கூறுகள் என்று இந்த அமைப்புகள் பார்த்தன. இந்தப் பார்வையிலிருந்த அடிப்படைக் கோளாறே இச்சங்கங்களை வழிநடத்திய கட்சிகள் தேர்தல் அரசியலில் சமுதாய மாற்றக் கண்ணோட்டத்தைத் தூக்கியயறிந்துவிட்டு நடைபயிலத் துவங்கிய வேளையில் முழுக்க முழுக்கத் தொழிற்சங்கங்கள் இன்று இருக்கும் சீரழிந்த நிலைக்கு ஆளாக்கியது.

சரியான அடிப்படை அரசியல் வழியைப் பிசிறின்றிப் பிடித்து நிற்பதன் அவசியம்

எனவே நமது தொழிற்சங்கம் இத்தகைய சீரழிவிற்கு ஆட்பட்டுவிடக் கூடாது என்று நாம் விரும்பினால் நம்மை வழிநடத்தும் அடிப்படை அரசியல் வழியையும் குறிக்கோளையும் எந்தவகைப் பிசிறும் இல்லாத விதத்தில் தற்போது ஆட்சியிலிருக்கும் இந்திய தேசிய முதலாளி வர்க்கத்தை எதிர்த்ததாக வைத்திருக்க வேண்டும். தொழிலாளிகளின் பாதிப்புகளுக்கே முன்னுரிமை தரவேண்டுமே தவிர அவர்களை பாதிப்பிற்கு ஆளாக்கும் முதலாளிகள் பெரிய முதலாளிகளா அல்லது சிறிய முதலாளிகளா என்று பார்க்கும் அவசியமற்ற வேலையில் ஈடுபடக் கூடாது. சிறிய முதலாளிகள் பெரிய முதலாளிகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அவர்களை எதிர்த்துப் போராடித் தங்களது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது சிறிய முதலாளிகளின் வேலை; அது நமது வேலையல்ல.


இயக்கப் போக்கிற்கு சமரசப்பேச்சு மெக்கானிஸம் அடித்த சாவுமணி

அடுத்ததாக இயக்கப் பாதையினை உறுதியாக இடைவிடாமல் பின்பற்ற வேண்டும். ஸ்தாபன ரீதியாக ஒருங்குதிரட்டப்பட்ட தொழிற்சங்கங்கள் இயக்கப் பாதையைவிட்டு ஒதுங்கிவிட்டதற்கு ஒருகாரணம் அற்றில் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் சமரசப் பேச்சுவார்த்தை மெக்கானிஸம் ஆகும். உதிரிப் பிரச்னைகளின் தீர்வுக்கு மட்டுமே வழிவகுக்கும் அந்த மெக்கானிஸம் அந்நிறுவனங்களின் நிர்வாகங்களின் மேல் பொய்யான நம்பிக்கையினை ஏற்படுத்தி இயக்கப் போக்கிற்குச் சாவுமணியடித்துவிட்டது.

இலவசத் திட்டங்களின் சுருங்கிவரும் வாழ்நாள்

நிவாரணத்திட்டங்களால் மதிமயங்கி நிற்கும் மக்கள் இயக்கப் பாதைக்கு எப்படி வரப்போகிறார்கள் என்பது இன்று ஒரு அவநம்பிக்கையூட்டும் கேள்வியாக நம்முன் எழுந்து நிற்கிறது. உலகமயம் இன்று பலரும் கூறுவதைப் போல் வளர்முக நாடுகளுக்கு எதிரான அம்சங் களை மட்டுமே கொண்டிருக்கவில்லை. அது இந்தியா போன்ற நாடுகளில் கிடைக்கும் மலிவான உழைப்புத் திறனைப் பயன் படுத்த அந்நிய முதலீடுகளை காந்தம் போல் கவர்ந்திழுக்கவும் செய்துள்ளது. அந்நிறுவனங்கள் கொள்ளையடித்துப் பொருள் குவிக்க மத்திய, மாநில அரசுகள் பேருதவி செய் கின்றன. ஆனால் அதே வேளையில் அந்நிறு வனங்களின் மூலமாகக் கிடைக்கும் வரி வருமானத்தைக் கொண்டே அரசுகள் இந்த இலவசத் திட்டங்களை அமல்படுத்துகின்றன.

இன்று முதலாளித்துவப் பொருளாதாரம் நெருக்கடிக்கு ஆட்பட்டுள்ள சூழ்நிலையில் மூலதனத்தின் வரவும் வருமானமும் குறையும் நிலையில் அரசு அறிவித்த பல்வேறு இலவசச் சலுகைத் திட்டங்கள் வெகுவிரைவில் திரும்பப் பெறப்படப் போகின்றன. அதன் விளைவே நியாயவிலைக் கடைகளில் சலுகை விலையில் வழங்கப்பட்டுவந்த பருப்பு போன்ற பொருள்கள் அவற்றின் இருப்பு இருக்கும் வரையில் மட்டுமே வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பும், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 30ரூபாய் மானியம் இனிமேல் வழங்கப்படாது என்று வந்துள்ள அறிவிப்பும் ஆகும்.

இளைய தலைமுறையினரைச் சமுதாயப் பணியில் ஈடுபடுத்துவோம்

எனவே உழைக்கும் மக்களின் வாழ்க்கையைத் தாங்கமுடியாத சுமை நிறைந்ததாக ஆக்கவல்ல பேரிடித் தாக்குதல்கள் அடுத்தடுத்து வரக் காத்திருக்கின்றன. அதனால் உழைக்கும் மக்கள் நிச்சயம் இயக்கப் பாதைக்குத் தள்ளப்படவே செய்வர். உழைக்கும் வர்க்க இயக்கத்தின் பழைய போர்க் குதிரைகளாக விளங்கிய தோழர்கள் தங்களுக்கு வயதாகி விட்டதால் இப்போது முன்னைப்போல் வேலை செய்ய முடியவில்லையே என்று சோர்வடையத் தேவையில்லை. அவர்களது பிள்ளைகளை சமுதாயப்பணிக் கல்வி புகட்டி அனுப்பத் தயாராகுங்கள். கலந்து கொண்டுள்ள தோழர்களும் முன்னணித் தோழர்கள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள் என்ற மனநிலையைக் கைவிட்டு வாரிய உறுப்பினர் சேர்ப்பில், புதுப்பிப்பில் சிறுதொழிற் சாலைத் தொழிலாளரை ஒருங்கிணைப்பதில் தங்கள் பகுதிகளில் சிரத்தையயடுத்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அத்தகைய செயல்பாட்டின் மூலம் மட்டுமே நமது அமைப்பினை சீரழிவுப் பாதிப்புகளுக்கு ஆட்படாத அமைப்பாக பாதுகாத்திடவும் சரியான வழிநடத்துதலைச் செய்திடவும் முடியும் என்று கூறி தனது உரையினை நிறைவு செய்தார்.

உண்மையான இடதுசாரித் தொழிற்சங்கச் செயல்பாட்டுப் போக்கில் சிவகாசி வட்டாரத்தில் நிலவிவந்த கும்மிருட்டைக் கிழித்தெறிந்து ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சத் தோன்றியுள்ள சீரிய ஒளிவிளக்காக விளங்கப் போகும் இத்தொழிற்சங்கம் கலந்து கொண்ட தோழர்கள் மத்தியில் ஒரு புத்துணர்வையும் புதுநம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக அமைந்தது. கூட்டத்தில் கட்டடத் தொழிலாளரையும் அமைப்பில் உறுப்பினராக்க வழிவகுக்கும் உபவிதித் திருத்தமும் மற்றும் பல திருத்தங்களும் கொண்டு வரப்பட்டன.

கட்டுச் சோற்றுக்குள்ளிருந்து வெளியேறும் பூனை

சி.பி.ஐ.யிலிருந்து பிரிந்தவுடன் சி.பி.ஐ.(எம்) கட்சி சர்வதேசப் பிரச்னைகளில் நிலைபாடுகள் எதையும் உடனடியாக எடுப்பதில்லை என்ற நிலைபாட்டினை எடுத்தது. அதன்மூலம் அக்கட்சி அப்போது தீவிரமடைந்து வந்த ரஷ்ய, சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாட்டின் பின்னணியில் இவ்விரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையில் எந்தக் கட்சியினர் நிலையைத் தாங்கள் ஆதரிக்கிறோம் என்பதை அறிவிக்காமல் தள்ளிப்போட விரும்பியது. இதுவே ஒரு சந்தர்ப்பவாத முடிவு. இது அப்பட்டமான திருத்தல்வாதப் பாதையில் சென்று கொண்டிருந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர் மாசேதுங் மேற்கொண்ட மார்க்சிஸத்தை திருத்தல் வாதத்தில் இருந்து காப்பாற்றும் முயற்சியை ஆதரிப்பதில் அவர்கள் காட்டிய தயக்கமே தவிர வேறெதுவுமில்லை.

தற்போது அந்த நிலைபாட்டிலிருந்து ஒரு விசயத்தில் மாறுபட்டு சர்வதேசக் கம்யூனிஸ்ட்களை இனம் பிரிக்கும் மிக முக்கியமானதொரு பிரச்னையில் சி.பி.ஐ.(எம்) கட்சியின் பொதுச் செயலாளர் திருவாளர். பிரகாஷ் கரத் அவர்கள் தனது நிலையை திருவாய் மலர்ந்து தெரிவித்துள்ளார். லால்கர் பகுதியில் தற்போது நடந்துவரும் சி.பி.ஐ.(எம்) மற்றும் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்) கட்சிகளுக்கிடையிலான மோதல் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் “இந்திய மாவோயிஸ்ட்கள் சீனாவில் கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில் தோன்றிய இடதுசாரி பிளவுவாதப் போக்கினை கவ்விப்பிடித்துக் கொண்டுள்ளனர். அந்த நாடே(சீனாவே) தற்போது அதனைக் கைவிட்டுவிட்டது” என்று கூறியுள்ளார்.

திருவாளர். பிரகாஷ் கரத் அவர்களை கலாச்சாரப் புரட்சி தனிப்பட்ட முறையில் பாதித்திருந்தால் அதில் வியப்பதற்கு ஏதுமில்லை. ஏனெனில் அதன் ஒரு அம்சம் மாவோ தலைமை தாங்கிய மக்கள் சீனத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களாக இருந்தவர்களிடையே நிலவிய அதிகாரவர்க்க மனநிலையை எதிர்த்துக் கடுமையாகப் போராடுவது என்பதே. அதனால் அவரையறியாமலே கூட கலாச்சாரப் புரட்சிக்கு எதிரான மனநிலை அவரிடம் தோன்றியிருக்கலாம். யதார்த்தத்தில் கலாச்சாரப் புரட்சியைத் தொடங்கிவைத்து நடத்தியவர் தோழர் மாவோ; மாவோவின் மறைவிற்குப்பின் அதனைக் கடுமையாக எதிர்த்தவர் சீனாவில் தற்போது பின்பற்றப்படும் முதலாளித்துவப் பாதைக்கு அடித்தளமிட்ட டெங்சியோபிங். கலாச்சாரப் புரட்சி குறித்து தனது எதிர்ப்பினைத் தற்போது வெளிப்படுத்தியுள்ளதன் மூலம் டெங்சியோபிங் அணியில் தன்னை பிரகாஷ் கரத் வெளிப்படையாக எவ்வித ஒளிவுமறைவுமின்றி இணைத்துக் கொண்டுள்ளார். அத்துடன் தற்போது சீனாவில் ஆட்சியிலிருக்கும் முதலாளித்துவத்தை அமுலாக்கும் கூட்டம் அதனைக் கைவிட்டு விட்டது என்று உவகையுடன் குறிப்பிடுவதன் மூலம் அதை இன்னும் உறுதி செய்கிறார். இறுதியாக அவரது கட்சி சர்வதேச நிலவரம் குறித்து நிலைபாடு எடுப்பதை ஒத்திப்போட்டதன் பின்னணியில் இருந்த சந்தர்ப்பவாத நிலைபாடு தற்போது சந்தேகத்திற்கிடமின்றி அம்பலமாகியுள்ளது.

சோசலிசத்தை விட்டு வெகுதூரம் விலகிப் போனபின் அதன் பெயரில் சீரழிந்த சீன ஆட்சியாளர்கள் கொண்டாடிய 60-வது ஆண்டு விழா

சீன அரசு வாணவேடிக்கைகள், இராணுவ அணிவகுப்பு, தனது இராணுவ வலிமையைப் பறைசாற்றும் நவீனப் போர்த் தளவாட அணிவகுப்பு ஆகியவற்றின் மூலம் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய 60தாவது ஆண்டினை கொண்டாடிக் கொண்டுள்ளது. அதை ஒட்டி உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ ஊடகங்கள் சீனாவின் வளர்ச்சி குறித்து ஒருபுறமும் அங்கு நிலவும் மனித உரிமையை மதிக்காத போக்குகள் போன்றவை குறித்து மறுபுறமும் எழுதித் தள்ளுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று பல நாடுகளில் செயல்படும் திருத்தல்வாத சமூக ஜனநாயக அமைப்புகள் இப்படிப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 60 ஆண்டுகால ஆட்சி அங்குநிலவும் சீன பாணியிலான சோசலிசத்தின் சாதனை என்றெல்லாம் கூறப்படுவதைக் கண்டும் காணாமல் அக்கூற்றுகளின் பாலான ஒருவகை ஒப்புதலை மறைமுகமாகத் தெரிவிக்கின்றன.

இதுதவிர இந்தியாவில் தற்போது ஒருசில வட்டாரங்களினால் தங்களது சீன விரோதப் பிரச்சாரமும் தீவிரமாகவும் பெரிய அளவிலும் செய்யப்பட்டுக் கொண்டுள்ளது. எல்லைப் பகுதியில் சீனப் படையினரின் அத்துமீறல் என்பன போன்ற செய்திகள் அவ்வப்போது ஒளிபரப்பப்படுகின்றன. இதுதவிர சீனாவுடன் போர் மூண்டால் அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு நமது இராணுவ வலிமை உள்ளதா என்ற அடிப்படையிலான விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.
இந்த அனுமானங்களும் பயப்பிராந்தியை உருவாக்கும் போக்கும் அவசியமற்றவை மற்றும் ஆதாரம் இல்லாதவை என பிரதம மந்திரி உட்பட அமைச்சர்கள் பலர் கருத்துத் தெரிவித்திருந்தாலும் இந்த துஷ்பிரச்சாரம் குறைந்தபாடில்லை. மிக சமீபத்தில் இந்து வெறிவாத பி.ஜே.பி. அமைப்பின் தலைவரும், வகுப்புவாத அரசியலின் வெளிப்படையான பிரதிநிதியுமான நரேந்திர மோடியும் கூட இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் நேருவிற்குப் பதிலாக வல்லபாய் படேல் பிரதம மந்திரியாக ஆக்கப்பட்டிருந்தால் இராணுவ ரீதியாக சீனாவை எதிர்கொள்ளும் அளவிற்கு இந்தியாவை ஒரு இராணுவ சக்தியாக வைத்திருந்திருப்பார் என்று தனக்கு இறக்கைகள் இருந்திருந்தால் நானும் பறந்திருப்பேன் என்ற பாணியில் பேசியுள்ளார். சர்தார் வல்லபாய் படேல் ஒரு குஜராத்தி என்பதால் அவரைப்பற்றி ஒரு உயர்வான கருத்தை வெளியிடுவதன் மூலம் குஜராத்தி உணர்வினை விசிறிவிட்டு அரசியல் ஆதாயம் தேட அவர் முனைவதை இது ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில் ஒரு உழைக்கும் வர்க்க உணர்வினை உயர்த்திப்பிடிக்கும் இதழ் என்ற ரீதியில் சீனாவின் தற்போதய சமூக அமைப்பு உண்மையில் ஒரு சோசலிச அமைப்பா? சீனாவை ஆட்சி செய்துவரும் கட்சி உண்மையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியா? சீனாவில் தற்போது ஏற்பட்டு வரும் பொருளாதார ரீதியான வளர்ச்சி உண்மையில் வளர்ச்சியா? ஒரு கடுமையான சீன எதிர்ப்புப் பிரச்சாரம் தற்போது இந்தியாவில் கிளப்பிவிடப் பட்டுள்ளதன் பின்னணி என்ன? ஆகியவற்றை ஆய்வு செய்வது நமது தார்மீகக் கடமையாகும்.

உலகமயத்தின் விளைவான சீனாவின் பொருளாதார வளர்ச்சி சீனா தற்போது உலகமயத்தின் பயன்களை முழுமையாக அடைந்து தற்போதைய உற்பத்தித் தேக்க நெருக்கடி உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் சூழ்நிலை தோன்றுவதற்கு முன்புவரை முதாளித்துவப் பொருளாதார அகராதியின்படியிலான மிகப் பெரும் வளர்ச்சியினைப் பெற்றுவந்தது. அதன் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறியீட்டு மதிப்பீடு 13 முதல் 18 சதவீதம் வரை இரட்டை இலக்கங்களில் இருந்தது. இவ்வாறு இரட்டை இலக்க வளர்ச்சி விகிதம் எந்தவொரு நாட்டிலும் இந்த மூன்றாவது உலகப் பொதுநெருக்கடிக் காலகட்டத்தில் சாதிக்க முடியாததாகும். இதுதவிர அதன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான ஏற்றுமதி வர்த்தகம் மிகப் பெருமளவில் அதற்குச் சாதகமானதாக இருந்தது. அதன் விளைவாக சீனாவின் அமெரிக்க நாணயக் கையிருப்பு மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. மேலும் சீனாவின் அமெரிக்கக் கருவூலக் கடன் பத்திரங்கள் வாங்குவதில் செய்யப்படும் முதலீடு ஏராளமாக அதிகரித்தது. அமெரிக்கப் பொருளாதார வல்லுனர்களை அது பெரிதும் அச்சுறுத்தியது.

அதுதவிர அமெரிக்கா முன்பு இந்தியா போன்ற பல வளரும் நாடுகளுக்கு செய்ததைப் போல் பல்வேறு உள்நோக்கம் கொண்ட உதவிகளை சீனா பல ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளுக்குச் செய்து வருகிறது. அவ்வாறு செய்வதன் நோக்கம் அந்நாடுகளில் தனது முதலீட்டைக் கொண்டு செல்வதும் அங்கிருக்கக் கூடிய எண்ணெய் வளம் போன்ற தங்கு தடையற்ற உற்பத்திக்கு அத்தியாவசியமான வளங்களைப் பயன்படுத்தும் உரிமையைப் பெறுவதுமேயாகும். உலகம் முழுவதுமே எண்ணைய் வளத்தைக் கையகப்படுத்துவதில் இந்தியாவை மிஞ்சிய போட்டி நாடாக அந்நாடு விளங்குகிறது. லத்தின் அமெரிக்க நாடுகளுடனான அதன் வர்த்தகமும் பலமடங்கு அதிகரித்துள்ளது.


சீன பாணியில் சோசலிச வளர்ச்சி என்ற பொய்த்தோற்றம்

இந்த பொருளாதாரக் குறியீடுகளை மையமாக வைத்துப் பார்த்தால் சீனா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக வளர்ந்திருக்கிறது என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் அனைவரின் மனதிலும் உதயமாகவே செய்யும். சிலர் அச்சமூகத்தில் வளர்ந்து வரக்கூடிய போக்குகளையும் அந்நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்தும் குறிக்கோளையும் பார்க்காதிருப்பார்களேயானால் சிலசமயம் இத்தகைய பிரமிக்கத்தக்க வளர்ச்சி அதாவது அமெரிக்கா இருநூறு ஆண்டுகாலத்தில் அடைந்த வளர்ச்சியை 30,35 ஆண்டுகளில் சோவியத் யூனியன் அடைவதற்கு வழிவகுத்த சோசலிசப் பொருளாதார நடைமுறை சீனாவின் தனித்துவத்திற்கு ஏற்ற விதத்தில் அமலாவதின் விளைவாகவே எட்டப்பட்டிருக்கிறது என்று எண்ணவும் இடமுண்டு.

மாவோ பார்த்த சீனாவின் பிரத்தியேகச் சூழ்நிலை

சீனாவின் பாணி என்ற சொல்லாடல் தற்போது நன்கு நிலைபெற்ற ஒன்றாக ஆகியுள்ளது. அவ்வாறு ஆகியுள்ளதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. ஏனெனில் அத்தகைய சொல்லாடலின் செல்லுபடித் தன்மைக்கான அடித்தளம் மாவோ போன்ற மாபெரும் தலைவர்களால் இடப்பட்டது. அதாவது மார்க்சிய சித்தாந்தத்தின் செல்வாக்கு வட்டத்திற்குள் வந்தபின் தோழர் மாவோ அவர்கள் மார்க்சிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளின் படியிலான ஒரு சோசலிச அமைப்பை அந்நாட்டில் நிறுவுவதற்கான வழிமுறைகளைத் தேடினார். தொழில் ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏறக்குறைய எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே அமலாக்கக்கூடிய தன்மை வாய்ந்ததாக இருந்த மார்க்சியப் பொருளாதாரக் கண்ணோட்டத்தை அப்படியே சீன மண்ணில் அமலாக்குவதில் பல சிக்கல்களும் சிரமங்களும் இருப்பதை அவர் நடைமுறை ரீதியாகவும் பகுப்பாய்வுகளின் மூலமும் கண்டறிந்தார். அதாவது உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் முதலாளி வர்க்கத்தை எதிர்த்து நடத்தப்படும் ஒரு சமுதாயமாற்றப் போரின் மூலம் சீன மண்ணில் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருவது மாவோ அவர்களுக்கு அக்கால கட்டத்தில் ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. அதற்குக் காரணம் அங்கு நன்கு வளர்ந்து நிலைபெற்ற, அமைப்பு ரீதியாக ஒருங்கு திரட்டப்படும் வாய்ப்பினைக் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கம் பெரும் எண்ணிக்கையில் அப்போது இல்லை. அது அடிப்படையில் ஒரு விவசாயப் பொருளாதார நாடாக விளங்கியது. தொழிலாளி வர்க்கம் அப்போதுதான் தோன்றி முளைவிடத் தொடங்கியிருந்தது. அந்நாட்டின் அரசியல் அதிகாரம் ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு முதலாளித்துவ அரசின் கைகளில் இல்லை. மாறாக நாடுமுழுவதும் விரவிப் பரவியிருந்த யுத்தப்பிரபுக்கள் என்று அழைக்கப்படும் நிலப்பிரபுக்களின் கைகளில் சிதறி இருந்தது. அன்றைய சமூகத்தின் மிகப்பெரும் உற்பத்தி சாதனமாக விளங்கிய நிலங்கள் பெரும்பாலும் அத்தகைய யுத்தப்பிரபுக்களின் பிடியில் இருந்தன.

இதுதவிர ஜப்பான் ஏகாதிபத்தியம் சீனாவின் பல பகுதிகளை மஞ்சூரியாவில் தொடங்கி கையகப்படுத்தியிருந்தது. ஒட்டுமொத்த சீன நாட்டையே தனது காலனியாக மாற்றும் முயற்சியிலும் ஜப்பான் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. எனவே சீன விவசாயிகள் யுத்தப்பிரபுக்களை தங்களது எதிரி வர்க்கமாகப் பாவித்திருந்தனர். அதைப்போல் சீனாவில் தோன்றி வளரத் தொடங்கியிருந்த முதலாளித்துவ சக்திகளின் ஒரு பிரிவினர் தங்களது சொந்த நாட்டு வளத்தினைத் தாங்கள் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதைத் தடுக்கும் தன்மை வாய்ந்ததாக இருந்த ஜப்பானின் நாடுபிடிக்கும் ஆசைக்கு விரோதமாக இருந்தனர். அத்தகைய முதலாளிகளின் ஆலைகளில் வேலைசெய்யும் தொழிலாளருக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாடும் இருந்தது. இத்தகைய தொழில் வளர்ச்சியடைந்த மேலைநாடுகள் எவற்றிலும் இல்லாத ஒரு பிரத்யேகச் சூழ்நிலை மாவோவின் முன்பு தீவிரத்தன்மை வாய்ந்ததாக இருக்கக்கூடிய ஜப்பானிய ஏகாதிபத்திய எதிர்ப்பு மனநிலையையும் வாழ்வாதாரங்களை அப்பட்டமாகக் கையகப்படுத்திக் கொண்டு பரந்துபட்ட விவசாய மக்களின் வறுமைக்கும் வேதனைக்கும் மூலகாரணமாக இருந்த நிலப்பிரபுத்துவ எதிர்ப்பையும் சுரண்டலையே ஒட்டுமொத்தமாக மனித சமூத்தில் இருந்து அகற்றுவதற்கு வழிவகுத்த ஒப்பற்ற விஞ்ஞான அடிப்படையிலான மார்க்சியக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலான முதலாளித்துவ எதிர்ப்பையும் ஒருங்கிணைத்து சீன நாட்டில் அப்போது நிலவிய சூழ்நிலைக்கு ஏற்ற விதத்தில் ஒரு சமூகமாற்றத்தைக் கொண்டுவரவேண்டியதன் அத்தியாவசியத் தேவையை முன்னிறுத்தியிருந்தது.

காலாவதியாகிப் போன முதலாளித்துவத்தின் கரங்களில் ஆட்சியா?

உலகெங்கிலும் தோன்றியதைப் போல் நிலவுடமைப் பொருளாதாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பணியை முதலாளித்துவ சக்திகளின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு அதற்கு துணைபுரியும் சக்தியாக தொழிலாளி வர்க்கத்தை நிறுத்துவதா என்பது அவர்முன் எழுந்த முதல் கேள்வியாக இருந்தது. அதே சமயத்தில் ஜப்பானிய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு மக்களிடையே மேலோங்கி இருந்தது. அதனைத் தங்களுக்குச் சாதகமாக முழுமையாக பயன்படுத்தி தங்களது ஆட்சியை நிறுவ முதலாளித்துவம் விரும்பியது. அதனை அவ்வாறான அதன் நோக்கத்தை சாதித்துக் கொள்ள அனுமதித்து அதற்கு துணைபோகும் சக்தியாக இருப்பதா என்ற கேள்வியும் அப்போது எழுந்தது. இதில் நிலப்பிரபுத்துவத்தை முடிவுக்குக் கொண்டுவரும் விசயத்தில் ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவம் வளர்ந்தது போல் எவ்வித எதிர்ப்புமின்றி வளரும் அதன்மூலமாக நிலவுடமையை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு சூழ்நிலை மாவோவின் காலகட்டத்தில் சீனாவில் இருக்கவில்லை. அதாவது நிலப்பிரபுத்துவத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரேசக்தி முதலாளித்துவம் தான் என்ற நிலை இருக்கவில்லை. ஏனெனில் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு மாற்றான சோசலிசப் பொருளாதாரமும் அதனை ஆணித்தரமாக நிறுவிய மார்க்சியப் பொருளாதாரக் கண்ணோட்டமும் ஆரம்ப கால முதலாளித்துவ வளர்ச்சியின் போது இருக்கவில்லை.மார்க்சியம் மட்டுமல்ல அது காட்டிய வழியின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சோவியத் அரசும் மாவோ சீனாவின் சமூகமாற்றப் போரை ஆரம்பித்த காலத்தில் இருந்தது. எனவே வரலாற்று ரீதியாகவும் விஞ்ஞானபூர்வக் கருத்தியலின் அடிப்படையிலும் காலாவதியாகிப்போன முதலாளித்துவத்தின் கரங்களில் ஆட்சியதிகாரம் வர அனுமதிப்பதா என்ற கேள்வியும் தோழர் மாவோவிற்கு இருந்தது.

சீனாவின் தனித்தன்மைக்கு ஏற்ற மார்க்சிஸம்

இந்த நிலையில்தான் சீன சமூகம் முதலாளித்துவ அமைப்பிற்குள் போகாமலேயே ஜனநாயகக் கடமைகளையும் பூர்த்தி செய்து சோசலிசத்திற்கு செல்ல வழிவகுக்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக் கண்ணோட்டத்தை தோழர் மாவோ அற்புதமான விதத்தில் வகுத்தெடுத்தார். பாட்டாளி வர்க்கம் மற்றும் அதன் கண்ணோட்டத்தின் தலைமையில் பரந்த அளவில் விவசாயிகளையும் ஏகாதிபத்திய மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பில் ஆர்வம் காட்டிய தேசிய முதலாளிகளையும் ஒருங்கிணைத்தார். வழக்கமான ஜனநாயகப் புரட்சிகள் அனைத்துமே முதலாளித்துவ ஜனநாயகத் தன்மை வாய்ந்தவையாகவும் முதலாளித்துவ நாடுகளை முன்மாதிரிகளாகக் கொண்டவைகளாகவும் அடிப்படையில் இருந்த வேளையில் அதற்கு மாறாக பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை மனதிற்கொண்டும் சோசலிச சோவியத் யூனியனை முன்மாதிரியாகவும் கொண்ட அதே வேளையில் முதலாளித்துவ சக்திகளின் பங்கேற்போடு அன்றைய காலகட்ட சீன சமூகத்திற்குப் பொருத்தமுடையவையாக இருந்த சில முதலாளித்துவ ஜனநாயகக் கடமைகளையும் பூர்த்தி செய்ய வல்லதொரு ஜனநாயகப் புரட்சியைக் கொண்டுவர விரும்பினார். அதன் விளைவாக ஒரு மக்கள் ஜனநாயகத் தன்மை கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சியினை அன்று நிலவிய சீன சமூக அமைப்பின் தனித்தன்மைக்கு ஏற்ற விதத்தில் மாவோ வளர்த்தெடுத்தார். இந்த ஒரு அற்புதமான, வரலாற்று ரீதியிலான மார்க்சியக் கருவூலத்திற்கான வழங்கலே சீனாவின் தனித்தன்மைக்கு உகந்த வகையிலான மாற்றம் என்ற சொல்லாடலை கருத்தியல் அகராதியில் சேர்த்தது.


சீனபாணியில் சோசலிசம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

தோழர் மாவோ அவர்களால் மார்க்சிசம் இவ்வாறு மிகப் பொருத்தமான விதத்தில் சீனாவில் அவரது காலத்தில் நிலவிய பிரத்தியேக சூழ்நிலைகளுக்கு உகந்த வகையில் கொண்டுவரப்பட்டது. மக்கள் சீனம் அமைக்கப்பட்ட பின்னர் சமூகமாற்றப் போரில் நேசசக்தியாக இருந்த சிறுமுதலாளிகளின் நிறுவனங்கள் அரசால் சமூகமயமாக்கப் படவில்லை; சிறுமுதலாளிகள் தங்களுக்கான அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர். அந்த அமைப்புகளைச் சார்ந்த அவர்களின் பிரதிநிதிகளுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் திட்டமிடும் அமைப்புகளிலும் இடமளிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் கம்யூனிஸக் கருத்தோட்டத்தில் உடன்பாடு உள்ளவர்களாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது.

இன்று பலரும் நினைப்பதுபோல் ஒருவர் இருக்கும் பொருளாதார சூழ்நிலையே அசலும் நகலும் அவரது எண்ணப் போக்குகளை அப்படியே தீர்மானிப்பதில்லை. அதாவது பெருமுதலாளிகள் பெரிய அளவில் முதலாளித்துவ சிந்தனைப் போக்கையும் சிறுமுதலாளிகள் சிறிய அளவிலேயே அப்போக்கினையும் கொண்டவர்களாக இருப்பர் என்ற பொது அறிவுக் கண்ணோட்டக் கருத்து தோழர் மாவோ தலைமையேற்று நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்தவில்லை. அக்கட்சி அவ்வாறு எந்த சமூகசக்தியின் மனநிலையையும் அப்படியே நிறுத்தி வைத்துப் பார்க்கவில்லை. ஒவ்வொரு சக்தியின் மனநிலையினையும் அதன் ஓட்டத்தில் பார்த்தது. பொதுவாக சிறுமுதலாளிகளின் மனஓட்டம் ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பில் தாங்கள் தற்போது இருக்கும் சிறுமுதலாளிகள் என்ற நிலையிலிருந்து மாறி எவ்வாறு பெருமுதலாளிகளாவது என்ற அடிப்படையிலேயே இருக்கும். ஆனால் தனியுடமையின் வளர்ச்சிக்கு எதிரானதொரு சமூக அமைப்பில் அந்த மனநிலையை நிலைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். ஆனால் அச்சூழ்நிலையிலும் கூட சிறு நிறுவன அதிபர்களிலும் கூடக் கம்யூனிஸ மனநிலை உள்ளவரே அவர்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் சிறு முதலாளிகளிடம் கொண்டு செல்வதற்கு அது உகந்ததாக இருக்கும். மேலும் குட்டி முதலாளித்துவ ஊசலாட்டங்களைப் படிப்படியாக முறியடித்து, சகல உரிமைகளும், சமூகத்தின் சலுகைகளும் பெறும் தொழிலாளராக இருப்பதே மாறியுள்ள சமூகச் சூழ்நிலையில் சிறுமுதலாளிகளாக இருப்பதை விடப் பாதுகாப்பானதும் மேலானதும் என்ற எண்ணப் போக்கையும் அதன் மூலமே உருவாக்க முடியும்.

இந்த அடிப்படையிலேயே சோசலிச அமைப்பை நோக்கிய விரைந்த பயணம் மாவோவின் தலைமையில் நடந்து கொண்டிருந்தது. சமுதாய மாற்றம், ‘மிகப் பெரிய வளர்ச்சியை முன்னெடுப்பது’ மற்றும் மகத்தான கலாச்சாரப் புரட்சி ஆகிய நடவடிக்கைகளால் இன்னும் வலிமைப் படுத்தப்பட்டு மக்களிடையேயான சமூக ஈடுபாடு எந்த வகையான முதலாளித்துவச் சறுக்கலுக்கும் இடம் கொடாத வகையில் தொடர்ச்சியாகப் பராமரிக்கப்பட்டது. சமூக வளம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் உரிய முறையில் உகந்த வகையில் பகிர்ந்தளிக்கப்படும் சோசலிச சமூக அமைப்பை நோக்கி சமூகம் வெகுவேகமாகச் செல்ல உத்வேகமளிக்கப்பட்டது.

டெங்சியோபிங் என்ற கருப்புப் பூனையினைக் கவர்ந்த முதலாளித்துவ எலி

ஆனால் அவருக்குப்பின் அங்கு ஆட்சியதிகாரத்திற்கு வந்த டெங்சியோபிங் தலைமை சீனாவின் தனித்தன்மைக்கு உகந்த விதத்தில் என்ற எந்த சொல்லாடலை பயன்படுத்தி மகத்தான சமூகமாற்றத்தையும் அதன்மூலம் மார்க்சிய லெனினிய கருவூலத்திற்கு ஒரு சிறப்பான வழங்கலையும் தோழர் மாவோ செய்தாரோ அதே சொல்லாடலைப் பயன்படுத்தி நடைமுறை ரீதியில் சீனாவின் பொருளாதார வளத்தை மேம்படுத்துகிறேன் என்ற பெயரில் சீன சோசலிச சமூக அமைப்பின் அடித்தளத்தையே அடித்துத் தகர்த்து நிர்மூலமாக்கும் முதலாளித்துவ பாணியிலான சீர்திருத்தங்களை கொண்டுவந்து, பூனை கறுப்பாய் இருந்தால் என்ன வெள்ளையாய் இருந்தால் என்ன அது எலியைப் பிடித்தால் போதும் என்ற கூற்றினை முன்வைத்து சீனபாணி வளர்ச்சிப் பாதை என்ற பெயரில் நாட்டைச் சீரழிவுப் பாதைக்குத் திசை திருப்பியது.

ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி அதில் சீனா அடைந்த பலன்

சோசலிசப் பொருளாதார அமைப்பின் இடைத்தரகர் இல்லாத நிலையினால் மலிவான விலையில் உருவான இடுபொருட்களைக் கொண்டு, சோசலிசக் கட்டமைப்பு தொழிலாளரிடையே ஊட்டி வளர்த்திருந்த பொறுப்புடன் வேலை செய்யும் போக்கையும் பயன்படுத்தி மலிவான செலவில் உற்பத்தி செய்யப்பட்ட நுகர்வோர் பொருட்களை வேறெந்த நாடும் விற்க முடியாத மலிவான விலையில் மேலைநாடுகளுக்கு விற்று தனது ஏற்றுமதி வர்த்தகத்தை சீனா வளர்க்கத் தொடங்கியது. பொருளாதாரம் மாற்றப்பட்டதன் மூலம் மக்களின் தேவையைக் குறிக்கோளாகக் கொண்டு பொருள் உற்பத்தியினை நடத்தும் போக்கு கைவிடப்பட்டு லாபத்தை நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவப் பொருளாதாரம் அறிமுகம் செய்யப்பட்டது. டெங்சியோபிங் மறைந்த பின்பும் அவரது இந்த முதலாளித்துவ நடைமுறைகளே இன்று அங்கு இன்னும் அதிகமான விதத்தில் அமலில் இருந்து வருகின்றன.

மேலைநாட்டு முதலாளிகள் தங்களது கனரக இயந்திர உற்பத்திப் பொருட்களையும் நுணுக்கமான மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த உயர் தொழில்நுட்பப் பொருட்களையும் தங்களது சொந்த நாட்டு மக்களின் வாங்கும்சக்தி முதலாளித்துவச் சுரண்டலினால் சூறையாடப்பட்டு அடிமட்டமாகக் குறைந்த நிலையில் அந்நியநாட்டுச் சந்தைகளில் விற்று அதிகபட்ச லாபநோக்கை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினர். அதற்காக அவர்கள் அறிமுகம் செய்த உலகமயம் சீனாவின் நுகர்பொருள் ஏற்றுமதிக்கான உலகச் சந்தையின் கதவுகளை அகலத் திறந்துவிட்டது. இதனை முழுமையாகப் பயன்படுத்தியே நாம் மேலே விவரித்த பொருளாதார வளர்ச்சியினை சீனா சாதித்துள்ளது. இந்த பிரத்தியேக சூழ்நிலையைத் தவிர எந்த சோசலிசக் கண்ணோட்டமும் அதன் வளர்ச்சிக்கு வழிவகுக்கவில்லை. சீனாவில் மட்டுமல்ல; இத்தகைய வாய்ப்புகள் உலகமயத்தின் மூலமாக பிரேசில், இந்தியா போன்ற நாடுகளுக்கும் ஏற்பட்டன. முன்னெப்போதும் இல்லாத முதலாளித்துவ ரீதியிலான வளர்ச்சியை இந்தியாவும் உலகமயத்தின் மூலமாக அடைந்தது. எனவே சீனாவில் தோன்றிய வளர்ச்சிக்கும் சோசலிசத்திற்கும் ஓரேயாரு தொடர்பைத்தவிர வேறு எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது சோசலிசப் பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கிய அடித்தளம் சீனாவில் முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் மொத்த விற்பனைக்கு ஆளாகியுள்ளது என்ற ஒன்றைத் தவிர சீனா தற்போது அடைந்துள்ள வளர்ச்சிக்கும் சோசலிசத்திற்கும் வேறெந்ததொரு தொடர்பும் இல்லை.

கொள்ளைக்கார முதலாளித்துவத்தின் தோற்றம்

முன் முயற்சியுடன் தொழில் நடத்துபவரை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் விசேசப் பொருளாதார மண்டலங்களை அமைத்து முதலாளிகளின் வளர்ச்சியையும் மாவோவின் பாதையில் இருந்து தடம்புரண்ட சீனம் ஊக்குவித்தது. மற்ற பாரம்பரிய முதலாளித்துவ நாடுகளிலாவது நாட்டின் வளத்தையும் மக்களின் உழைப்பையும் பல தலைமுறைகளாக சுரண்டிச் சேர்த்தப் பணத்தை, அதாவது பரம்பரை சொத்து என்று கூறப்படும் சொத்து சார்ந்த மூலதனத்தை அடித்தளமாக வைத்து நான் அந்தப் பணத்தை முதலீடு செய்தே வளர்ந்தேன் என்ற ஒப்புக்காவது கூறமுடிந்த முதலாளிகள் இருந்தனர். அவர்கள் தங்கள் சுரண்டலை சமூக ரீதியாக ஓரளவு அதன் மூலம் நியாயப்படுத்தவும் முடிந்தவர்களாக இருந்தனர். ஆனால் சோசலிசப் பொருளாதார அமைப்பு நிலை கொண்டிருந்த சோவியத் யூனியன் மற்றும் சீன நாடுகளில் அவ்வாறு முதலாளிகள் உருவாகும் வாய்ப்பே இல்லை. நேற்று முன்தினம் வரை சோசலிச அமைப்பின் நிர்வாகத்தில், சோசலிச மனநிலையின்றி அதிகார வர்க்கக் கூறுகளுடன் கட்சியிலும் மக்களிடமும் விழிப்புணர்வு மங்கியிருந்ததைப் பயன்படுத்தி ஊழல் மயமாகி இருந்த அரசு நிர்வாகிகளில் பலரே திடீரென மோசடிகள் மற்றும் பகற்கொள்ளைகளை ஒத்த செயல்கள் மூலம் இந்த நாடுகளில் புது முதலாளிகளாகப் பரிணமித்து வளர்ந்தனர். எனவே ஒரு கொலைகார, கொள்ளைக்காரத் தன்மையே இந்த முதலாளித்துவத்தின் கூறுகளில் மண்டிக் கிடக்கிறது.

படிக்கும் இராமாயணமும் இடிக்கும் பெருமாள் கோயிலும்

இந்த அளவிற்கு சீரழிந்துவிட்ட சீனச் சமூக அமைப்பை வழிநடத்தும் பொறுப்பிலிருக்கக் கூடிய கம்யூனிஸ்ட் கட்சியும் எத்தனை சீரழிந்ததாக ஆகியிருக்கும் என்பது யாரும் யூகிக்க முடியாததல்ல. டெங்சியோபிங் தலைமை தோன்றியபோதே அக்கட்சியின் சீரழிவுப் பாதைக்கு அடித்தளம் இடப்பட்டுவிட்டது.
அவ்வாறு அந்த சீரழிவுப் பாதையில் நடைபயிலும் அக்கட்சி இன்று எத்தனை தூரம் அதன் சீரழிவுப் பாதையில் பல மைல் கற்களைப் பதித்துள்ளதென்றால் எந்த நாட்டில் முதலாளித்துவ மனநிலையே சமூகத்தின் அனைத்துப் பகுதியினரிடமிருந்தும் களை எடுக்கப் படவேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் மகத்தான கலாச்சாரப் புரட்சி உரிய வீரியத்துடனும் விவேகத்துடனும் நடத்தப்பட்டதோ அந்த நாட்டில் அந்த மகத்தான நிகழ்வை முன்நின்று நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முதலாளிகளும் உறுப்பினர்கள் ஆகலாம் என்ற முடிவு கடந்த காலத்தில் நடந்த ஒரு கட்சிக் காங்கிரஸ்ல் எடுக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் ஒரு பாசிஸக் கட்சி

இவ்வாறு முதலாளிகளும் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானால் ஒட்டுமொத்தத்தில் முதலாளித்துவ ரீதியிலான வளர்ச்சிக்கு முன்னுரிமை சமூகத்தில் வழங்கப்படும் சூழ்நிலையில் அவர்களே நாளடைவில் கட்சியில் அதிக சக்தி வாய்ந்தவர்களாகவும் ஆகிவிடுவர். தொழிலாளிவர்க்க உணர்வு மட்டுமல்ல; பாரம்பரிய முதலாளித்துவ நாடுகளில் முதலாளிகளிடம் இருக்கும் ஒருசில மதிப்புகளும் கூட இல்லாதவர்களாக இருக்கும் அவர்களின் ஆதிக்கம் கட்சியில் வேரூன்றிவிட்டால் கட்சி பெயரளவில் கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறிக் கொண்டு ஒரு பாசிஸ்ட் கட்சியாக மாறிவிடும். மேலும் கட்சிகள் குறித்த மார்க்சியக் கண்ணோட்டத்தின் படி முதலாளிவர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்க பலகட்சிகள் இருக்க முடியும். ஏனெனில் முதலாளிகள் ஒவ்வொருவரும் ஒருவருக்கெதிராக மற்றொருவர் ஒரே சந்தையினைப் பிடிப்பதற்காகப் போட்டியிடும் போக்கினைக் கொண்டவர்கள். எனவே அப்போட்டியினை மையமாகவைத்து விவசாயத்துறை, உற்பத்தித்துறை, சேவைத்துறை போன்ற பலதரப்பு முதலாளிகளின் நலன்களையும், பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டவையாக இருக்கும் நாடுகளில் பிராந்திய, தேசிய முதலாளிகளின் நலன்களையும் கருத்திற்கொண்டு செயல்படும் பல்வேறு முதலாளித்துவக் கட்சிகள் இருக்க முடியும். ஆனால் உழைக்கும் வர்க்கத்தைப் பொறுத்தவரை அதன் உண்மையான அடிப்படை நலன் சுரண்டலிலிருந்தான விடுதலை. அதை அடிப்படையாகக் கொண்ட ஒரே கட்சியே பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி நடைபெறும் சோசலிசத்தில் இருக்க முடியும்.
சீனாவிலும் இப்போதுவரை கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் ஒரே கட்சியாக உள்ளது. அந்நிலையில் அக்கட்சி மேலே விவரித்த முதலாளித்துவ வளர்ச்சிப் போக்குகளினால் பாஸிசத் தன்மை வாய்ந்ததாக மாறும் பட்சத்தில், பாரம்பரிய ஜனநாயக நாடுகளின் உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் பெயரளவிலான உரிமைகளைக் கூட அனுபவிக்க முடியாதவர்களாக சீனாவின் மக்கள் ஆகிவிடும் அவலநிலையும் நிச்சயம் உருவாகிவிடும்.இதனை மனதிற்கொண்டே தற்போது பல கட்சி ஜனநாயகம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பலரால் அந்நாட்டில் எழுப்பப்பட்டு வருகிறது. மறைந்திருந்து தாக்கிய குருஷ்சேவ், டெங்சியோபிங் வைரஸ்கள்
இவ்விடத்தில் ஒரு வாதம் முன்வைக்கப்படலாம். இத்தனை முதலாளித்துவ சீரழிவு மனநிலை கொண்டவராக உங்களால் வர்ணிக்கப்படும் டெங்சியோபிங்கும் மாவோவின் தலைமையில் இயங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவில் இடம் பெற்றிருந்தவர்தானே; இந்த மனநிலை நிச்சயமாக ஒரே நாளில் அவரிடம் உருவாகியிருக்க முடியாதல்லவா? அப்படியானால் இந்த மனநிலையின் கூறுகளைக் கொண்டவரை அடையாளம் கண்டு அம்பலப்படுத்தாமல் மாவோ எவ்வாறு தன்னுடன் வைத்திருந்தார் என்ற கேள்வி எழலாம்.இதை ஒத்த ஒரு கேள்வி ஸ்டாலினுக்குப் பின் குருச்சேவ் தலைமை பல முதலாளித்துவ ரீதியான மாற்றங்களை சோவியத் பொருளாதாரத்தில் கொண்டுவந்த போதும் எழுந்தது. ஏனெனில் அவரும் ஸ்டாலின் தலைமையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் இருந்தார். உண்மையில் இத்தகைய தந்திரமிக்க முதலாளித்துவ வாதிகளின் சீரழிந்த சில்லரைத் தன்மைவாய்ந்த சிந்தனைப் போக்குகள் ஸ்டாலின் , மாவோ போன்ற மாபெரும் சிந்தனையாளர்கள் மற்றும் செயலூக்கவாதிகள் கருத்து மற்றும் நடைமுறை ரீதியாக பிரதிபலித்த ஒளிப்பிரவாகத்தினை ஒத்த கதிர் வீச்சுகளின் முன்பு இருந்த இடம் தெரியாமல் புதைந்து இருந்தன. அதாவது சமூகத்தை மறைந்திருந்து தாக்கக் காத்திருக்கும் வைரஸ் கிருமிகளாக மறைந்து கிடந்தன. இதில் ஒரு சுவையான விசயம் என்னவென்றால் மாவோவைப் பொறுத்தவரையில் மாவோவின் பேரறிவிற்கு டெங்சியோபிங்ன் குள்ளநரித்தனம் முழுமையாகத் தென்படாமலும் போய்விடவில்லை. அவர், காதுகேட்கும் திறன் குறைந்தவராக இருந்த டெங்சியோபிங் பற்றி நகைச்சுவை ததும்ப ஒருமுறை கூறினார்: டெங்சியோபிங்ற்கு ஒருவர் பேசுவதை அருகில் அமர்ந்து கேட்டாலே பேச்சு சரியாகக் கேட்காது இருந்தாலும்கூட நான் பேசும் போது பெரும்பாலும் அவர் தூரத்திலேயே இருப்பார் என்று.

மேலே நாம் பார்த்தவைகளில் இருந்து ஒன்றினை நாம் புரிந்து கொள்ளலாம். அது சீனாவில் தற்போது இருப்பது சோசலிசப் பொருளாதாரமும் அல்ல, அங்கு செயல்படுவது ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியும் அல்ல என்பதே. சீனாவில் தற்போது உள்ள பெரிய பொருளாதார வளர்ச்சி என்று சோசலிச விரோதிகளாலும் சோசலிசத்திற்கு உள்ளிருந்தே கொல்லும் பிணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமூக ஜனநாயக சக்திகளாலும் வர்ணிக்கப்படும் பொருளாதார வளர்ச்சி அது முன்னெடுத்துச் செல்லும் முதலாளித்துவப் பாதை தவிர்க்க முடியாத விதத்தில் சமூகத்தில் தோற்றுவிக்கும் பல்வேறு சமூக அவலங்களை சீனா சோசலிசப் பாதையிலிருந்து திசைமாறியதிலிருந்து தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறது. சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த முதலாளித்துவ ரீதியிலான மாறுதல்கள் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் போன்ற சமூக ரீதியிலான விசயங்களில் மட்டுமின்றி அரசின் வெளியுறவுக் கொள்கையிலும் பெரும் மாறுதல்களைத் தோற்றுவித்துள்ளது.

அசுர வேகத்தில் வளரும் முதலாளித்துவச் சீரழிவுகள்

பொருளாதாரம் லாபநோக்கை அடிப்படையாகக் கொண்ட ஏற்றுமதி சார்ந்த தேவைகளுக்கு முன்னுரிமை தரும் பொருளாதாரமாக மாறி வருவதால் உள்நாட்டில் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை தரும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் கண்ணோட்டம் கைவிடப்பட்டு வருகிறது. பொதுவாக சோசலிசப் பொருளாதாரத்தின் இலக்கு உள்நாட்டில் மக்களின் உணவு, உடை போன்ற தேவைகளையும், பிற நுகர்பொருள் தேவைகளையும் உள்ளடக்கியதாகவே அடிப்படையில் இருக்கும். எனவே தான் மக்களின் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க அவற்றை உற்பத்தி செய்வதற்கான தேவையும் அதிகரித்து தொடர்ச்சியான தொழில்மயமும், வேலை வாய்ப்புகளும் பராமரிக்கப்படும். தற்போது ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி பெருமளவு நடைபெறுவதால் ஏற்றுமதிகள் அதிகரிக்கும் வேளைகளில் நகர்ப்புறத் தொழிற்சாலைகளுக்கு கிராமப் புறங்களைவிட்டு தொழிலாளர் இடம் பெயர்வதும், தற்போது உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு ஏற்றுமதி குறையும் சூழ்நிலைகளில் வேலையின்மை வளர்ந்து கிடைக்கும் கூலிக்கு வேலை செய்ய எங்கு வேண்டுமானாலும் இடம் பெயர்ந்து செல்லும் கூலி அடிமை அவலமும் ஏற்பட்டுள்ளது. அதாவது சமூகத்தின் அனைத்து செல்வங்களையும் உருவாக்குபவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் நடத்திய கெளரவம் மிக்க வாழ்க்கை பறிபோய் உள்ளது. அனைத்து முதலாளித்துவ அமைப்புகளையும் ஆட்டிப் படைக்கும் வேலையின்மை, விலை உயர்வு போன்றவை பெருமளவு அங்கும் தலை காட்டியுள்ளன.

சோசலிசம் உருவாக்கிய தூய்மையான நகரங்கள் எங்கே?

திட்டமிட்ட விதத்தில் நடக்கும் சோசலிசப் பொருளாதார அமைப்பில் தொழிற்சாலைகள் வசிப்பிடங்களை ஒட்டியிராத நிலையும், தொழிற்சாலைக் கழிவுகள் சுகாதாரக் கேடு விளைவிக்காத வண்ணம் வெளியேற்றப் படுவதும் மிகச் சுலபமாகவே நடைபெறக் கூடியவை. பெரும்பாலும் சுற்றுப் புறச்சூழல் மாசுபாடு தொழிற்சாலைக் கழிவுகளால் முதலாளித்துவ நாடுகளில் ஏற்படுவதற்குக் காரணம் கழிவுகளைச் சுத்திகரிக்கச் செலவிடவேண்டி வரும் தொகையினையும் முதலாளிகள் லாபமாகச் சம்பாதிக்க விரும்புவதனாலேயேயாகும். அத்தகைய லாப நோக்கம் இல்லாததால் சோசலிச நாடுகளில் சுற்றுப் புறச்சூழல் மாசுபடுவது என்பது அறவே இல்லாத பல நகரங்கள் இருந்தன. சோசலிசம் இருந்த வேளையில் உலகின் மிகத் தூய்மையான நகராக ரஷ்யாவின் மாஸ்கோ இருந்தது. அதன்பின்னர் மக்கள் சீனத்தின் தலைநகரமான பெய்ஜிங் இருந்தது. ஆனால் தற்போது சீனத்தில் சுற்றுப்புற சூழலில் தலைகாட்டியுள்ள மாசுப் பரவல், அடிக்கடி நிகழும் சுரங்க விபத்துக்கள் போன்றவை சீனாவின் இந்த முதலாளித்துவ வளர்ச்சிக்கு பல வகைகளில் முட்டுக் கொடுத்துவரும் முதலாளித்துவ ஊடகங்களால் கூட மூடிமறைக்க முடியாமல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுதவிர சமூக உற்பத்தியின் பலன்கள் சமூக மக்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் சோசலிச சூழ்நிலை மாறி ஒருசில முதலாளிகளின் தொப்பையை நிரப்பும் போக்கு வளர்ந்தும் வளர்க்கப்பட்டும் வருவதால் சமூகத்தில் பரவலாக வறுமையும் சுரண்டலும் பற்றாக்குறையும் மலிந்து போய்க் கொண்டிருக்கின்றன. கண்ணுக்குத் தெரியாமல் இருந்த லஞ்சம், சமூகம் முழுவதும் தலை விரித்தாடும் அவலநிலை வெட்ட வெளிச்சமாக நிலவுகிறது. கலாச்சார ரீதியாக விபச்சாரம் போன்ற போக்குகள் மலிந்துள்ள நிலையும், அழகிப் போட்டிகள் என்ற பெயரில் அரைநிர்வாண நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் பெருமளவு அதிகரித்துள்ளன.

தன்னலவாத வெளியுறவுக் கொள்கை

எந்த ஒரு சோசலிச நாட்டின் வெளியுறவுக் கொள்கையும் எந்தவொரு நாட்டிலும் ஏகாதிபத்தியத் தலையீடு இல்லாமல் அதனைத் தடுக்கும் அரணாக விளங்கும் தன்மையைக் கொண்டதாகவே இருக்கும். ஆனால் ஈராக்கின் மீது அமெரிக்கத் தலையீட்டைச் சாத்தியமாக்கிய தீர்மானம் ஐ.நா.வில் விவாதத்திற்கு வந்த வேளையில் அதனைத் தன் கைவசம் உள்ள வீட்டோ அதிகாரத்தைக் கொண்ட சீனா தடுத்திருக்க முடியும். அதனைச் செய்வது குறித்து சீனா அப்போது நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. மேலும் நேபாளத்தில் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) கட்சியினால் நடத்தப்பட்ட இயக்கங்களும் கூட எந்தவகையான சகோதரத்துவ ஆதரவினையும் சீனாவிலிருந்து பெற முடியவில்லை. மாறாக அனைத்து முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளின் பாணியில் யாருடைய கை மேலோங்குகிறதோ அவர்களிடம் உறவு வைத்துக் கொண்டு தன் நலனை அதாவது பூனை எலியைப் பிடிக்கிறதா என்ற சுயநலனைப் பார்ப்போம் என்ற கோட்பாடற்ற நடைமுறையினையே சீனாவின் தற்போதைய தலைமை வெட்கமின்றிப் பின்பற்றிக் கொண்டுள்ளது.

செத்த பாம்பாயிருந்த தலாய் லாமாவின் வாலில் இருந்த உயிரைத் தலைக்கு வரச் செய்த முதலாளித்துவ வழி

இந்தப் போக்கு சீனாவுடன் ஒரு சுயேட்சைக் குடியரசாக இடம் பெற்றிருந்த திபெத் நாட்டிலும் தீவிரமான சேதத்தினை விளைவித்துள்ளது. மக்களின் மூடநம்பிக்கையை மையமாக வைத்து வளர்ச்சிப் பாதைக்குக் குறுக்கே நின்ற தலாய் லாமா போன்ற மதவாத சக்திகள் பலகாலம் சோசலிச ரீதியிலான வளர்ச்சியினால் பலனடைந்தவர்களும், தலாய் லாமாவிற்கு பின்பலமாக இருந்த நிலவுடமை சக்திகளின் பண்ணையடிமைச் சுரண்டலில் இருந்து விடுதலைபெற்றவர்களுமான திபெத்திய மக்களால் புறக்கணிக்கப்பட்டே வந்தனர். சீனாவிற்கு எதிரான அவரது பல அறைகூவல்களை அவர்கள் பலகாலம் செவிமடுக்கவில்லை. ஆனால் திபெத்தை ஒரு மிகப்பெரும் சுற்றுலா தளமாக மாற்றத் திட்டமிட்டு அதற்கான சாலை வசதிகள் அனைத்தையும் இன்றைய சீன அரசு முன்னுரிமை கொடுத்து உருவாக்கியுள்ள சூழ்நிலையில் அதே திபெத்திய மக்கள் சீன அரசிற்கு எதிராகப் போராட்டப் பாதையில் குதித்துள்ளனர்.

அதாவது அவர்களைப் போராட்டப் பாதையில் இறக்கிவிட தலாய் லாமாவால் முடிந்துள்ளது. அதன் காரணம் இப்போது தோன்றி வளர்ந்துவரும் சீனாவின் முதலாளித்துவப் போக்குகளே. அதாவது சோசலிசப் பொருளாதாரத்தில் தலைதூக்காதிருந்த இன உணர்வுகள் தற்போது தலை தூக்கியுள்ளன. தலாய் லாமா போன்ற விசம சக்திகளால் அவை கெட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.அதற்குச் சாதகமாக அமைந்துள்ளது திடீரென உடனடிக் காரணமேதுமின்றி பலரும் கூறுவது போல் மக்களின் அடிமனதில் நிலை கொண்டிருந்த இன உணர்வு அதாகவே பீறிட்டு வெளிப்பட்டுள்ளதல்ல. சுற்றுலாத் தளமாக திபெத் வளர்ச்சியடைந்தால் சுற்றுலாப் பயணிகள் மூலம் அதாவது விடுதிகள், பொழுதுபோக்கு வசதிகளை அங்கு செய்துதருவதின் மூலம் வரும் வருமானம் அனைத்தும் இன்றுள்ள பாரபட்சச் சூழ்நிலையில் ஹன் சீனக் குடியினைச் சேர்ந்தவர்களுக்குச் சென்றுவிடும்; தலைமுறை தலைமுறையாக திபெத்தில் வசித்து வந்த தங்களுக்கு அந்த வருவாய் கிட்டாது என்ற அச்சமும், முதலாளித்துவம் உருவாக்கிய வருவாய் ரீதியிலான சிந்தனைப் போக்குமே இந்தவகைப் போராட்டங்கள் தோன்றுவதற்கு சாதகமாக அமைந்துள்ளன. இக்கண்ணோட்டமே திபெத்தில் புதிதாக முளைத்துள்ள உடமை வர்க்கத்தை இனவெறியை முன்னிலைப் படுத்தி கிளர்ச்சிகளில் ஈடுபடச் செய்துள்ளது. எனவே உள்ளடக்கத்தில் சோசலிசத்தின் அனைத்துக் கூறுகளையும் இழந்து நிற்கும் இன்றைய சீன சமூக அமைப்பு ஒரு சோசலிச அமைப்பு என சீன கம்யூனிஸ்ட் கட்சியினால் முன்வைக்கப்படுவதும், அக்கட்சி தன்னை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாகக் காட்டிக் கொண்டு மாவோவின் தலைமையில் இருந்த உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்நாளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு 60 ஆண்டு நிறைவுதினக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் ஒரு மோசடியே தவிர வேறெதுவும் அல்ல.

சோசலிச வாடைக்கெதிராகக் கூட பிரச்சாரம் மேற்கொள்ளும் ஊடகங்கள்

இத்தகைய சோசலிசம் மறைந்துவிட்ட நிலையில், வெற்றுப் பெருங்காய டப்பாவாக சோசலிசத்தின் இறுதிகட்ட வாடைமட்டும் வீசிக் கொண்டிருக்கும் சீன நாட்டை அது இன்னும் ஒரு சோசலிச நாடு என்று உணர்வு மற்றும் அறிவு மட்டக் குறைவினால் எண்ணிக் கொண்டிருக்கும் மக்களிடையே அதுகுறித்த வெறுப்பைத் தூண்டுவற்காக பி.ஜே.பி. போன்ற கட்சிகள் முயல்கின்றன. சோசலிசம் கம்யூனிஸம் போன்ற விஞ்ஞானபூர்வ சமூக முன்னேற்றக் கருத்துக்களை எதிர்கொள்ள முதலாளித்துவத்தால் வேறெந்த விஞ்ஞானபூர்வக் கருத்துக்களையும் முன்வைக்க முடிவதில்லை. அதனால், அவை வெறித்தனத்தைத் தூண்டவல்ல தேசிய, பிராந்திய, மொழி, இன வாதங்களையே அக்கருத்துக்களுக்கெதிராக முன் வைக்கின்றன. அந்த அடிப்படையில் அவ்வாறு அது மூட்ட நினைக்கும் சீன எதிர்ப்பு நெருப்பிற்கு அருணாச்சலப் பிரதேசத்தில் தலாய் லாமா மேற்கொண்ட சுற்றுப் பயணத்திற்கு சீன அரசு தெரிவித்த எதிர்ப்பு எண்ணெய்யாகப் பயன்பட்டுக் கொண்டுள்ளது. இது போன்ற விசயங்களில் சோசலிசப் பாதையைக் கைவிட்டு முதலாளித்துவப் பாதையில் வெகுவேகமாக நடைபோட்டுக் கொண்டிருக்கும் சீனாவும் சரி, ஏகாதிபத்தியக் கூறுகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவும் சரி இவ்விரண்டு நாடுகளுமே அருணாச்சலப் பிரதேச மக்களின் உள்ளக்கிடக்கை என்ன என்பதற்கு ஒரு மதிப்பும் தராமல் ஆதிக்கவாதப் போக்குகளுடனேயே செயல்படுகின்றன. தலாய் லாமா சுற்றுப் பயணத்தின் மூலம் அவரது புத்த மதவாதத்தைப் பயன்படுத்தி அருணாச்சலப்பிரதேச மக்களின் மனநிலையைத் தன்பக்கம் திருப்ப இந்தியா முயல்கிறது. முதலாளித்துவப் போக்குகளை ஊக்குவித்ததன் காரணமாக உருவாகி வளர்ந்துள்ள திபெத்திய தேசிய உணர்வு இதுவரை செத்த பாம்பாக இருந்த தலாய் லாமாவிற்கு புத்துயிர் கொடுத்துள்ளது. அதனைப் பயன்படுத்தி புது மெருகுடன் வலம்வரும் அவரை எவ்வாறு அருணாச்சலப்பிரதேசத்தில் உலாவர இந்தியா அனுமதிக்கலாம் என்று சீனா குமுறுகிறது.

பாம்பும் நோகாமல் பாம்பை அடித்த கம்பும் நோகாமல்

இந்த நிலையில் எதிர்க் கட்சிகளின் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா திராணியற்றதாக உள்ளது என்ற வாதத்தை எதிர்கொள்ளும் விதத்திலும், அதேசமயத்தில் ஊடகங்கள் உருவாக்கிக் கொடுத்துள்ள சீன எதிர்ப்பு மனநிலையைப் போக்கிவிடாமல் எதிர்காலத்தில் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலும் இந்தியாவின் தற்போதைய அரசாங்கம் ஒரு நிலைபாட்டினை எடுத்துள்ளது. பெரிய அளவில் சீன அச்சுறுத்தல் எதுவுமில்லை;எதிர்க் கட்சிகளும், ஊடகங்களும் பொறுப்புடன் இவ்விசயத்தில் நடந்து கொள்ளவேண்டும் என்ற பெரிய மனிதத் தன்மை வாதத்தில் பிரதமரும், உள்துறை அமைச்சரும், வெளியுறவுத்துறை அதிகாரிகளும் ஈடுபடுகின்றனர்.
ஆனால் அவர்கள் வெறுப்புப் பிரச்சாரம் ஊடகங்கள் மற்றும் எதிர்க் கட்சியினரால் எந்த நோக்குடன் செய்யப்படுகிறது என்பதை அம்பலப்படுத்த விரும்பவில்லை. 62ம் ஆண்டு இந்தியசீன யுத்தத்தின் போது சாதரண மக்களிடையே உருவாக்கி வளர்க்கப்பட்ட சீனவிரோத மனநிலையைப் பயன்படுத்த, ஒரு தீவிர தேசியவாத உணர்வினைத் தட்டியயழுப்ப, அந்நாட்டிற்கும், சோசலிசக் கருத்திற்கும் எதிரான ஒரு துவேசத்தையும் குஜராத்தி உணர்வினையும் தூண்டும் வகையில் நேருவிற்கு எதிராக சர்தார் வல்லபாய் படேலை நிறுத்தி அரசியல் ஆதாயம் பெற பி.ஜே.பி. கட்சி முயல்கின்றது.

மேலும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் உலக முதலாளித்துவத்தின் பங்கும் பகுதியுமாக உள்ள இந்திய முதலாளித்துவம் பற்றிக் கொள்வதற்கு வசதி செய்துதரும் விதத்தில் முதலாளித்துவ ஊடகங்கள் சீனாவின் உருவில் ஒரு எதிரியை முன்நிறுத்துகின்றன. அதன்மூலம் அவை தற்போது ஒரு சீன எதிர்ப்புப் பிரச்சாரத்தை முடுக்கிவிடவும் தேவை ஏற்படும் போதெல்லாம் உள்நாட்டுப் பிரச்னைகளைத் திசைதிருப்பிவிட, அதனை நீருபூத்த நெருப்பாக மக்கள் மனதில் நிலை நிறுத்தவும் முயல்கின்றன.

சுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்ற அம்சத்தில் யாரும் நெருங்க முடியாத உயரத்தில் தமிழ்நாடு விளங்குகிறது. ப்ளெக்ஸ் போர்டுகளும், சுவரொட்டிகளும் கண்ணைக்கவரும் இத்தனை வண்ணங்களில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பார்க்குமிடமெல்லாம் பளிச்சிடுவதை இந்தியாவின் வேறு எந்த மூலைக்குச் சென்றாலும் பார்க்கவே முடியாது.
எங்கும் எதிலும் சுயவிளம்பரம்

திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகளுக்கு முன்பெல்லாம் பத்திரிகை அடித்துக் கொடுப்பது என்பதே அபூர்வமாக இருந்தது. வெற்றிலை பாக்கைத் தட்டில் ஏந்தி தங்களது உறவினர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் கொடுத்து அவர்களை விழாவில் கலந்து கொள்ள வேண்டும் முறையே அப்போது பரவலாக இருந்தது. அதன்பின் பத்திரிகை அடித்து அழைக்கும் முறை வந்தது. நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் நாள், இடம் போன்றவற்றை நினைவில் நிறுத்த வேண்டிய அவசியத்தை அது குறைத்தது.
அதன் பின்னர் சுவரொட்டிகள் அடித்து விளம்பரம் செய்யும் முறை வந்தது. பொதுவாக அரசியல், கட்சிகளால் மட்டுமே அதுவரை செய்யப்பட்டு வந்த சுவரொட்டி ஒட்டும் பழக்கம் திருமணம் போன்ற விழாக்களை அறிவிக்கவும் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் அது வினோதமாகத் தோன்றியது. அதன் பின்னர் வண்ணமயமான ப்ளக்ஸ் போர்டுகள் அறிமுகமானபோது மணமக்களின் படங்களையும் சுவராட்டிகளாக ஒட்டும் பழக்கம் வந்தது. குறைந்த பட்சம் இன்று ஒரு நாளாவது அவர்கள் ராஜா, ராணி போல் ஊர் உலகிற்கெல்லாம் தெரிந்துவிட்டுப் போகட்டுமே என்ற அடிப்படையில் அதை ஜீரணிக்க முடிந்தது.
அதன் பின்னர் இப்போது பார்த்தால் மணமக்கள் படத்தோடு அந்த சுவரொட்டியை அடித்தவர்களின் படங்களும் பெரும் பெரும் அளவுகளில் பொது இடங்கள், சாலையோரங்களில் எங்கு பார்த்தாலும் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. அதாவது ஏதோ நான்கு பேருக்கு நல்லது செய்து அவர்களுக்குத் தெரிந்தவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்ள இனி அவசியம் எதுவுமில்லை. உங்களிடம் இருக்கும் பண வசதியைப் பொறுத்து உங்களது படங்களைப் பெரிது பெரிதாக சுவரொட்டியாக அடித்து நீங்கள் விரும்பும் போதெல்லாம் ஏதாவதொரு நிகழ்ச்சியை சாக்காக வைத்து உங்களைப் பிரபலமாக்கிக் கொள்ளலாம். அத்தகைய நிலை ஏற்பட்டுவிட்டது.

அரசியல் துறையை எடுத்துக் கொண்டால் ஒரு காலகட்டத்தில் தேர்தலில் நிற்பவர்கள் கூட, அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதை வைத்தே கருதப்பட்டனர். அதன் பின் கட்சித் தலைவர்களின் படங்களைப் போட்டு வாக்கு கேட்கும் முறை நடைமுறையானது. அதன் பின்னர் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அனைத்துத் தலைவர்களின் பகாசுரப் படங்களையும் போட்டு விளம்பரங்கள் செய்யப்பட்டன. தற்போது மேல் மட்ட கீழ்மட்டத் தலைவர்களின் படங்களோடு வேட்பாளருக்கு வாக்குக் கேட்பவரின் படங்களும் இடம் பெறுகின்றன.

அடைமொழிக் கலாச்சாரம்

அதைப் போல் முன்பெல்லாம் பெரிய தலைவர்கள் அடை மொழிகள் எவற்றையும் போட்டுக் கொள்ள விரும்புவதில்லை. அதன் பின்னர் அடைமொழிகள் போடுவது அறிமுகமானது. அப்போதும், ஒருவருக்குக் கூறப்பெறும் அடைமொழியை வைத்து அத்தலைவரை எளிதில் இவர்தான் என்று கூறிவிடுவர். சிலம்புச் செல்வர், கோவைக் கம்பர், முத்தமிழ்க் காவலர் போன்ற அடைமொழிகளை அதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஏனெனில் மா.பொ.சி, கருத்திருமன், கி.ஆர்.பெ. விஸ்வநாதன் போன்றவர்களுக்கு அவர்கள் இலக்கியத்திற்குச் செய்த வழங்கல்களை வைத்துக் கொடுக்கப்பட்ட அடைமொழிகள் இவை.
ஆனால் அதன் பின்னர் அடைமொழிகள் கொடுக்கும் கலாச்சாரம் அசுர வேகத்தில் வளர்ந்து தற்போது அடை மொழிகள் அனந்தமாகிப் போய்விட்டன. அடைமொழி கொடுக்கப்படுபவர் சார்ந்திருக்கும் துறை அவரது அத்துறைக்கான வழங்கல் ஆகியவை இப்போதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல. ஒரு துறையைச் சார்ந்த, அதற்குக் குறிப்பிடத்தக்க வழங்கல்களைச் செய்தவர்களுக்கு அது குறித்த அடைமொழிகள் மட்டுமே கிடைக்கும் ஆனால் எத்துறைக்கும் எதுவும் வழங்காதவர்களுக்கு, மாறாக ஒழுக்கம், நீதி, நெறி, தன்னடக்கம், எளிமை, அர்ப்பணிப்பு போன்ற மனித குலம் போற்றும் குணங்களுக்கு தங்களால் முடிந்த அளவு சேதம் விளைவித்தவர்களுக்கு அனைத்து அடைமொழிகளும் அடைமழையயனப் பொழியப்படும் நிலை தோன்றிவிட்டது. ஒரு நாள் லெனினாக இருக்கும் அவர் மறுநாள் மாவோவாக ஆவார். நேற்று செகுவேராகவாக இருக்கும் அவர் இன்று பிடல் காஸ்ட்ரோவாக ஆகிவிடுவார். நாளை அவர் நெல்ஸன் மண்டேலா நாளை மறுதினம் அவர் சாக்ரடீஸ்.

சமூகமயமாகும் பொய்

இப்படி எல்லாம் சிந்திப்பதும் எழுதுவதும் இன்று தோன்றியுள்ள நிலையை மேலோட்டமாகப் பார்த்துப் பரிகசிப்பதற்காக அல்ல. அற்ப விசயங்கள், யாரும் பொருட்படுத்தாத விசயங்கள் எனப் பொதுவாகக் கருதப்படும் விசயங்கள் தான் பல சமயங்களில் ஒரு சமுதாயத்தை, அதன் பெருமையை ஆழமாகப் பாதிக்க வல்லவையாக ஆகிவிடுகின்றன. இது போன்ற விசயங்களில் மனதை ஈடுபடுத்துவது ஏன் அவசியமாகிறது? ஆம். இது போன்ற விசயங்கள் பொய்யைச் சமூகமயமாக்குகின்றன. பொய் என்றால் நீதிமன்றத்திலோ, பஞ்சாயத்திலோ சாட்சி, சம்பந்தம் என்று வரும் போது கூறுவது மட்டுமல்ல. அது சிலரைச் சில சமயங்களில் மட்டும் பாதிக்கக் கூடிய விசயம். ஆனால் தன்னை வரம்பிற்கப்பாற்பட்டு பெரிதாக்கிக் காட்டுவது, பார்ப்பது, தான் பெறுவதற்கு அருகதையில்லாத பெருமைகளை அடைய முயல்வது தங்களின் காரியத்திற்காக ஒருவரை அவருக்கு முற்றிலும் பொருந்தாத விதத்தில் வானளாவப் புகழ்வது ஆகியவை தனித்தனியாக யாரையும் குறிப்பாகப் பாதிப்பதில்லை. அதனால் அது நம்மால் கண்டு கொள்ளப்படாமலும் போய்விடுகிறது. ஆனால் பணம் செலவு செய்து சுயநல நோக்கங்களோடு செய்யப்படும் அது பொய்யை உறுத்தலின்றி நடமாட, கோர நர்த்தனம் ஆட அனுமதித்து சமூகத்தின் இன்றைய நியதி ஏதாவதொரு பொய்யே என்ற நிலையை நோக்கிக் கொண்டு செல்கிறது, வருந்தத் தகுந்த விதத்தில் தமிழ்ச் சமுதாயம் தலைவிரித்தாடும் இந்த சுயவிளம்பரப் போக்கினால் எந்தப் பொய்யையும் சிரமமின்றிச் சகித்துக் கொள்ளும் ஒரு சமூகமாக மாறிவருகிறது.


தனிப்பட்ட விழாக்கள் பொது நிகழ்வுகளா?

இதை ஒத்த விதத்தில் தமிழகத்தில் சமீப காலமாக ஒரு புதுப்போக்கு அதாவது தங்களது தனிப்பட்ட குடும்ப விழாக்களை சமூக விழாக்கள் போல் நடத்தும் போக்கு மிக வேகமாக நோய்க் கிருமிகள் போல் வளர்ந்து வருகிறது. மிகப் பரந்த அளவில் அவ்வாறு செய்யப்படும் அத்தனிப்பட்ட விழாக்கள் இந்த இல்லத்தின் விழா, அந்த இல்லத்தின் விழா என்று பெயரிடப்பட்டு விளம்பரம் செய்யப்படுகின்றன. இந்த இல்லம் அந்த இல்லம் என்று குறிப்பிடுகையில் அது பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஒரு இல்லமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.ஒரு குடும்பம் தன்னுடைய நலனை மட்டும் பேணக்கூடிய ஒரு சுயநலக் குறியீடாக இருக்கும் வரை அது பிற மக்களுக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. தெரியவேண்டியதும் பிறர் தெரிந்திருக்க வேண்டியதும் அவசியமுமல்ல. அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் மக்களுக்கான பொது விசயங்களில் அக்கறை கொண்டவர்களாக, தன்னலப் போக்கைத் தாண்டி ஓரளவு பொதுநல எண்ணம் மிக்கவர்களாக இருக்கும் போது மட்டுமே அக்குடும்பம் மக்களின் குறிப்பானதும் சிறப்பானதுமான பார்வைக்கு வருகிறது.

நினைக்கப்பட்ட குடும்பங்கள்

அப்படிப்பட்ட குடும்பங்கள் தேசிய, பிராந்திய வட்டார அளவுகளில் முன்பு நிறைய இருந்தன. அக்குடும்பங்கள் இது எங்களது பிரபலக் குடும்பம் என்று பெரும் விளம்பரங்கள் செய்து சொல்லிக் கொள்ளாதிருந்தாலும் மக்கள் அனைவராலும் பெரிதும் அறியப்பட்டவையாய் இருந்தன. அது போன்ற குடும்பங்கள் தங்கள் பகுதியில் இருப்பது அனைவராலும் பெருமையாகக் கருதப்பட்டது. அக் குடும்பங்கள் குறித்த தகவல்களை பிறரிடம் அண்டை அயலார்களும் மிகவும் மகிழ்வுடன் கூறுவது வழக்கமாக இருந்தது. அதற்குக் காரணம் அவர்கள் தங்களது தன்னலம் சார்ந்த விசயங்கள் எதிலும் அக்கறை காட்டுவதோ அதற்காக அண்டை அயலாரிடம் பூசல்களில் ஈடுபடுவதோ கிடையாது. அவர்களிடம் இருந்த அக்குணம் ஒரு உயர்ந்த கலாச்சாரமாக சாதாரண மக்களின் பார்வையில் இருந்தது. ஆனால் தற்போது அத்தகைய பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பலவீனமாகி கடந்த கால நினைவுச் சின்னங்கள் போல் ஆகிவிட்டன. ஆனால் இப்போது எங்களது குடும்ப விழாக்கள் என்ற பெயரில் நாம் மேலே கூறிய விதத்தில் மிகுந்த ஆடம்பரத்துடன் பல தனிப்பட்ட அர்த்தமேயில்லாத விழாக்களை நடத்தி சுயவிளம்பரம் செய்து கொள்ளக்கூடியவர்கள் சிரமமின்றிக் குறுக்கு வழிகளில் தவறான முறைகளில் பணம் சேர்த்தவர்களாகவே இருக்கின்றனர்.

அதாவது கந்துவட்டி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் ஈடுபடுபவர்களே இன்று தங்களிடம் உள்ள பண பலத்தால் தங்களை ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல விளம்பரங்களின் மூலம் காட்டிக் கொள்கிறார்கள். நாம் மேலே விவரித்த அந்தப் பழைய காலத்திலும் பணவசதி படைத்தோர் இருக்கவே செய்தனர். ஆனால் அவர்கள் இந்த அளவிற்கு இப்படிப்பட்ட பொது அங்கீகாரத்திற்காக அலைந்தது இல்லை. பொதுவாக மக்கள் தங்களை உயர்ந்த முன்மாதிரிகளாகப் பார்க்கமாட்டார்கள். ஏனெனில் நாம் நமது பொருளாதார மேம்பாட்டுக்காகவே வாழ்பவர்கள்; எனவே மற்றவர்களுக்கு நம்மை நினைவு கொள்ளும் அவசியம் நேராது என்று அவர்களே எண்ணினர்.

தமிழ்ச் சமுதாயம்

இப்படிப்பட்ட சுயவிளம்பரம், தற்பெருமை போன்ற போக்குகள் சாதாரணமாக உயர்ந்த சமுதாய அமைப்புகளில் தோன்றுவதில்லை. தன்னைப் பற்றி மிக அதிகம் பேசுவது அரைவேக்காட்டுத்தனம் பக்குவமற்ற நடவடிக்கை என்ற எண்ணப்போக்குகளே இன்றும்கூட சமூகத்தில் உரைகற்களாக உள்ளன.

தமிழ்ச் சமுதாயத்தில் இப்போக்கு எப்படி வந்தது என்று அப்போக்குகள் தலைவிரித்தாடும் இன்றைய சூழ்நிலையில் பார்ப்பது அவசியமாகிறது. எந்த ஒரு போக்குமே திடீரென தற்செயலாகக் கிளர்ந்தெழுந்து வளர்வதில்லை. ஒரு நல்ல போக்கு இருப்பதற்கும், அழிவதற்கும் அதைப்போல் ஒரு தவறான போக்கு உருவாவதற்கும், வளர்வதற்கும் காரணங்களாக சில சமூகப் பின்னணிகள், சரியான அல்லது தவறான சமூக இயக்கங்கள் நிச்சயம் இருக்கின்றன. அதைப்போல் இப்போக்கிற்கும் ஒரு பின்னணியும் இதன் வளர்ச்சிக்கான பல காரணிகளும் இருக்கவே செய்கின்றன.

தமிழ்நாடு இந்தியாவில் முன்னேறிய சில மாநிலங்களில் ஒன்று. மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் போன்ற மாநிலங்களோடு தமிழ்நாடும் ஒரு முன்னேறிய வளர்ச்சியடைந்த மாநிலமாக விடுதலைபெற்ற காலத்திலேயே விளங்கியது.அதற்கான காரணம் இன்று பலரும் உரத்து முழங்கி முன் வைப்பது போல் அதனுடைய தொன்மையும் பாரம்பரியமும் மட்டுமல்ல. பழைய நிலவுடைமைக் காலத் தமிழ்ச் சமூகத்தின் எந்தப் போக்குகள் இன்றைய அதன் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்திருக்கின்றன என்று ஆக்கப்பூர்வமாகத் தேடினால் அப்படி எதுவுமில்லை என்பதே தெளிவாக நமக்குத் தெரியவரும். அப்படியானால் தமிழ்நாடு ஒரு முன்னேறிய மாநிலமாகக் கருதப்பட்டதற்கான காரணங்கள் எவை என்று பார்த்தால் அதன் வேர் வெள்ளையர் ஆட்சி காலம் தொடங்கி நமக்கு கிடைத்த கல்வியிலேயே உள்ளது என்பதை நாம் அறியமுடியும். கிறிஸ்தவ மிசனரிகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கல்வி நிலையங்களைத் தோற்றுவித்து அதற்கு முன்பு கல்வி என்ற பெயரில் இங்கிருந்ததைக் காட்டிலும் மேலான ஒரு தாராளவாதக் கல்வியை கற்பிக்கத் தொடங்கினர். அதன் விளைவாகக் கல்விகற்று வெளி வந்தோர் விஞ்ஞானம் அறிந்தவர்களாக தொழில்நுட்பம் தெரிந்தவர்களாக, பொருளாதார, இலக்கிய அறிவு பெற்றவர்களாக ஆயினர். அத்திறமைகளைப் பயன்படுத்தி பல்வேறு பணிகளில் அவர்கள் சென்றமர்ந்தனர். அவ்வாறு தங்களுக்கு வேலை தேடிக் கொண்டதோடு மட்டுமின்றி அதுவரையில்லாத விஞ்ஞான தொழில்நுட்ப, பொருளாதார, இலக்கியரீதியான புது விசயங்களை மற்றவர்களும் கற்கவேண்டும் என்று கல்விப் பரவலாக்களை அவர்கள் ஆதரித்தனர்.

அது மட்டுமின்றி கல்வி கற்க வசதியில்லாதவர்களிடமும் இக் கருத்துக்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். தங்களது முயற்சியின் மூலம் அக்கருத்துக்களின் பாலான ஒரு ஈடுபாட்டை அவர்கள் வளர்த்தெடுத்தனர். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நாம் தொன்மை, புராதானம் என்று பெருமையுடன் பேசிக் கொள்கிறோமே அவை உருவாக்கியிருந்த செயற்கையான ஜாதி சமூகப் பிரிவுகளை அக்கல்வி முறை தகர்த்தெறிந்தது. ஆனால் இது குறித்து இப்போது வேறொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதாவது இடையில் தமிழர் சமூக வாழ்க்கையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தக் கல்வி ஆற்றிய பங்கினை அக்கருத்து கண்டு கொள்வதில்லை.

அது, தமிழ்ச் சமூகம் தொன்று தொட்டே மிக நல்ல சமூகமாக இருந்து கொண்டே தான் இருந்தது; இடையில் வந்த ஆரியக் கலப்பின் போதுதான் அதில் தவறான போக்குகள் தலைதூக்கத் தொடங்கின; ஆரியக்கலப்பிற்கு முன்பு இருந்த தமிழ் சமூகத்தில் ஜாதிய முறை என்பது இருந்திருக்கவில்லை; ஆரியர்களே இந்த நாசகரக் கண்ணோட்டத்தை நம்மிடையே கொண்டு வந்து புகுத்தினர்; அவர்கள் மட்டும் இங்கு வந்து இது போன்ற வருணாசிரமப் போக்குகளை புகுத்தாதிருந்திருந்தால் தமிழ்ச் சமுதாயம் இந்தப் போக்குகள் இன்றி அப்படியே இன்னும் உன்னதமாக வளர்ந்திருக்கும் என்ற கருத்தினை முன்வைக்கிறது. இவ்வாறு கூறுவதில் தொடங்கி அது எந்த எல்லைவரை செல்கிறது என்றால் இன்று தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படுபவர்களைத் தவிர வேறுயாரும் தமிழர்களே அல்ல என்று கூறுமளவிற்குச் செல்கின்றது. இக்கூற்று எவ்வகையான விஞ்ஞானபூர்வ வரலாற்று ஆதாரமும் இன்றி ஒன்றை வலிந்து கூறி நம்பவைக்கும் முயற்சியே என்பதைப் பெரிதும் நாம் விளக்கத் தேவையில்லை.

ஏற்றுக்கொள்ள முடிந்தவையே ஏற்றுக் கொள்ளப்படும்

எந்த ஒரு சமூகத்திலும் அச்சமூகத்தில் ஊடுருவும் வேறொரு சமூகப் பகுதியின் பழக்கவழக்கங்களும் வாழ்க்கை முறையும் அச்சமூகம் அன்றைய நிலையில் அவற்றில் சிலவற்றை அல்லது பலவற்றை ஏற்றுக் கொள்ள முடிந்ததாக இருந்தால் மட்டுமே அது ஏற்றுக் கொள்ளும். அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாதவற்றை அதாவது அன்றைய காலகட்டத்தின் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராதவற்றைப் புகுத்த முற்பட்டால் அது அதனை ஏற்றுக்கொள்ளாது. இதனால் தான் இந்திய சமூகத்தில் எத்தனையோ படையயடுப்புகள் நிகழ்ந்த போதும் அத்தகைய படையயடுப்புகளை நிகழ்த்தியவர்களின் பழக்கவழக்கங்களை அப்படியே அது ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக அவ்வாறு படையயடுத்து வந்த பல சமூகத்தினரும் இந்தியாவில் அப்போது நிலவிய வாழ்க்கை முறையில் பெரும்பாலும் ஐக்கியமாகிவிட்டனர் அதாவது இந்தியமயமாகிவிட்டனர். இதற்கு ஒரே விதிவிலக்கு வெள்ளையர்கள் தங்களது ஆட்சியை நிலைநாட்டியபோது ஏற்பட்டதுதான். அவர்கள் அதுவரை நிலவிய சமூக உற்பத்தி முறையைக் காட்டிலும் மேலானதொரு எந்திரத் தொழில் உற்பத்தி முறையை அறிமுகம் செய்து அதுவரை நிலவிய நிலவுடைமை உற்பத்தி முறையைக் காலாவதியானதாக ஆக்கினர். அதன் விளைவாக இந்திய சமூக வாழ்விலும் பல்வேறு அடிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டன. பழைய வாழ்க்கைக் கண்ணோட்டங்கள், போக்குகள் பலவும் அடிப்படையில் தகர்ந்துபோயின. எனவே, தமிழ்ச் சமூகம் ஆரியக்கலப்பின்றி இருந்திருந்தாலும் அது வெள்ளையரின் வருகைக்கு முன்பு அதாவது எந்திரத் தொழில் உற்பத்தி முறையின் அறிமுகத்திற்கு முன்பு அது தனது பழைய வாழ்க்கைப் போக்குகளாக கடைபிடித்து வந்த பலவற்றைத் தொடர்ந்து கடைபிடித்திருக்க முடியாது. மக்கட்தொகை மற்றும் மக்களின் தேவைகளின் பெருக்கம் ஆகியவற்றையயாட்டி பல மாறுதல்களுக்கு நிச்சயம் அது ஆட்பட்டே இருந்திருக்கும். ஒரு சமூகத்தின் பொருள் உற்பத்தி முறையே அடிப்படையானது. அது தற்போது இருப்பதைக் காட்டிலும் உயர்ந்த ஒன்றை எதிர்கொள்ளும் போது நிச்சயமாக எத்தனை முட்டுக்கட்டைகள் போட்டு அதனைத் தடுக்க நினைத்தாலும் அந்த மேலான உற்பத்தி முறையின் முன்பு அது சரணடைந்தே தீரும். அந்த முன்னேறிய பொருள் உற்பத்தி முறை நிலைகொண்ட பின்பு அது அதன் வளர்ச்சிக்கும் தற்காப்பிற்கும் உகந்த வகையிலான பல்வேறு சமூக, அரசியல், கலாச்சாரக் கருத்துக்களை அது உருவாக்கவே செய்யும். அது ஏற்கனவே நிலவிய சமூக, அரசியல் கலாச்சாரக் கருத்துக்களில் இருந்து பெரிதும் மாறுபட்டதாகவே இருக்கும். இத்தகைய மாறுதல் என்பதே அன்றும் இன்றும் என்றும் மாறாத விதி.

தேங்கிய குட்டை வளரும் சமூகமாகாது

தமிழ்ச் சமூகம் ஆரியம் போன்றவற்றின் கலப்பின்றி இருந்திருக்குமானால் மிக உன்னதமாக ஒரு வழிப்பாதையில் வளர்ந்தோங்கி இருக்குமென்று முன் வைக்கப்படும் கருத்து சுருக்கமாகச் சொன்னால் பாமரத்தனமானது. சமூக வாழ்க்கை பல சிக்கல்கள் நிறைந்தது. அதனுடைய வளர்ச்சிப் போக்கை இவ்வாறு பார்ப்பது எந்த வகையிலும் விஞ்ஞானபூர்வ பார்வையாக இராது. பிற சமூக கலப்புகள் இன்றி வாழ்ந்த சமூகம், இன்றும் வாழ்ந்து வரும் சமூகம் என்று எதுவுமே இருக்க முடியாது. அவ்வாறு ஒன்று இருக்குமானால் அது தேங்கிய குட்டைபோல் ஆகி அதன் மக்கட் தொகையும் சுருங்கி அச்சமூகமே ஒரு நாள் இல்லாதொழிந்துவிடும். பல ஆதிவாசிக் குழுக்கள் இவ்வாறு அழிந்துபோனதே அதற்கு எடுத்துக்காட்டு.
ஆரியம் முன்வைத்த ஜாதியக் கட்டமைப்பினை அது மிக மோசமானதாக இருந்த போதும் தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொண்டதற்கும் வரலாற்றுப் பூர்வமான காரணம் உள்ளது. உண்மையில் வருணாசிரம தர்மம் தமிழ்ச் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டத்தில் சமூகத்தின் பெருகிவந்த தேவைகளுக்கு உகந்த வகையிலான உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ற உற்பத்தி உறவு நிலவவில்லை. வேலைப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட வருணாசிரம தர்மம் அன்றைய நிலையில் பெரிதும் தேவைப்பட்ட உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருந்நது. அதனால் தான் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதே வரலாற்றை இயக்கவியல் பொருள் முதல்வாத ரீதியில் பார்த்த அதன் அடிப்படையில் பிரபல வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் அவர்கள் தொகுத்து வழங்கிய Recent perspectives of early Indian History என்ற நூலில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்தாகும்.
ஆனால் அந்த வருணாசிரம தர்மம் இன்றுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையோடு எள்ளளவும் ஒத்துப் போகாததாகும். அதனால் தான் அடிப்படையில் அது தகர்ந்துபோய் செங்குத்தாய் பிளவுபட்ட இரண்டு வர்க்கங்களுக்கிடையேயான முதலாளி, தொழிலாளி வேறுபாடு இன்று தோன்றியுள்ளது. இவ்வாறு நமது தமிழ்ச் சமூகத்தின் மேன்மை புதிய உற்பத்தி முறையினால் வித்திடப்பட்டு அதையயாட்டி நமக்கு கிடைத்த கல்வியினால் பெறப்பட்டது. அது அதனால் பலன் பெற்றோரால் பரப்பவும் விரிவாக்கவும் பட்டு வளர்ந்தோங்கியது. அந்தத் தன்மை விடுதலை பெற்ற காலத்தில் வந்த ஆட்சியாளர்களால் ஓரளவு பராமரிக்கவும் பட்டது. பள்ளிக் கல்வி வரை கல்வி அவர்களால் இலவசமாக்கப்பட்டது. கல்வி கற்பித்தவர்களிடமும் கூலிக்கு மாரடிக்கும் போக்கு நிலவாமல் அது இலட்சிய பூர்வபணி என்ற எண்ணப்போக்கு இருந்தது. இது அதிக மக்கட் தொகையைக் கொண்ட பல வடமாநிலங்களைக் காட்டிலும் நமது மாநிலத்தில் மிக அதிகமாக இருந்தது. அதனால் தமிழ்ச் சமூகம் ஒரு முன்னேறிய சமூகமாக இருந்தது; இவ்வாறு பலரால் பார்க்கவும்பட்டது.

பொருளாதார ரீதியாக குஜராத் போன்ற சில மாநிலங்கள் மேம்பட்டவையாக இருந்தாலும் அந்த மேம்பாடு இந்த எந்திரதொழில் உற்பத்தி முறை முன் வைத்த வியாபார வாய்ப்புகளை மட்டுமே அதிகம் பயன்படுத்தியதால் ஏற்பட்டதாகவே இருந்தது. இங்கு நிலவியது போல் கல்விப் பரவலாக்கல், பெண்கள் கல்வி போன்றவை குஜராத் போன்ற மாநிலங்களில் பெரிதாக நிலவவில்லை. எனவே பொருளாதார ரீதியாக மேம்பட்டதாக இருந்தாலும் கல்வி, பொதுஅறிவு போன்ற விசயங்களில் சிறந்தவர்களாகத் தமிழ் மக்களைப் போல் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் நாடெங்கிலும் சென்று வாழவில்லை.
கல்வி கற்றோர் எண்ணிக்கை நமது மாநிலத்தில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளைக் காட்டிலும் மிகக் கூடுதலாக இருந்ததால் தமிழர்கள் இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் சென்று வேலை தேட வேண்டிய, பணியமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அங்கெல்லாம் பணிகளுக்குச் சென்ற அவர்கள் பெற்றிருந்த கல்வி தந்த தகுதிகளையும் திறமைகளையும் வெளிப்படுத்தினர். அதை மையமாக வைத்தே தமிழர்கள் ஒரு முன்னேறிய பகுதியினர் என்ற எண்ணம் அறிவு சார்ந்த இந்தியா முழுவதிலும் உள்ள பலரிடம் ஏற்பட்டது.

சமூக இயக்கங்களின் பங்கு

எந்தவொரு சமூகத்தில் முற்போக்கான இயக்கங்கள் மக்களின் பங்கேற்புடன் நடக்கின்றனவோ அந்த சமூகத்தில் சமூக மதிப்புகள் பராமரிக்கப்படுவதும் அது உயர்ந்தது என்று பலரால் பாராட்டப்படுவதும் நிச்சயம் நடக்கும். அவ்விதத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த தேச விடுதலைப் போராட்டத்தில் வங்கம், பாஞ்சாலம், மராட்டியம் ஆகிய மாநிலங்களோடு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு இருந்தது. விடுதலை பெற்றவுடன் நிலவிய அரசியல் சூழ்நிலையும் சமூக மதிப்புகள் பேணிப் பாதுகாக்கப் படுவதற்கு உதந்ததாக இருந்தது. அதாவது தேசவிடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் போன்ற கட்சிகளே அப்போது இங்கு செல்வாக்குடன் விளங்கின.

விடுதலை பெற்ற வேளையில் சிறந்த கல்விமான்களை மட்டுமல்ல, மூலதனத் திரட்சியினைக் கொண்டு ஓரளவு வளர்ந்திருந்த பிராந்திய முதலாளிகளையும் கொண்டதாகத் தமிழகம் இருந்தது. பர்மா போன்ற நாடுகளில் வட்டித் தொழில் செய்து திரட்டிய மூலதனமும் புதிதாக உருவான சுதேசி முதலாளிகளுக்குச் சாதகமான, சுதேசி அரசு உருவாக்கிக் கொடுத்த சூழ்நிலைகளைப் பயன்படுத்தி அது வளர்வதற்கு ஏதுவான சாதக நிலையும் அவ்வர்க்கத்திற்கு இருந்தது. தொழில்ரீதியாகத் தமிழக முதலாளிகள் வளர்ச்சியடைந்தவர்களாக மட்டுமல்ல அவர்களில் சிலர் வட இந்தியாவின் பார்சி, மார்வாடி முதலாளிகளுடன் போட்டியிடக் கூடிய அளவிற்கு வலிமை வாய்ந்தவர்களாகவும் இருந்தனர்.

பிராந்திய முதலாளிகளின் அச்சம்

ஒரு புறம் தேசிய முதலாளித்துவ அரசு வழங்கிய சலுகைளைப் பயன்படுத்தி வளர்ந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் அவர்களுக்கு அச்சம் ஒன்றும் இருந்தது. அதாவது தம்மைக் காட்டிலும் பெரிய அளவு மூலதனத்தைக் கொண்டுள்ள அனைத்திந்திய முதலாளிகளின் மூலதனம் தமிழகத்திற்குள்ளும் புகுந்துவிட்டால் நமது வளர்ச்சி தடைப்படும் என்று அவர்கள் அஞ்சினர். எனவே தங்களது இந்தக் கவலையைக் கணக்கிலெடுத்துச் செயல்படும் அரசியல் சக்தியை அவர்கள் தேடத் தொடங்கினர்.

ஒட்டு மொத்த இந்திய முதலாளித்துவத்தின் நலனைப் பாதுகாக்கும் அமைப்பாக காங்கிரஸ் கட்சி இருந்ததால் அது அனைத்துச் சூழ்நிலைகளிலும் பிராந்திய முதலாளிகளின் தனிப்பட்ட நலன்களைப் பாதுகாப்பதாக இராது என்ற சந்தேகம் பிராந்திய முதலாளிகளின் மனதில் வேரூன்றத் தொடங்கியது.
அந்தச் சூழ்நிலையில்தான், திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க. உருவாகி, பிராந்திய முதலாளிகளின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது போன்ற முழக்கங்களை முன் வைக்கத் தொடங்கியது. அம்முழக்கத்தின் தர்க்க ரீதியான உச்ச கட்டமாக தனிநாடுக் கோரிக்கையையும் அக்கட்சி எழுப்பியது. அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்ற அளவிற்குத் தனிநாடு கோரிக்கை இக்கட்சியினால் அலங்காரச் சொல்லாடல்களுடன் முன்வைக்கப் பட்டது.

அவ்வேளையில் தங்களுடைய விருப்பத்தைப் பிரதிபலிக்கும் குரலை உரத்து எழுப்புவதற்கு ஒரு கட்சி உதயமாகிவிட்டது என்ற அடிப்படையில் பிராந்திய முதலாளிகள் தி.மு.க. வை ஆதரிக்கத் தொடங்கினர். ஆனால் அதே சமயத்தில் தமிழகத்தின் பிராந்திய முதலாளிகளுக்கு அவர்கள் பிற மாநிலங்களிலும் தங்களது மூலதனத்தை ஓரளவு கொண்டு செல்ல விரும்பியதால் தி.மு.க. எழுப்பிய தனிநாடு கோரிக்கையில் உடன்பாடில்லை.
இருந்தாலும் தனிநாடு கோரிக்கை, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது போன்ற முழக்கங்கள் பெருமளவு வடக்கே உள்ள முதலாளிகள் மூலதனம் தமிழகத்திற்குள் படையயடுக்காமலும் பிற மாநிலங்களில் தமிழக முதலாளிகளின் வியாபார நலன் பாதிக்காமலும் இருக்க அவர்களால் நன்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

ஒட்டு மொத்தமாகவே உலக அளவில் முதலாளித்துவம் ஒரு பிற்போக்கான அமைப்பாக மாறி சமூகத்தின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்க உதவாததாக இருந்ததோடு புதுப்புதுப் பிரச்னைகளை உருவாக்கக் கூடியதாகவும் மாறிவிட்ட சூழ்நிலையிலேயே இந்தியாவில் முதலாளித்துவம் வளர ஆரம்பித்தது. இச்சூழ்நிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர், விடுதலை கிடைத்தவுடன் முடிந்து விட்ட வேளையில் புதிதாக அரசு கட்டிலில் ஏறிய முதலாளித்துவத்தை எதிர்த்த போராட்டத்தை எந்த இடைவெளியும் இல்லாமல் கம்யூனிஸ்ட்கள் இங்கு தொடங்கியிருக்க வேண்டும்.

அதனுடைய இந்தப் பிற்போக்குத் தன்மையை அம்பலப்படுத்தி அதனை வேரோடும் வேரடி மண்ணோடும் தூக்கி எறிந்து ஒரு சோசலிஸ சமூக அமைப்பை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்ட எழுச்சியையும் உடனேயே உருவாக்கியிருக்க வேண்டும். அதைச் செய்திருந்தால் விடுதலைப் போராட்டச் சூழ்நிலையில் உருவாகி வளர்ந்த ஜனநாயக மதிப்புகளோடு, சுரண்டலற்ற அமைப்பினை உருவாக்கும் பின்னணியில் தோன்றும் சோசலிச மதிப்புகளும் தமிழ்ச் சமூகத்தில் நிலைபெற்றிருக்கும்.



கம்யூனிஸ்ட் இயக்கம் தந்த இடைவெளி

பிராந்திய முதலாளிகளின் பின்பலம் தி.மு.க. விற்கு இருப்பதையும், பிராந்திய முதலாளிகளின் பிரச்சார சாதனங்கள் அக்கட்சியை முன்னிலைப்படுத்துவதிலும் மயங்கி உழைக்கும் மக்களும் அக்கட்சியின் பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்பதை உணர்ந்து இங்கு செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்திய முதலாளி தமிழ் முதலாளி என்ற வேறுபாடின்றி அனைவரும் சுரண்டல்காரர்களே என்பதை உணர்த்தும் வகையிலான தீரம்மிக்க வர்க்கப் போராட்டங்களை நடத்தியிருந்தால் சாதாரண ஏழை, எளிய மக்கள் தி.மு.கழகத்தின் செல்வாக்கு வளையத்திற்குள் வருவதை அதனால் தடுத்திருக்க முடியும். ஆனால் இங்கு கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் செயல்பட்டவர்களோ அதனைச் செய்யத்தவறிவிட்டனர். மாபெரும் தலைவர் லெனின் ரஷ்யப் புரட்சியை வெற்றிகரமாகச் சாதித்ததன் மூலம் உழைக்கும் மக்களுக்கு வழங்கிய அரிய படிப்பினையை அவர்கள் எடுத்துப் பின்பற்றத் தவறிவிட்டனர்.

கொடுங்கோலன் ஜாரின் ஆட்சியில் ஒரு பிரிவு முதலாளிகள் உட்பட அனைத்துப் பகுதி மக்களும் உரிமையிழந்தவராக, கொடுங்கோன்மைக்கும் வறுமைக்கும் ஆட்பட்டவராக இருந்தனர். அந்நிலையில் உழைக்கும் வர்க்கத்தின் கட்சியாக லெனினது தலைமையில் இயங்கிய ஆர்.எஸ்.டி.எல்.பி.(போல்ஷ்விக்) கட்சி ஜாரின் ஆட்சிக்கெதிரான மனநிலை கொண்ட அனைத்து சமூகப்பிரிவினருக்கும் தலைமையேற்க வல்லதாக ஆக வேண்டும் என லெனின் விரும்பினார்; அவ்வாறு ஆக என்னென்ன செய்ய வேண்டும் என்பவைகளை வலியுறுத்தினார்.

ஆனால் 1917 பிப்ரவரி புரட்சியின் மூலம் ஜாரின் ஆட்சி அகற்றப்பட்டு அங்கு ரஷ்ய முதலாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே தனது பிரசித்திபெற்ற ஏப்ரல் ஆய்வுரைகள் மூலம் அந்தத் தருணத்திலிருந்து ஆட்சிக்கு வந்துவிட்ட முதலாளிவர்க்கமே உழைக்கும் வர்க்கத்தின் முழு முதல் எதிரியாகிவிட்டது என்பதை உணர்த்தி, சமூகம் சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு வந்துவிட்டது என்பதை அறிவுறுத்தினார்.

ஆனால் இங்கு செயல்பட்ட கம்யூனிஸ்ட்களோ விடுதலைக்குப் பின் இந்தியாவில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த வர்க்கம் இந்திய தேசிய முதலாளி வர்க்கமே என்பதையே பார்க்கத் தவறிவிட்டனர். அவர்களுடைய சமூகமாற்ற திட்டத்தில் தேசிய முதலாளிகளும் நேச சக்திகளாகக் கருதப்பட்டனர். எனவே தியாகங்கள் எத்தனையோ செய்திருந்தும் உரிய சமயத்தில் உறுதியான நிலை எடுக்கத் தவறி குழம்பி ஒரு இடைவெளி கொடுத்ததைப் பயன்படுத்திக் கொண்டு பிராந்திய முதலாளிகளின் ஆதரவுடன் மக்கள் மத்தியில் தி.மு.க. வளரத் தொடங்கியது.

தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மரபினையோ பாரம்பரியத்தையோ கொண்டிராத கட்சியாக, பிராந்திய முதலாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் எல்லாம் தங்களது கொள்கைகளையும் முழக்கங்களையும் மாற்றிக் கொள்ளக் கூடிய கட்சியாகவே அது விளங்கியது. அதனால் அக்கட்சி சமூகத்தில் புது மதிப்புகளை உருவாக்கத் தவறியதோடு இருந்த மதிப்புகளையும் பாழ்படுத்தத் தொடங்கியது. அதற்கு நிலையான கொள்கைகள் கோட்பாடுகள் என்று எதுவுமே இருக்கவில்லை. தனிநாடு கோரிக்கையை முன் வைத்த அக்கட்சி பிராந்திய முதலாளிகளின் முழு ஆதரவு அக்கோரிக்கைக்கு இல்லை என்று தெரிந்தவுடன் அதனைக் கைவிட்டுவிட்டு நாளடைவில் அதனை பிராந்திய முதலாளிகளின் நலனுக்குகந்த வகையில் மாநிலத்தில் சுயஆட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கமாக மாற்றிக் கொண்டது. பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்திய பின் அதில் சமரசம் செய்து கொண்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறிக்கொண்டது. இதுபோல் பல்லில்லாத பகுதறிவு வாதம், ஏழை மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பது போன்ற பாசாங்குத் தனங்களை எந்த வகையான கூச்சநாச்சமுமின்றி செய்து வந்த இக்கட்சி அதுதான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்றும் கூறிக் கொண்டது.
அத்துடன் ஆங்கிலத்தை ஆட்சிமொழி அந்தஸ்திலிருந்து அகற்றி அறிவைக் கட்டுப்படுத்தவும், மாநிலங்களுக்கிடையே பூசல்களை உருவாக்கி மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவும், மத்திய அரசு கொண்டு வந்த இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு பங்கினையும் ஆற்றாததையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தி.மு.க. வளரத் தொடங்கியது.
அக்கட்சியின் கொள்கையற்ற போக்கிற்கு முட்டுக் கொடுக்க கலைத்துறையும் முதலாளித்துவப் பிரச்சார சாதனங்களும் பெரிதும் முன்வந்தன. அதனை முழு வீச்சில் அம்பலப்படுத்தத் தேவையான முழுமை பெற்ற மார்க்சிய அறிவும் அதனை சுயமாகப் பொருத்திப் பார்க்கும் திறனும் கொண்டதாக அன்றைய கம்யூனிஸ இயக்கம் தமிழகத்தில் இல்லை. அது தி.மு.க.விற்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது.

மூடிமறைப்பதைவிட திசை திருப்புவது எளிது

வர்க்கங்களால் பிளவுபட்டுள்ள ஒரு சமூக அமைப்பில் எத்தனை மூடி மறைத்தாலும் வர்க்கச் சுரண்டலையும் அது உழைப்பாளி மக்களிடையே உருவாக்கும் வேதனையையும் முற்றாக மூடி மறைக்க முடியாது. அவ்வாறு மூடி மறைக்க முயல்வதைக் காட்டிலும் அதனைத் திசை திருப்பி விடுவது எளிதென்று உணர்ந்து கொண்ட தி.மு.க.வினர் பிற்பட்டோர் நலன் என்ற பெயரில் ஜாதிய வாதத்தை உருவாக்கி வளர்த்துவிட்டனர். அதிலும் குறிப்பாக போர்க்குணம் மிக்க பிற்பட்ட வகுப்பினர் என்று கருதப்படும் ஜாதியினரைத் தங்களது அடிப்படை ஆதரவாளர்களாக ஆக்கிக் கொண்டனர்.

ஆண்டாண்டு காலமாக ஜாதியக் கட்டமைப்பில் அதன் உச்சத்தில் இருந்த பிராமணர்களை எதிர்க்கும் முழக்கங்களை முன்வைத்து இத்தகைய ஜாதியவாதத்திற்கு அவர்கள் வலுச்சேர்த்துக் கொண்டனர்.

பணம்தான் அனைத்தும் என்பதே முதலாளித்துவக் கண்ணோட்டம். பணம் வைத்திருந்தால் அது எந்தவகை சமூக மரியாதையையும் பெற்றுத் தந்துவிடும் என்ற சூழ்நிலையை அது உருவாக்கிவிடும். அச்சூழ்நிலையில் நிலவுடமை சமூக அமைப்பின் மேல்கட்டுமானமான ஜாதியக் கட்டமைப்பு அதன் சமூகப் பொருத்தத்தை முற்றாக இழந்துவிடும் இன்றையநிலையில் போர்க்குணமிக்க பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் ஜாதியக் கட்டமைப்பின் உச்சத்தில் உள்ளவர்கள் என்று கருதப்படும் பிராமணர்களில் முன்னேறியவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஜாதியம் சமூகப் பொருத்தத்தை இழந்துள்ளதையே இது தெளிவாகப் புலப்படுத்துகிறது. ஏனெனில் இன்று சம்பாதிப்பதற்கு பெரிய அளவில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் தொழில்கள் அரசியல், அரசுக் கட்டுமான வேலைகளுக்காக ஒப்பந்தம் எடுத்தல் போன்றவையே. அதுபோன்ற சட்ட ரீதியான வேலைகளிலும் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து கள்ளச் சாராயம் போன்ற சட்ட விரோத வேலைகளிலும் ஈடுபட்டுச் சம்பாதிக்கும் வாய்ப்பு பிராமணர்களைக் காட்டிலும் போர்க்குணம்மிக்க பின்தங்கிய வகுப்பினருக்கே அதிகம் உள்ளது. வேறு தொழில்களைக் காட்டிலும் இந்தத் தொழில்களே கூடுதல் சம்பாத்தியத்தை ஈட்டித் தருபவையாக உள்ளன.

நிலவும் யதார்த்த சூழ்நிலை இதுவாக இருக்கும் நிலையில் செத்த பாம்பை சினம் தீர அடிப்பதைப் போல் தி.மு.கழகமும் அதன் தலைவர்களும் தேவைப்படும் போதெல்லாம் பிராமண எதிர்ப்பு முழக்கத்தை உரத்தக் குரலில் எழுப்பி ஒரு பொய்யைத் திரும்பத்திரும்பக் கூறி அதனை மெய்யயன நிரூபிப்பதில் கவனமாக இருந்தனர். அதாவது ஒரு பாசிஸ யுக்தியைக் திறமையாகக் கையாண்டனர். இந்தப் பின்னணியில்தான் கல்வியில் சிறந்து விளங்கிய தமிழகத்தில் வளர்ந்திருந்த தாராளவாத விஞ்ஞானப் பூர்வ மனிதாபிமான மதிப்புகள் அனைத்தும் கூச்ச நாச்சமற்ற சுய விளம்பரம், பாஸிசத்தன்மை வாய்ந்த பொய்ப் பிரச்சாரங்கள், அர்த்தமற்ற அடுக்குமொழி சொல்லாடல்கள் ஆகியவற்றின் மூலம் திசை திருப்பப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் தங்கள் பலத்தையும், கருத்து வளத்தையும் கொண்டு அக்கட்சி வளரவில்லை. கம்யூனிஸ்டுகளின் பலவீனத்தைக் கொண்டு அது வளர்ந்தது. தி.மு.கழகம் ஆரம்பிக்கபட்ட காலத்தில் அதில் இருந்த தலைவர்கள் எல்லாம் இவ்வாறு ஒரு மோசமான அமைப்பை சுயலாபத்திற்காக உருவாக்குகிறோம் என அறிந்தே இதைச் செய்தார்கள் என்பதில்லை. சமூகத்தின் அடிப்படை முரண்பாட்டைப் புரியாத பல நல்லவர்களும் கூட தி.மு.க. கூறும் வழிமுறைகள் மூலம் தமிழ்ச் சமூகத்தை முன்னேற்ற முடியும் என்ற எண்ணத்திலும் அக்கட்சியில் இருந்தனர். அவர்களில் பலர் நாளடைவில் அக்கட்சி எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதையறிந்து ஒதுங்கிவிட்டனர்.

முதன்மை பெற்ற சுயவிளம்பரக் கலாச்சாரம்

இவ்வாறு வளர்ச்சியடைந்து அக்கட்சி ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த பின்பு அதனுடைய பின்பலமாக போர்க்குணமிக்க பிற்பட்ட வகுப்பிலிருந்து தோன்றிய உடைமை வர்க்கங்கள் ஆகிவிட்டன. வர்க்கப் போராட்டம் யாராலும் முன்கையயடுத்து முழு முயற்சியுடன் கட்டப்படாததால் அவ்வகுப்பினைச் சேர்ந்த உணர்வற்ற உழைக்கும் மக்களில் பலரும் அக்கட்சியின் வாக்கு வங்கியாக தேர்தல் அரசியலில் ஆகிவிட்டனர். பார்த்தறிய முடியாத பழம்பெருமை, புதுமை என்ற பெயரில் வலம்வரும் வெற்றுப் பகட்டு இவ்விரண்டையும் அக்கட்சியினர் தங்களுடைய நலனுக்காகப் பயன்படுத்தி, சுயவிளம்பரத்தைக் கூச்சமின்றிப் பரவலாகச் செய்வதன் மூலமே தங்கள் செல்வாக்கைப் பராமரிக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்கினர். பழைய மன்னராட்சிக் காலத்தைப் போல இலக்கியவாதிகள் கலைஞர்கள் போன்றவர் அனைவருக்கும் அவர்கள் எந்த அளவிற்கு தங்களுக்குச் சாதகமாக இச்சகம் பாடுகிறார்கள் என்ற அடிப்படையில் விருதுகள் வழங்குவது போன்ற போக்குகள் ஊக்குவிக்கப்பட்டன.

இந்த பின்னணியில் ஒரு நாசகரமான சூழ்நிலையை அதாவது இந்தியாவில் பொய் கூறுவதை எந்தவகையான மன உறுத்தலும், எதிர்ப்புமின்றி எங்கேனும் எளிதாகச் செய்ய முடியுமென்றால் அவ்வாறு செய்ய முடிந்த இடங்களில் தமிழகமும் ஒன்றாக நிச்சயம் இருக்கும் என்ற சூழ்நிலையை அக்கட்சி உருவாக்கிவிட்டது. தங்களுக்குள்ளேயே ஒருவருக்கு மற்றொருவர் பட்டங்கள் கொடுத்துக் கொள்வது அது தகுதி அடிப்படையில் பெறப்பட்டது போன்ற பொய்த் தோற்றத்தை இடைவிடாத விளம்பரம் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் ஏற்படுத்துவது போன்ற போக்குகள் சகிக்க முடியாத அளவிற்கு வளர்ந்ததும் இந்தப் பின்னணியில்தான்.

இதையயல்லாம் கண்ட சிந்திக்கும் பகுதியைச் சேர்ந்த மக்களும் இது ஒரு தனி உலகம். இங்கு எது வேண்டுமானாலும் நடக்கும். இந்த இரும்படிக்கும் இடத்தில் நம்மைப் போன்ற ஈக்களுக்கு வேலையில்லை என்று ஒதுங்கத் தொடங்கினர். அது தங்கு தடையின்றி இது போன்ற வேலைகளில் ஈடுபடுவதை அவர்களுக்கு மிக மிக எளிதாக்கிவிட்டது. நாம் விரும்புகிறோமோ விரும்பவில்லையோ இது ஒரு சமூகத் தாக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது. மற்ற கட்சிகளையும் இது பற்றிக் கொண்டு தமிழக அரசியலே இதுதான் என்றாக்கிவிட்டது. ‘தேன் பானையில் கையைவிட்டவன் தலையில் தடவிக் கொள்ளமாட்டான்’ என்பது போன்ற சைத்தானின் வேதம் ஓதுதல்களில் தொடங்கி, இன்று ‘அரசியல் என்பது சம்பாதிப்பதற்காகத்தான்’ என்பது தத்ரூபமாக நிலை நாட்டப்பட்டுவிட்டது. அடுத்த கட்டமாகச் சம்பாதிக்க வாய்ப்பளிக்கும் அரசியலில் இருக்க அப்பணத்தில் ஒரு பகுதியை தங்களது சுயவிளம்பரத்தில் தொடங்கி வாக்கிற்குப் பணம் கொடுப்பது வரை செலவிடுவது என்ற புது நியதியும் இவர்களால் உருவாக்கப்பட்டுவிட்டது.

பல்லிளிக்கும் பணக்காரத்தனமும் பாசிஸமும்

அதனால் இருவகைப் பலன்கள் இதனைச் செய்பவர்களுக்குக் கிட்டுகின்றன. ஒன்று வாக்குகளை எளிதில் பெறுவது. இரண்டு, மக்களை இவர்கள் செய்யும் எந்த முறைகேடுகளையும் கேட்க முடியாதவர்களாக ஆக்குவது. இந்தப் பின்னணியில் தான் பொது வாழ்விலோ, பொது நல எண்ணத்துடனோ இல்லாதவர்கள் கூட பொது இடங்களைத் தங்களின் தனிப்பட்ட விழாக்களுக்காக ஆக்கிரமித்து, வாந்தி வரும் அளவிற்கு வானளாவ அவர்களது குடும்பங்களைப் பற்றி புகழ் பாடும் போக்கு சகஜமாகி விட்டது. இது போன்ற புதுப்பணக்காரக் கூட்டங்கள் இன்று பெரிய கட்சிகளாகக் கருதப்படும் அனைத்துக் கட்சிகளிலும் உள்ளன. இந்தப்போக்கு மார்க்சிய அறிஞர் டி.டி.கொசாம்பி அவர்கள் கூறுவது போல் ‘பல்லிளிக்கும் புதுப்பணக்கார கொச்சைத்தனம்’ மட்டுமல்ல; மறைமுகமாக சாதாரண மக்களை அச்சுறுத்தும் ஒரு பாசிஸப் போக்கும் ஆகும். இதனைத் தங்கு தடையேதுமின்றிச் செய்ய ஊழல் மலிந்து போன அரசு நிர்வாகமும் உதவி செய்கிறது.

இந்த அம்சங்களை வைத்து தமிழர்களையும் தமிழக அரசியல் சமூகப் போக்குகளையும் அகில இந்திய அளவில் ஏளனமாகப் பார்க்கும், எழுதும், பேசும் போக்கு வளர்ந்து வருகிறது. தமிழகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முத்திரை பதித்த பல வாதங்களை முன் வைத்துத் தமிழகத்தின் பெருமையை நிலை நாட்டிய சூழ்நிலை மாறி தமிழக எம்.பிக்கள் என்று ஒரு பகுதியினர் நாடாளுமன்றத்தில் இருக்கும் இடமே தெரியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எந்த இயக்கம் தமிழர் பெருமை, தமிழ்ச் சமூகத்தின் மேன்மை என்று வாய்கிழியக் கூறி வந்ததோ அந்த இயக்கம்தான் இத்தகைய இழிநிலைக்குச் சமூகத்தைத் தள்ளிச் சென்றுள்ளது.

கற்றவர்களின் கையறுநிலை

இன்னும் தமிழகத்தில் கற்றவர்களுக்குப் பஞ்சமில்லை. உயர்ந்த அறிவாளிகளும், சிந்தனையாளர்களும் மிக அதிக எண்ணிக்கையில் நமது மாநிலத்தில் இருக்கவே செய்கின்றனர். ஆனால் அவர்களின் நிலைதான் ஆஸ்ட்ரிச் பறவையைப் போல், காந்தியடிகள் வைத்திருந்த மூன்று குரங்குப் பொம்மைகளைப் போல ஆகிவிட்டன. ஆம். வேறென்ன செய்யமுடியும் என்று அவர்கள் எண்ணுகின்றனர். பிடல் காஸ்ட்ரோவே, செகுவேராவே, மாவோவே என்று இந்தத் தலைவர்களின் பெயர்களை அவர்களைப் பற்றி அறவே தெரியாதவர்கள், அறவே தெரியாத ஒருவருக்கு அடைமொழியாகக் கூறும் போது காதை மூடிக் கொள்வதைத் தவிர அவர்களைப் பற்றி அறிந்தவர்களுக்குச் செய்வதற்கு என்ன இருக்கிறது. அவ்வாறு கூறும் விளம்பரங்களைப் பார்க்கும் போது பார்த்தும் பாராதது போல் செல்வதைத் தவிர இந்நிலையில் இதற்கு எதிராக நம்மால் என்ன செய்ய முடியும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். பாவம் அவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே கூறிக் கொள்வது பக்குவமில்லாத போக்கு என்ற பாரம்பர்யத்தில் வளர்ந்து தொலைத்துவிட்டவர்கள் அல்லவா?

பாசிஸத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்

இங்கு தமிழகத்தில் இப்போது நிலவும் அரசியல் போக்கு பாசிஸக் கலாச்சாரத்தின் பல பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஏழை எளியவர்களை இலவசத் திட்டங்கள், வாக்குக்குப் பணம் கொடுப்பது போன்றவற்றின் மூலமாக வாயடைத்துவிட்டு, படித்த மத்திய தர வர்க்கத்தைப் பயமுறுத்தி பொது வி­யங்களை வெளிப்படையாகப் பேசாமல் தங்களுக்குள் முணுமுணுக்க வைத்துவிட்டு, திட்டவட்டமாக அராஜக ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு போக்காகும் இது. இதனை எதிர்த்துப் போராட இங்குள்ள பெரிய அரசியல் கட்சிகள் எவற்றிற்குமே திராணியில்லாமல் போய்விட்டது. உண்மையான ஜனநாயக வாதிகளும், இடதுசாரி மனநிலை கொண்டோரும் மட்டுமே இதனை எதிர்த்துப் போராட முடியும். இன்று பெரிய கட்சிகள் என்று கருதப்படக்கூடிய அனைத்துக் கட்சிகளிலும் ஜனநாயகப் பூர்வமான மனம் திறந்த விவாதங்களுக்கு வாய்ப்பளிக்கப்படாத தனிநபர் தலைமைகளே நிலைநாட்டப்பட்டுள்ளன. அந்நிலையில் தங்களின் கட்சிக்குள்ளேயே ஜனநாயகத்தைப் பராமரிக்க முடியாதவர்கள் அரசியலில் நிலவும் ஜனநாயக விரோதப் பாசிஸப் போக்கிற்கு எதிராக எப்படிக் கிளர்ந்தெழ முடியும்?

அதைப் போல் அடிப்படையான சமுதாய மாற்றக் கருத்தை வலியுறுத்தாது சில சீர்திருத்தங்கள் மூலம் சமூகத்தைச் சரிசெய்துவிடலாம் என்ற எண்ணப் போக்கோடு இருப்பவர்களாலும் வளர்ந்து வரும் இந்தப் பாசிஸப் போக்கின் கூறுகளை ஆய்ந்து கணித்து அதற்கு எதிராகத் தங்களது அணிகளைத் தேவைப்படும் போர்க்குணத்தோடு தயார் செய்ய முடியாது. அதனால்தான் வளர்ந்து வரும் இப்போக்கின் மீதான இடதுசாரிக் கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கட்சிகளின் எதிர்ப்பு அப்போது அவர்கள் யாருடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர் என்பதைப் பொறுத்தே அமைகிறது. துரதிஷ்டவசமாக சில சட்ட, நாடாளுமன்ற இடங்களுக்காக இத்தகைய பாசிஸ சக்திகளுடனான கூட்டணியில் அவர்கள் இருந்தால் அப்போது இந்தப் போக்கிற்கெதிராக அவர்கள் மூச்சுக்கூடவிடமாட்டார்கள் அல்லவா? அதைத்தான் அவர்கள் செய்து கொண்டுள்ளனர்.


அரசியல் வாதிகளின் வேலை மட்டுமல்ல

ஆனால் இதனை உணர்ந்த உணர்வு பெற்ற பொதுமக்களும் இது அரசியல் வாதிகளின் வேலை, நம்மை இது ஒன்றும் பாதிக்கப் போவதில்லை என்று இருந்து விடுகிறார்கள். அவ்வாறு இருப்பது பெரும் தவறு. ஏனெனில் இந்த நிலை வளர்ந்துள்ளதன் விளைவாக உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ஒதுக்கப்படுவதில் கால் பகுதி கூட செலவிடப்படாமல் முக்கால் பகுதிக்கு மேல் அதிகாரவர்க்கம், அரசியல்வாதி, ஒப்பந்தக்காரர் கூட்டத்தினரால் கபளீகரம் செய்யப்படுகிறது. அலுவலகங்களில் சிபாரிசுகள் இன்றி பணிமாற்றம் உட்பட எதுவும் நடக்காது என்ற நிலை உருவாகியுள்ளது. பணம் இல்லாமல் சிபாரிசு கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டு அது கீழ் மட்ட அளவுகளிலும் ஊழல் மலியும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.தோன்றியுள்ள இச்சூழ்நிலை மூச்சுமுட்டக் கூடியதாக இருந்தபோதிலும் இது என்றென்றும் நின்று நிலவப்போவதல்ல.

சமூகமாற்றத்தைக் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றவல்ல உழைக்கும் வர்க்கத்தை என்றென்றும் இலவசத் திட்டங்கள் மூலம் மயக்கத்தில் வைத்திருக்க முடியாது. தோன்றியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி அரசின் வருவாயைக் குறைத்து இலவசத் திட்டங்களைத் திரும்பப் பெறும் பாதையில் அதனை நிறுத்தத் தொடங்கியுள்ளது. இலவசத் திட்டங்கள் நிறுத்தப் பட்டால் தோன்றும் பொருளாதார நெருக்கடி அதாகவே மக்களை இயக்கப் பாதையை நோக்கித் திருப்பிவிடும் என்பதல்ல.
மேலும் இலவசத் திட்டங்கள் நிறுத்தப்படட்டும். பிரச்னைகள் உருவாகட்டும். அதுவரை இத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டிருப்போம் என்பதும் சரியானதல்ல. எந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் தமிழ்ச் சமூகத்திற்கு பல ஜனநாயக மதிப்புகளை வழங்கி அதனை உன்னத உயரத்தில் நிறுத்தியதோ, அதைக் காட்டிலும் உன்னதமான, உயர்ந்த சோசலிச மனிதாபிமான மதிப்புகளை உருவாக்கவல்ல சமூகத்தின் அடிப்படை மாற்றத்தை வலியுறுத்தும் மகத்தான கம்யூனிஸ்ட் இயக்கமே இந்தப் பொய்மையையும், பிணந்தின்னும் நியதிகளையும் சாஸ்வதம் போல் கருதச் செய்துவிட்ட இன்றைய சூழலையும் மாற்றும். அத்தகைய அரசியலை நாம் செய்தாக வேண்டும்.

அது முறைகேடான வழிகளில் சுரண்டிப் பணம் சேர்க்கும் ஒட்டுண்ணிகளுக்கு எதிரானதாக அடிப்படையில் இருக்க வேண்டும். ஏனெனில் அதுதான் இத்தனை சீரழிவுகளுக்கும் ஊற்றுக்கண். அதனை எதிர்த்து உழைக்கும் மக்களுடன் மக்களாக வாழ்ந்து அவர்களைத் திரட்டி அவர்களது சமூகப் பாத்திரத்தை உணர்த்தி செய்யப்படும் அரசியலாக அதாவது அது உண்மையான மார்க்சிய அரசியலாக இருக்க வேண்டும். அத்தகைய அரசியலின் மீது ஒரு குறைந்த பட்ச நம்பிக்கையை உருவாக்குவதில் நாம் வெற்றி பெற்றுவிட்டால் கூட, அதற்கான ஆதரவு குறைவின்றி மக்கள் மத்தியிலிருந்து வரவே செய்யும். ஏனெனில் உணர்வுள்ள மக்கள் இந்த நிலையைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பேசாமலிருக்கவில்லை. இதற்கு எதிராக அவர்கள் அடி மனதில் குமுறிக் கொண்டே உள்ளனர். ஒரு குறைந்தபட்ச நம்பிக்கையை நாம் கொடுக்க முடிந்தால் போதும். இந்தப் பாசிஸப் போக்கிற்கெதிரான தீர்மானகரமான போராட்டத்தை அவர்களின் துணையோடு நாம் நிச்சயம் தட்டயயழுப்ப முடியும். தமிழகத்தைச் சூழ்ந்துள்ள இந்தக் கலாச்சாரச் சீரழிவிலிருந்து அதனை மீட்டெடுக்கவும் முடியும்.